Published:Updated:

`முதல்வர்கள் பட்டியல்... நீ, என்றும் எடுபிடி எடுபிடி எடுபிடி!’ - நிர்வாகிகள் கூட்டத்தில் ராமதாஸ்

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்
News
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ( தே.சிலம்பரசன் )

"ஒட்டுமொத்த வன்னியர்களும் என் பின்னாலே வந்தால் இவை அனைத்தும் மாறும். இந்த ஊமை ஜனங்களுக்காக நான் இறுதிவரை போராடுவேன், பாடுபடுவேன். கோலூன்றி நடந்தாலும் இந்த மக்களுக்காக நான் பாடுபடுவேன். 10.5% இட ஒதுக்கீட்டை நாம் பெற்றே தீருவோம்"

பாமக நிறுவனர் ராமதாஸ், அண்மை மாதங்களாக மாவட்டம்தோறும் சென்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தில் பரபரப்பாகப் பேசிவருகிறார். 'திண்ணைப் பிரசாரம், 60 தொகுதிகளில் வெற்றி' என்பதை மையப்படுத்திப் பேசிவரும் இவர், நேற்று (14.12.2021) விழுப்புரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட பாமக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் தலைமை தாங்கிப் பேசினார்.

அப்போது அவர், "சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் 5,000 பேர் கூடினார்கள், எல்லாம் விடலைப் பசங்கதான். அந்தக் கூட்டத்தை விழுப்புரம் மாவட்டம் விஞ்சிவிடும் என எதிர்பார்த்தேன். ஆனால் இதுவரை நடந்ததிலேயே மிகவும் குறைவான கூட்டம் இங்குதான். உங்களிடையே பேசுவதில் எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. வன்னிய மக்களுக்கு நான் வைத்துள்ள பெயர், 'ஊமை ஜனங்கள்.’ 42 ஆண்டுக்காலமாக இந்த ஊமை ஜனங்களுக்காக நான் பேசிவருகிறேன். ஆனால், இந்த ஊமை ஜனங்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கூட்ட அரங்கு
கூட்ட அரங்கு

'பெரும்பான்மைகள் ஆள வேண்டும், சிறுபான்மையினர் பாதுகாக்கப்பட வேண்டும்' என்பதை நான் பல ஆண்டுகளாகச் சொல்லிவருகிறேன்.

ஆனால், தமிழகத்தின் நிலைமை என்ன? தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலே ஒரே ஒரு கலெக்டர்கூட வன்னியர் கிடையாது. 91 செயலாளர்களில் ஒருவர்கூட வன்னியர் இல்லை, 150 இயக்குநர்களில்... ஐ.பி.எஸ்-ல்... தலா ஐந்து பேர் மட்டுமே வன்னியர்கள். உங்களுக்காகப் போராடிவரும் இந்த ராமதாஸுக்கு எவ்வளவு மனசு நோகும்.... கால், கழுத்து, இடுப்பு வலியோடு இந்த 83 வயதிலேயே ஊமை ஜனங்களான உங்களை நான் பார்க்க வந்ததன் நோக்கம்? 'நமக்கு உரிய பங்கு கிடைக்கவில்லை. அதிகாரத்தில் இல்லை' அதனால்தான் உங்களைப் பார்த்து நிலைமையை எடுத்துக் கூறிப் பேசுவதற்கு வந்திருக்கிறே" என்றவர், இதுவரை விழுப்புரம் நகராட்சியில் தலைவராக இருந்தவர்களின் பெயர்களை வாசித்தார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தொடர்ந்து பேசிய அவர், "ஒரே ஒரு முறை... பாஸ்கர் என்ற வன்னியர் மட்டும் விழுப்புரம் நகரத்தில் சேர்மனாக இருந்தார். இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், 1952-ல் நடைபெற்ற தேர்தலில் 40 இடங்களில் வன்னியர்கள் வெற்றி பெற்றிருந்தார்கள். போதிய அளவிலான படிப்பறிவில்லாத மக்கள் இருந்த காலம்; ரேடியோ, டி.வி., செல்போன் போன்ற வசதிகள் இல்லாத காலம்; அந்தக் காலத்திலேயே 40 எம்.எல்.ஏ-க்களாக வன்னியர்கள் இருந்தார்கள். ஆனால், இந்தக் காலத்தில் நாம் தனியாகத் தேர்தலில் நின்றபோது ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் எத்தனை பேர் வெற்றி பெற்றோம்..!

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்
தே.சிலம்பரசன்

அந்தக் காலத்தில் இருந்த வன்னியர்களின் உணர்வு, வீரம், மானம் எங்கே போனது? சத்திரியர்களுக்கே உண்டான குணங்கலெல்லாம் எங்கே போயின? இவையெல்லாம் விலைக்கு வாங்கக் கூடியவையா..! இல்லை. உடம்பிலும் குணத்திலும் ஊறியவை" என்று பேசிய அவர், தமிழ்நாட்டில் இதுவரை முதலமைச்சராக இருந்தவர்களின் பெயர்களைப் பட்டியலிட்டார். தொடர்ந்து பேசிய அவர், "இந்த முதலமைச்சர்கள் பட்டியலிலே வன்னியனாகிய நீ... என்றும் எடுபிடி... எடுபிடி... எடுபிடி! அந்தக் காலத்திலிருந்து வன்னியனாகிய நீ... எடுபிடிதானே!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த ராமதாஸ் வந்த பின்னர்தானே இப்படி வெள்ளையும் சொள்ளையுமாகச் சட்டை போட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த 42 ஆண்டுகளில், தண்ணீர்விட்டா கட்சியை வளர்த்தோம்..! கண்ணீர்விட்டே வளர்த்தோம். இது அந்த சர்வேஸ்வரனுக்கும் தெரியும். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் நாம் ஒரு கூட்டணியில் இருந்தோம். அவர்களிடம் எங்களுக்கு 'தனி இட ஒதுக்கீடு வேண்டும்' எனக் கேட்டபோது, "ஐயய்யோ... ஐயய்யோ... அதுல கையைவைக்க முடியாது" என்று அன்று ஆண்டவர்கள் சொன்னார்கள். 'வன்னியர்கள் சேத்துல கைவைத்தால்தான், நீங்க சோத்துல கைவைக்க முடியும்' என்று அந்தக் காலத்தில் நாம் சொல்வோம். அதே நிலைமைதான் இப்போதும். 'உங்களால் இட ஒதுக்கீட்டில் கையை வைக்க முடியாது என்றால்... நாங்கள் கூட்டணியில் இல்லை, தனியாக நிற்கிறோம். ஆனால் உங்களுக்கு ஆதரவு அளிக்கிறோம்' என்றோம். "ராமதாஸ் சும்மாதான் சொல்கிறாரா... உண்மையாகவே சொல்கிறாரா..." என பயந்துபோய்விட்டார்கள். நான் சொன்னேன், 'எங்களுக்கு தனி இட ஒதுக்கீடு தரவில்லையென்றால், உங்களுடன் கூட்டணி இல்லை, கூட்டம் இல்லை, ஊறுகாயும் இல்லை, பொரியலும் இல்லை, ரசமும் இல்லை' என்று. அப்போதுதான் நம்பினார்கள்.

சி.வி.சண்முகம் - எடப்பாடி பழனிச்சாமி
சி.வி.சண்முகம் - எடப்பாடி பழனிச்சாமி
தே.சிலம்பரசன்

அதற்குப் பின்னர்தான் 10.5% இட ஒதுக்கீடு மட்டுமே தர முடியும் என்றனர். அதற்கும் நான் ஒப்புக்கொண்டேன். அதன் பின்னர் எம்.எல்.ஏ சீட் பற்றிப் பேசினார்கள். 5, 7, 8, 10, 12, 15 எனத் தொடங்கி இறுதியாக 23 இடம் கொடுத்தார்கள். நாளை தேர்தல் அறிவிப்பு வெளியாகிறது என்றால், இன்றைய தினம் 10.5% இட ஒதுக்கீட்டைச் சட்டமாகக் கொண்டு வந்தார்கள். சி.வி.சண்முகம் அன்று இல்லை என்று சொன்னால்... அது சட்டமாக மாறியிருக்காது. அவரின் முயற்சி இல்லை என்று சொன்னால் நமக்கு இட ஒதுக்கீடே கிடைத்திருக்காது. ஆனால், அவர் மீண்டும் சட்டமன்றத்துக்குப் போகக் கூடாது என இந்த விழுப்புரம் மக்கள் முடிவு பண்ணிவிட்டார்கள், அவரைத் தோற்கடித்துவிட்டார்கள்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தில் 12 இடங்கள் காலியாக இருந்தபோது, இந்த ஊமை ஜனங்களுக்காக வன்னியர் ஒருவர் இருக்க வேண்டும் என்பதற்காக அன்று கெஞ்சினேன். ஆனால், ஆட்சியில் இருந்தவர்களுக்கு ஒரு இடம் தருவதற்கும் மனம் இல்லை. உணர்வுள்ள வன்னியர்கள்... மாற்றுக் கட்சியிலேயே இருக்கக் கூடாது. ஒட்டுமொத்த வன்னியர்களும் என் பின்னாலே வந்தால் இவை அனைத்தும் மாறும். மாற்றுக் கட்சியில் இருப்பவர்கள்கூட தேர்தல் நேரத்தில் ஒன்றாக பாமக-வுக்கு வாக்களிக்க வேண்டும். மக்களின் நலனுக்காக 212 நாள்களில் 436 அறிக்கைகளை விடுத்துள்ளேன். அதற்கெல்லாம் இந்த ராமதாஸ் தேவைப்படுகிறான். இந்த ஊமை ஜனங்களுக்காக நான் இறுதிவரை போராடுவேன், பாடுபடுவேன். கோலூன்றி நடந்தாலும் இந்த மக்களுக்காக நான் பாடுபடுவேன்.

டாக்டர் ராமதாஸ்
டாக்டர் ராமதாஸ்

ஒட்டுமொத்த தமிழக சமுதாயமே... ஒருமுறை பாமக-வுக்கு வாக்களியுங்கள். தமிழ்நாட்டை உங்களில் ஒருவர் ஆளட்டும். அதற்குப் பொருத்தமானவரை நான் கொடுத்திருக்கிறேன், அவர்தான் அன்புமணி ராமதாஸ். தேர்தல் நேரத்தில் விளையாடுகின்ற பணத்தால்தான் நாம் பாழாகிப்போனோம். 'காசேதான் கடவுளடா...' என்பது கடவுளுக்கே தெரியுமாம். இனி இந்தக் காசுக்கு வன்னியர்கள் மயங்கக் கூடாது. முக்கியமாக பொறுப்பாளர்கள் மயங்கிவிடக் கூடாது. நகராட்சி, பேரூராட்சி என அனைத்து இடங்களிலும் நாம் போட்டியிடப்போகிறோம். சிந்தாமல் சிதறாமல் நாம் அனைத்து வாக்குகளையும் பெற வேண்டும். அங்கு காசுக்கு வேலை இல்லை. '10.5% இட ஒதுக்கீடு செல்லாது' என தவறான ஒரு தீர்ப்பைக் கூறினார்கள். நாம் அதற்கு ஸ்டே கேட்டு உச்ச நீதிமன்றத்தை நாடியிருக்கிறோம். நமக்கு நிச்சயம் ஸ்டே கிடைக்கும். 10.5% இட ஒதுக்கீட்டை நாம் பெற்றே தீருவோம். நான் சின்ன வயதிலே வீரமாகப் பேசுவேன், அதுபோல இப்போது பேச முடியவில்லை. நம்மிடம் சக்தி இருக்கிறது, ஆனால் பணம்தான் இல்லை. அது கடவுளுக்கே தெரியுமாம். இனி வரும் காலம் நல்ல காலமாக இருக்கட்டும். இனி ஒரு விதி செய்வோம், அதை எந்த நாளும் காப்போம். அந்த விதி, 'ஒட்டுமொத்த வன்னியர்கள் எந்தல் கட்சியில் இருந்தாலும் பாமக-வுக்கு வாக்களிப்பது; சிறுபான்மையினருக்குக் கிடைக்கும் நன்மைகளை வீடு வீடாகச் சென்று திண்ணையில் அமர்ந்து எடுத்துச் சொல்வது; அதை என்னாளும் காப்பது.’ விழுப்புரம் நகராட்சியில் உள்ள 42 வார்டுகளிலும் வெற்றிபெற வீடு வீடாகச் சென்று திண்ணை பிரசாரம் செய்வோம்" என்றார்.