Published:Updated:

"சென்னையில் மழைநீர் தேங்காததற்கு அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட பணிகளே காரணம்!"- கே.சி.கருப்பணன்

உடைப்பு ஏற்பட்ட கீழ்பவானி வாய்க்காலில் கே.சி.கருப்பணன்

``சென்னையில் மழைநீர் தேங்காமல் வடிந்து போக சுமார் ரூ.6,000 கோடியில் திட்டம் தீட்டி பணிகள் நடந்தன. அந்த பணிகளால்தான் சென்னையில் தண்ணீர் தேங்கி நிற்காமல் வடிந்து போனது." - கே.சி.கருப்பணன்

"சென்னையில் மழைநீர் தேங்காததற்கு அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட பணிகளே காரணம்!"- கே.சி.கருப்பணன்

``சென்னையில் மழைநீர் தேங்காமல் வடிந்து போக சுமார் ரூ.6,000 கோடியில் திட்டம் தீட்டி பணிகள் நடந்தன. அந்த பணிகளால்தான் சென்னையில் தண்ணீர் தேங்கி நிற்காமல் வடிந்து போனது." - கே.சி.கருப்பணன்

Published:Updated:
உடைப்பு ஏற்பட்ட கீழ்பவானி வாய்க்காலில் கே.சி.கருப்பணன்

பெருந்துறை அருகே கீழ்பவானி வாய்க்காலின் இரண்டு கரைகளிலும் கடந்த சனிக்கிழமை  உடைப்பு ஏற்பட்டது. வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் சீரமைப்பு பணிகள் இன்றுமுதல் தொடங்கப்பட்டுள்ளன. இப்பணிகளை முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ-வுமான கே.சி.கருப்பணன் இன்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ``கடந்த அ.தி.மு.க ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, கீழ்பவானி வாய்க்காலை சீரமைக்கும் திட்டத்தை தொடங்கியது. இந்தப் பணிகளுக்கு அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்கூட ஆதரவு தெரிவித்தார். கொரோனா பரவல் காரணமாக பணிகள் நடைபெறவில்லை. கடந்த ஆட்சியிலேயே மேட்டூர் வலதுகரை, இடதுகரை கால்வாய் கரைகள் கான்கிரீட் போடப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ளன. எனவே அந்தப் பகுதிகளில் தங்கு தடையின்றி விவசாயத்துக்கு நீர் கிடைக்கிறது. நிலத்தடி நீர், கசிவு நீர் திட்டங்கள் அதனால் பாதிக்கப்படவில்லை. எனவே கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் அமைக்கும் திட்டத்தை நிறைவேற்ற விவசாயிகள் ஆதரவளிக்க வேண்டும்.

வாய்க்கால் சீரமைப்புப் பணிகள்
வாய்க்கால் சீரமைப்புப் பணிகள்

தற்போது ஒருதரப்பு விவசாயிகள் திட்டத்தை எதிர்க்கின்றனர். அவர்களுடன் சுமுகமாக பேசி இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக இந்தத் திட்டத்தை தி.மு.க-வின் சுற்றுச்சூழல் துறை அணிச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி எதிர்ப்பதாகத் தெரிகிறது. அவர் காங்கேயம் பகுதியில் உள்ளார். அவருக்கும் இந்தத் திட்டத்துக்கும் சம்பந்தமில்லை. கால்வாய் கரையில் பல மரங்கள் முளைத்து அதன் வேர்கள் கரைகளை பாதிக்கின்றன. எனவே மரங்களை அப்புறப்படுத்தி பாதிக்கப்பட்ட பகுதிகளில் கான்கிரீட் போட வேண்டும். வாய்க்கால் உடைப்பால் 500 ஏக்கரில் விளைந்த பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரண உதவிகளை அரசு தாமதமின்றி வழங்க வேண்டும்.

அத்திக்கடவு- அவிநாசி திட்டம் அ.தி.மு.க ஆட்சியில் தான் நிறைவேற்றப்பட்டது. இந்தத் திட்டத்தை 2021-க்குள் நிறைவேற்ற திட்டமிட்டோம். ஆனால் கொரோனா போன்ற பிரச்னைகளால் திட்டம் நிறைவேறுவதில் தாமதம் ஏற்பட்டது. எனினும் 90 சதவிகித பணிகள் நிறைவடைந்துவிட்டன. இந்த அரசு அந்தத் திட்டத்தையும் நிறைவேற்ற ஆர்வம் காட்டவில்லை.

வாய்க்கால் உடைப்பால் தண்ணீரில் மூழ்கிய விளைநிலங்கள்
வாய்க்கால் உடைப்பால் தண்ணீரில் மூழ்கிய விளைநிலங்கள்

இதேபோல காவிரி- குண்டாறு இணைப்பு திட்டத்தை நாங்கள் கொண்டு வந்தோம். அதுவும் சரிவர நிறைவேற்றப்படவில்லை. கடந்த ஆட்சியில் தொப்பூர்- பவானி இடையிலான சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற நிதி ஒதுக்கினோம். ஆனால் அந்த பணியும் சரியாக நடைபெறவில்லை. சென்னையில் மழைநீர் தேங்காமல் வடிந்து போக சுமார் ரூ.6,000 கோடியில் திட்டம் தீட்டி பணிகள் நடந்தன. அந்த பணிகளால்தான் சென்னையில் தண்ணீர் தேங்கி நிற்காமல் வடிந்து போனது. அதுமட்டுமல்ல ரூ.16 ஆயிரம் கோடிக்கு பல்வேறு நலத் திட்டங்களை எடப்பாடி அரசு கொண்டு வந்தது. அதன் திறப்பு விழாவை தான் தற்போது தி.மு.க-வினர் செய்து வருகின்றனர். தற்போது மாண்டஸ் புயல் பெரிய சேதத்தை உருவாக்கவில்லை. ஆனால் அதை ஏதோ மிகச் சிறப்பாக கையாண்டதாக முதல்வர் கூறுகிறார்" என்றார்.