Published:Updated:

`சரண்டர் ஆன தமிழக அரசு!’ - தனியார்மயத்துக்கு எதிராகக் கொந்தளித்த மின்வாரியத் தொழிலாளர்கள்

மின்வாரியத் தொழிலாளர்கள்
மின்வாரியத் தொழிலாளர்கள்

`மின்வாரியத்தைத் தனியாருக்குக் கொடுக்காதே’ என்று மின்வாரியத் தொழிலாளர்கள் இன்று நடத்திய ஆவேசப் போராட்டம், தமிழக அரசை சரண்டராகவைத்திருக்கிறது.

சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் பிரசாரத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கியிருக்கும் சூழலில், தனியார்மய நடவடிக்கைக்கு எதிராக மின்வாரியத் தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் ஆட்சியாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.

மின்சாரச் சட்டம் 2003-ன்படி. தமிழ்நாடு மின்வாரியம் 2012-ம் ஆண்டு மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. அதன் பிறகு, மின்வாரியத்தில் தனியார்மய நடவடிக்கை ஆரம்பித்தது. தனியார்மயத்துக்கு எதிராக மின்வாரியத் தொழிலாளர்கள் போராடிவரும் நிலையில், சமீபத்தில் ஐந்து துணை மின் நிலையங்களை ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் கொடுத்தது மின் வாரிய நிர்வாகம்.

கடந்த ஜூன் மாதம், தமிழ்நாடு மின்வாரியத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக பங்கஜ் குமார் பன்சால் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டார். அதன் பிறகு, தனியார்மய நடவடிக்கைகள் தீவிரமடைந்திருப்பதாக தொழிற்சங்கத்தினர் குற்றம்சாட்டினர்.

ஒப்பந்தத்தை ரத்துசெய்து உத்தரவு
ஒப்பந்தத்தை ரத்துசெய்து உத்தரவு

புதிதாக நியமிக்கப்படும் வாரியத் தலைவரை தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் சந்திப்பது வழக்கமாக இருந்துவரும் நிலையில், தொழிற்சங்க நிர்வாகிகளைச் சந்திக்க பங்கஜ் குமார் பன்சால் தொடர்ந்து மறுத்துவந்திருக்கிறார்.

அதனால், கடந்த நவம்பர் 4-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் மின்வாரியத் தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு, தொழிற்சங்கத்தினரை அவர் சந்தித்திருக்கிறார். அப்போது, தனியார்மய நடவடிக்கைகள் கூடாது என்று தொழிற்சங்கத்தினர் அவரிடம் வலியுறுத்தியிருக்கிறார்கள். ஆனால், அந்த சந்திப்புக்குப் பிறகு கள உதவியாளர் மற்றும் வயர்மேன் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் கொடுக்கும் நடவடிக்கையை வாரியத்தின் நிர்வாகம் மேற்கொண்டது.

அதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் இறங்கினர். தமிழ்நாடு மின்வாரியத்தில் 50,000-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், அந்த இடங்களில் ஐ.டி.ஐ மற்றும் டிப்ளோமா படித்த இளைஞர்களைப் பணியமர்த்த வேண்டும் என்றும், தற்போது ஒப்பந்தத் தொழிலாளர்களாக வேலை செய்துவருபவர்களை கள உதவியாளர்களாகப் பணியமர்த்த வேண்டும் என்றும் தொழிற்சங்கத்தினர் கூறிவருகிறார்கள்.

மின்வாரியத் தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் இறங்கிய பிறகும், அவர்களின் கோரிக்கையை ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை. தமிழ்நாடு மின்வாரியம் தனியார்மயம் ஆக்கப்படாது என்றும், தொழிற்சங்கத்தினர் தவறான தகவல்களைக் கூறிவருகிறார்கள் என்றும் மின்துறை அமைச்சர் பி.தங்கமணி செய்தியாளர்களிடம் கூறினார்.

தங்கமணி
தங்கமணி

அமைச்சரின் கருத்தை மறுத்த தொழிற்சங்கத்தினர், `துணைமின் நிலையங்கள், பிரிவு அலுவலகங்கள், புனல்மின் நிலையங்கள் என ஒவ்வொன்றையும் தனியாரிடம் கொடுக்கும் நடவடிக்கையைத் தொடர்ந்துகொண்டு இருக்கும்போதே, தனியார்மயம் கிடையாது என்று அமைச்சர் கூறுவது தவறான செயல்’ என்று கூறினர். மேலும், தனியார்மய நடவடிக்கைக்கு எதிராக மின்வாரியத் தொழிலாளர்கள் இன்று (டிச 21) தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எம்.ஜி.ஆரின் ஆட்சி பொற்கால ஆட்சியா? - ஒரு விரிவான அலசல்!

இந்தநிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, ``எந்தக் காரணம் கொண்டும் மின்வாரியம் தனியார்மயம் ஆக்கப்படாது என்று சொல்லிவருகிறேன். 50 சதவிகிதத்துக்கு மேல் காலிப் பணியிடங்கள் இருக்கும் இடங்களில் தடையில்லா மின்சாரம் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான், ஒப்பந்த அடிப்படையில் சில பணிகளை மேற்கொள்வதற்கு உத்தரவு போட்டிருந்தோம். மின்வாரியத்தைத் தனியார்மயம் செய்கிறார்கள் என்று கூறி இன்றைக்கு தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்திவருகிறார்கள். பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. ஆனாலும், அந்த உத்தரவை நாங்கள் ரத்துசெய்கிறோம்” என்றார்.

போராட்டம்
போராட்டம்

சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் பிரசாரத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கியிருக்கும் சூழலில், மின்வாரியத் தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் ஆட்சியாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. மின்வாரியப் பணிகளைத் தனியாரிடம் விடுவதற்கு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ரத்துசெய்யப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு