Published:Updated:

கொடநாடு: `யாரிடமும் அனுமதி வாங்கவில்லை!’ - மூன்று நாள்களாகப் பறக்கும் மர்ம ட்ரோன்கள்

கொடநாடு எஸ்டேட் பங்களா
கொடநாடு எஸ்டேட் பங்களா

எந்த அனுமதியும் இல்லாமல் கடந்த மூன்று நாள்களாகக் கொடநாடு எஸ்டேட் மீது ட்ரோன்கள் பறப்பதாக எஸ்டேட் நிர்வாகம் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழக அரசியல் வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாத இடமாக இருக்கும் கொடநாடு, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரின் தோழி சசிகலா ஆகியோரின் கட்டுப்பாட்டுக்கு வந்த நாள் முதல் தற்போதுவரை வெளி ஆட்கள் யாரும் எட்டிக்கூட பார்க்க முடியாத மர்மக் கோட்டையாகவே இருந்துவருகிறது. கொடநாடு வழக்கு விசாரணை தற்போது மீண்டும் வேகமெடுத்திருக்கும் பரபரப்பான இந்தச் சூழலில், ஒட்டுமொத்த மக்களின் பார்வையும் கொடநாட்டின் மீது திரும்பியுள்ளது.

கொடநாடு
கொடநாடு

பல சர்ச்சைகளைக் கிளப்பிவரும் கொடநாடு வழக்கைப்போலவே, கொடநாடு எஸ்டேட் நிர்வாகம் மீதும் தற்போது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. மாயாற்றுக்குச் செல்லும் நீரோடை மறிப்பு, வனத்துறை மற்றும் வருவாய்துறை நில ஆக்கிரமிப்பு, அண்ணா நகர், காமராஜ் நகர் கிராம மக்கள் பயன்படுத்திவந்த சாலைக்குத் தடை விதித்தது போன்ற பல அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளன.

`சத்தியமூர்த்தியை விசாரித்தீர்களா?' - கொடநாடு எஸ்டேட்  விவகாரத்தில் அடுத்தது என்ன?

சொத்துக்குவிப்பு வழக்கின் கீழ் வரும் இந்த கொடநாடு எஸ்டேட் வரவு செலவு கணக்குகள் அனைத்தும் வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும், நிர்வாகத்தில் எந்த மாற்றமும் இல்லை. இன்றளவும் வெளியாட்கள் யாரும் நெருங்க முடியாத வகையிலேயே இருக்கிறது. 24 மணி நேரமும் அதீத பாதுகாப்புடன் இருக்கும் இந்த எஸ்டேட் மீது கடந்த மூன்று நாள்களாக மர்மமாக ட்ரோன் கேமராக்கள் பறப்பதாக எஸ்டேட் நிர்வாகம் தரப்பில், சோலூர் மட்டம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

கொடநாடு
கொடநாடு

ட்ரோன் விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய விவரம் அறிந்த காவலர் ஒருவர், ``எங்களோட எந்த அனுமதியும் இல்லாம யாரோ சிலர் ரகசியமா எங்க எஸ்டேட் மேலே ட்ரோன் கேமராவை பறக்கவிட்டு மூணு நாளா படம் பிடிச்சுக்கிட்டு இருக்காங்க. நடவடிக்கை எடுங்கனு’ எஸ்டேட் சூப்பர்வைசர் ராதாகிருஷ்ணன் புகார் கொடுத்திருக்கார். இந்தப் புகாரின் அடிப்படையில விசாரணை நடத்திக்கிட்டு இருக்கோம். யார், என்ன நோக்கத்துக்கு இதைச் செஞ்சிருக்காங்கனு சீக்கிரம் கண்டுபிடிப்போம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு