Published:Updated:

பழங்குடியிலிருந்து முதல் குடிமகள்?

திரௌபதி முர்மு
பிரீமியம் ஸ்டோரி
திரௌபதி முர்மு

ஒடிசாவின் பெருமிதத் தருணமாகக் கருதி நவீன் பட்நாயக் ஆதரவு தெரிவித்துவிட்டார். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியும் ஆதரவு தெரிவிக்க, முர்முவின் வெற்றி உறுதியாகியுள்ளது.

பழங்குடியிலிருந்து முதல் குடிமகள்?

ஒடிசாவின் பெருமிதத் தருணமாகக் கருதி நவீன் பட்நாயக் ஆதரவு தெரிவித்துவிட்டார். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியும் ஆதரவு தெரிவிக்க, முர்முவின் வெற்றி உறுதியாகியுள்ளது.

Published:Updated:
திரௌபதி முர்மு
பிரீமியம் ஸ்டோரி
திரௌபதி முர்மு

ஒடிசா மாநிலத்தின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் இருக்கும் உபர்பேடா என்ற குக்கிராமத்தில் 14 வீடுகள் மட்டுமே இருக்கும் ஒரு குடிசைப்பகுதிக்கு அவசர அவசரமாக மின் இணைப்பு தந்து கொண்டிருக்கிறார்கள் அதிகாரிகள். இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகும் நிலையில், இந்தப் பகுதிக்கு இன்னமும் மின்சார வசதி கிடைக்கவில்லை. மண்ணெண்ணெய் விளக்கின் ஒளியில்தான் மக்கள் வாழ்ந்துவந்தார்கள். எத்தனையோ நவீன மின்சாதனங்கள் வந்தபிறகும் எதையும் பயன்படுத்த முடியாத வாழ்க்கை. செல்போனை மட்டும் பக்கத்துக் குடியிருப்புக்கு எடுத்துச் சென்று சார்ஜ் போடுவார்கள்.

இந்த 14 வீடுகளுக்கு இப்போது மின் இணைப்பு கிடைக்கக் காரணம், இவற்றில் ஒரு வீட்டில் பிறந்த திரௌபதி முர்மு இப்போது ஜனாதிபதி வேட்பாளர் ஆகியிருப்பதுதான்! பழங்குடி மக்கள் அதிகம் வாழும் ஒடிசாவின் பின்தங்கிய மாவட்டம் மயூர்பஞ்ச். இன்னமும்கூட 1,350 குக்கிராமங்கள் இங்கு மின்வசதி பெறாமல் இருப்பதாகத் தகவல். வனப்பகுதிகளில் மக்கள் வீடுகட்டி வசிப்பதால், சட்டச்சிக்கல் காரணமாக மின் இணைப்பு தர முடியவில்லை என்று அரசு காரணம் சொல்கிறது. திரௌபதி முர்மு தனது பூர்வீக கிராமமான உபர்பேடாவில் வசிக்கவில்லை. 20 கி.மீ தூரத்தில் இருக்கும் ராய்ரங்பூர் நகரில் அவர் குடியேறிப் பல ஆண்டுகள் ஆகின்றன. எப்படிப்பட்ட பின்னணியிலிருந்து அவர் இந்த உயரத்துக்கு வந்திருக்கிறார் என்பதை இந்தத் தகவல்களே உணர்த்தும்.

திரௌபதி முர்மு
திரௌபதி முர்மு

ஆசிரியை பணியைச் சில ஆண்டுகள் செய்து, அதன்பின் அரசியல் ஆர்வம் வந்து பா.ஜ.க-வில் சேர்ந்தவர் முர்மு. ராய்ரங்பூர் நகராட்சி கவுன்சிலராக அரசியல் வாழ்வைத் தொடங்கி, அதன்பின் சட்டமன்ற உறுப்பினராகி இரண்டு முறை ஒடிசா அமைச்சராகப் பதவி வகித்திருக்கிறார். கவர்னர் பதவி வரை சென்றுவிட்டு கடந்த ஓராண்டாக அரசியல் அடையாளம் இல்லாமல் ஒதுங்கி வாழ்ந்தவருக்கு இந்த வாய்ப்பு தேடி வந்திருக்கிறது.

பழங்குடி மக்கள் அதிகம் வாழும் ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து உயர்வகுப்பைச் சேர்ந்த யஷ்வந்த் சின்ஹாவைப் பொது வேட்பாளராக எதிர்க்கட்சிகள் நிறுத்தியுள்ளன. அவருக்கு எதிராக பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை பா.ஜ.க கூட்டணி நிறுத்தியுள்ளது மாஸ்டர் ஸ்ட்ரோக் எனப்படுகிறது. திரௌபதி முர்மு ஜெயிப்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எத்தனை கட்சிகள் அணிமாறி அவரை ஆதரிக்கப் போகின்றன, எத்தனை வாக்கு வித்தியாசத்தில் அவர் ஜெயிக்கப்போகிறார் என்பவை மட்டுமே கேள்வி.

இந்த முறை ஜனாதிபதி தேர்தலில் வித்தியாசமான அணுகுமுறையை பா.ஜ.க கையாண்டது. அதிக வாக்குகள் அந்தக் கூட்டணிக்கு இருந்தாலும், தங்கள் வேட்பாளரை வெற்றிபெறச் செய்வதற்குப் போதுமான வாக்குகள் இல்லை. கூட்டணியிலிருந்து பல கட்சிகள் வெளியேறியிருந்த நிலையில், கூட்டணியில் மிச்சமிருக்கும் மிகப்பெரிய கட்சியான ஐக்கிய ஜனதா தளம் மதில் மேல் பூனை மனநிலையில் இருந்தது. அந்தக் கட்சித் தலைவர்கள் சிலரே, ‘நிதிஷ்குமார் ஜனாதிபதி பதவிக்குப் பொருத்தமானவர்' என்றெல்லாம் பேசிவந்தனர்.

பழங்குடியிலிருந்து முதல் குடிமகள்?

எனவே, பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவும், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கும் எதிர்க்கட்சிகளிடம் பேசினர். எல்லோருக்கும் இணக்கமான பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான முயற்சியாக அது இருந்தது. ‘‘உங்களின் வேட்பாளர் யார்?'' என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரிடம் அவர்கள் கேட்டாலும், தங்கள் வேட்பாளர் யார் என்பதை வெளிப்படையாகச் சொல்லவில்லை.

பா.ஜ.க தரப்பில் சுமார் 20 பேரின் பெயர்களை அந்த நேரத்தில் பரிசீலனை செய்து வந்தார்கள். அந்த 20 பேரில் திரௌபதி முர்மு பெயர் முதல் வரிசையில் இருந்தது. கடந்த முறையே அவர் பெயர் அடிபட்டது. அப்போது உத்தரப் பிரதேசத்திலிருந்து ஒருவரை ஜனாதிபதி ஆக்குவது என்று முடிவெடுத்ததால், ராம்நாத் கோவிந்த் தேர்வானார். ‘இம்முறை திரௌபதியை நிறுத்தினால், ஒடிசாவிலிருந்து பிஜு ஜனதா தளத்தின் ஆதரவு கிடைக்கும். சிக்கல் இல்லாமல் நம் வேட்பாளரை ஜெயிக்க வைக்கலாம்' என்று பா.ஜ.க தலைவர்கள் தீர்மானித்தனர். இதைத் தொடர்ந்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கிடம் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அதன்பிறகே திரௌபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டைக் கொண்டாடும் நேரத்தில் முதல்முறையாக பழங்குடி இனத்திலிருந்து ஒரு பெண்மணி குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியேறும் சூழல் வாய்த்திருக்கிறது. ஜனாதிபதி ஆக இருக்கும் இரண்டாவது பெண், ஒடிசாவிலிருந்து ஜனாதிபதி ஆகும் முதல் பெண்மணி ஆகிய பெருமைகளுடன் இன்னொரு தனித்துவமும் முர்முவுக்கு இருக்கிறது. இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு பிறந்து ஜனாதிபதி ஆகவிருக்கும் முதல் நபரும் இவர்தான். முர்முவுக்கு இப்போது 64 வயது ஆகிறது.

எதிர்பார்த்தது போலவே இதை ஒடிசாவின் பெருமிதத் தருணமாகக் கருதி நவீன் பட்நாயக் ஆதரவு தெரிவித்துவிட்டார். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியும் ஆதரவு தெரிவிக்க, முர்முவின் வெற்றி உறுதியாகியுள்ளது. ‘பழங்குடி இனத்திலிருந்து முதல்முறையாக ஒரு வேட்பாளர் நிறுத்தப்படும்போது அவரை எதிர்க்கலாமா' என்ற சலனத்தையும் எதிர்க்கட்சிகள் மத்தியில் இது உருவாக்கியுள்ளது.

பழங்குடியிலிருந்து முதல் குடிமகள்?

ஜார்க்கண்ட் மாநிலத்தின் கவர்னராக ஏற்கெனவே இருந்தவர் திரௌபதி முர்மு. ஒடிசாவிலிருந்து கவர்னர் பொறுப்புக்குச் சென்ற முதல் பெண் இவர்தான். ஜார்க்கண்ட் மாநிலத்தில் முழுமையான பதவிக்காலம் வரை பதவி வகித்த ஒரே கவர்னரும் இவர்தான். வழக்கமான கவர்னர்கள் போல இல்லாமல், அரசியலுக்கு அப்பாற்பட்டவராக முர்மு நடந்துகொண்டார். அவர் கவர்னராக இருந்தபோது அங்கு அதிகாரத்தில் இருந்தது பா.ஜ.க அரசுதான். பழங்குடியினர் நில உரிமை தொடர்பான பழைய சட்டங்கள் இரண்டில் அந்த அரசு திருத்தங்கள் கொண்டுவந்தது. சோட்டா நாக்பூர் குடியுரிமைதாரர் சட்டம், சந்தால் பர்கானா குடியுரிமைதாரர் சட்டம் ஆகிய இரண்டிலும் செய்த அந்தத் திருத்தங்களின்படி, பழங்குடியினர் வசமிருக்கும் நிலங்களை விவசாயப் பயன்பாட்டிலிருந்து வணிகப் பயன்பாட்டுக்கு மாற்ற முடியும். பிரிட்டிஷ் காலத்தில் தங்கள் உரிமையைப் போராடி வாங்கிய பழங்குடி மக்கள் மத்தியில் இந்தச் சட்டத் திருத்தங்கள் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தின. பழங்குடியினர் நில உரிமைக்கு எதிரான இந்த இரண்டு சட்டங்களிலும் கையெழுத்திட மறுத்துத் திருப்பி அனுப்பினார் திரௌபதி முர்மு. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் ஹேமந்த் சோரன் இந்த முடிவைப் பெரிதும் பாராட்டினார். இப்போது அவர்தான் ஜார்க்கண்ட் முதல்வர். எதிர்க்கட்சிகள் இணைந்து யஷ்வந்த் சின்ஹாவை வேட்பாளராக அறிவித்த கூட்டத்தில் அவரும் இருந்தார். ஆனால், இப்போது திரௌபதி முர்முவை எதிர்ப்பதா என்ற சங்கடத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா இருக்கிறது. இதேபோல காங்கிரஸ் கூட்டணியில் முன்பு இருந்த, குஜராத் மற்றும் ராஜஸ்தானில் சில எம்.எல்.ஏ-க்களை வைத்திருக்கும் பாரதிய ட்ரைபல் பார்ட்டி என்ற பழங்குடியினர் கட்சியும் இப்போது யோசனையில் இருக்கிறது.

திரௌபதி முர்முவை ஜனாதிபதி பதவியில் அமர்த்துவதில் அரசியல் கணக்குகளும் இல்லாமலில்லை. இந்த ஆண்டு டிசம்பரில் குஜராத்திலும், அடுத்த ஆண்டு ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரிலும் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த நான்கு மாநிலங்களிலும் 128 தொகுதிகள் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த முறை இந்த 128 தொகுதிகளில் வெறும் 35 தொகுதிகளில் மட்டுமே பா.ஜ.க ஜெயிக்க முடிந்தது. பழங்குடி இனத்தவர் ஒருவரை முதல்முறையாக ஜனாதிபதி நாற்காலியில் அமர்த்திய கட்சி என்ற பெருமையுடன் பழங்குடியினர் வாக்குகளைப் பெற்று இந்த வரலாற்றை மாற்ற முடியும் என்று நம்புகிறது பா.ஜ.க. ‘அது நிகழ்ந்தால், காங்கிரஸ் வசம் மிச்சமிருக்கும் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் அரசுகளையும் வீழ்த்த முடியும். காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத இந்தியாவும் சாத்தியமாகிவிடும்' என்பதே பா.ஜ.க தலைவர்களின் கணக்கு.

இந்தக் கணக்குகளைத் தாண்டி ஜனாதிபதி தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.