Published:Updated:

தேர்தலுக்குத்தான் புதுசு... அரசியலுக்கு அல்ல! குஷ்புவை வென்ற மருத்துவர் நா.எழிலன்! #TNelections2021

மருத்துவர் நா.எழிலன்
மருத்துவர் நா.எழிலன்

கருணாநிதி ஆட்சிக் காலத்தில் திட்டக்குழு உறுப்பினராக இருந்த நாகநாதனின் மகன்தான் எழிலன். 10 ஆண்டுகளுக்கும் மேலாக, கருணாநிதியின் தனி மருத்துவராக இருந்திருக்கிறார் எழிலன்.

திமுக தலைமைக்கு நெருக்கமான வேட்பாளர். டாக்டராக மட்டுமன்றி சமூக செயற்பாட்டாளராகவும் அறியப்படும் நா.எழிலனும், பாஜக சார்பில் நடிகை குஷ்புவும் போட்டியிட்ட ஆயிரம் விளக்கு தொகுதி, 2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, மீண்டும் நட்சத்திரத் தொகுதி அடையாளத்தைப் பெற்றது. ஆயிரம் விளக்கு தொகுதியில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் ஒன்பது முறை திமுகவும், நான்கு முறை அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன.

1989, 1996, 2001 மற்றும் 2006-ம்ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் ஆயிரம் விளக்கு தொகுதியில் இருந்துதான் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கு.க.செல்வம், தற்போது பாஜக-வில் இணைந்துள்ளார். இந்த முறை ஆயிரம் விளக்குத் தொகுதியில் போட்டியிட கட்சிக்குள் பலர் முயன்றனர். திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவரான ஜின்னாவும் தொகுதியைப் பெற முட்டி மோதினார். ஆனாலும், வாய்ப்பு டாக்டர் எழிலனுக்கே கிடைத்தது.

குஷ்பு
குஷ்பு

தேர்தலில் போட்டியிடுவதுதான் எழிலனுக்குப் புதிதே தவிர, அரசியலுக்கு அவர் புதுமுகம் அல்ல. சமூகநீதி, ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுப்பது என இயங்கிவந்த எழிலன், மார்ச் 7-ம் தேதி திருச்சியில் நடந்த தி.மு.க மாநில மாநாட்டில் மருத்துவம் சார்ந்து ஆற்றிய உரை கவனம் ஈர்ப்பதாக இருந்தது. கருணாநிதி ஆட்சிக்காலத்தில் திட்டக்குழு உறுப்பினராக இருந்த நாகநாதனின் மகன்தான் எழிலன். 10 ஆண்டுகளுக்கும் மேலாக, கருணாநிதியின் தனி மருத்துவராக இருந்திருக்கிறார் எழிலன். இப்போது ஸ்டாலினுக்கும் இவர்தான் தனி மருத்துவர் என்பதால், தொகுதியில் திமுக-வினர் பம்பரமாகத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இந்தத் தேர்தலில் எழிலனை எதிர்த்து பாஜக சார்பில் பிரபல நடிகை குஷ்பு, நாம் தமிழர் கட்சி சார்பில் ஏ.ஜே.செரின், மக்கள் நீதி மய்யம் சார்பில் கே.எம்.செரிப், அமமுக சார்பில் என்.வைத்தியநாதன் ஆகியோர் போட்டியிட்டனர். இருப்பினும் கடும் போட்டி என்னவோ எழிலனுக்கும் நடிகை குஷ்புவுக்கும் இடையேதான் காணப்பட்டது.

கள நிலவரம் இப்படியிருந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்திலிருந்தே எழிலன் முன்னிலையில் இருந்தார். போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்த்த நிலையில் எழிலன் தொடர்ந்து முன்னிலையிலேயே இருந்தார். தொடர்ச்சியாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 32,462 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் குஷ்புவை வீழ்த்தி எழிலன் வெற்றிபெற்றார். கலைஞரின் தனி மருத்துவரான எழிலன், தான் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்றுள்ளார் . பொதுத்தளத்தில் அறிவார்ந்த நபராகப் பார்க்கப்படும் எழிலன் சுகாதாரத்துறை அமைச்சராக நியம்பிக்கப்பட வாய்ப்புள்ளதாக இப்போதே பேச்சு அடிபடத் தொடங்கியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு