Published:Updated:

``அன்று அண்ணாமலை அரசியலுக்கு வருவதை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன்; ஆனால், இன்று..!" - துரை வைகோ

துரை வைகோ

``ஆவணப்படத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறுவது தவறு. அவர்களை மட்டுமல்ல, யாரையும் புறக்கணிக்கும் நோக்கம் கிடையாது." - துரை வைகோ

``அன்று அண்ணாமலை அரசியலுக்கு வருவதை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன்; ஆனால், இன்று..!" - துரை வைகோ

``ஆவணப்படத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறுவது தவறு. அவர்களை மட்டுமல்ல, யாரையும் புறக்கணிக்கும் நோக்கம் கிடையாது." - துரை வைகோ

Published:Updated:
துரை வைகோ

ஈரோட்டில் இன்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவின் ஆவணப்படம் திரையிடப்பட்டது. இதில் துரை வைகோ, அமைச்சர் சு.முத்துசாமி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், எம்.பி-க்கள் அந்தியூர் செல்வராஜ், கணேசமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர், ஆவணப்படத்தின் இயக்குநரும், ம.தி.மு.க தலைமைக் கழகச் செயலாளருமான துரை வைகோ செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``ஆவணப்படத்தின் முக்கிய நோக்கம் வைகோவின் சாதனையையும், அவர் ஆற்றிய தொண்டுகளையும் வெளிப்படுத்துவது மட்டுமே. ஆவணப்படத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறுவது தவறு. அவர்களை மட்டுமல்ல, யாரையும் புறக்கணிக்கும் நோக்கம் கிடையாது. தேர்தல் நேரத்தில் தி.மு.க-வின் கூட்டணிக் கட்சிகள் ம.தி.மு.க-வையும், தொண்டர்களையும் அரவணைக்க வேண்டும். பொதுவாழ்வில் 56 ஆண்டுகளாகப் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுவந்தவர் வைகோ. அவர் தேர்தல்களில் வெற்றிபெறாமல் இருந்திருக்கலாம். ஆனால், அவர் முன்னெடுத்த போராட்டங்களில் 80 சதவிகிதம் வெற்றியைப் பெற்றிருக்கிறார். ஆட்சியைப் பிடிப்பது மட்டுமே வெற்றி கிடையாது. பொதுவாழ்வில் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித்தருவதும் வெற்றிதான். 80 சதவிகித மக்களால் பயன்படுத்தப்படும் பச்சை, நீலம் உள்ளிட்ட ஆவின் பால் பாக்கெட்டுகளின் விலை உயர்த்தப்படவில்லை. ஆரஞ்சு நிற பால் பாக்கெட் மட்டுமே விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க மெகா கூட்டணி அமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது அவரின் கொள்கை. அது பற்றி நான் கருத்து கூற ஒன்றுமில்லை. வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் தி.மு.க-வுடன் எங்கள் கூட்டணி தொடரும்.

துரை வைகோ, அமைச்சர் முத்துசாமி  உள்ளிட்டோர்.
துரை வைகோ, அமைச்சர் முத்துசாமி உள்ளிட்டோர்.

வலதுசாரி சிந்தனையுடைய மோடியைக் கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் நாங்கள் ஆதரித்தோம். அவர் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டைக்கொண்டிருப்பது தெரிந்ததும் வைகோ அவருக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டினார். அன்று நாடு இருந்த சூழல் வேறு. இன்றிருக்கும் சூழல் வேறு. சாதி, மதங்களை முன்னிலைப்படுத்தி அவர்கள் செய்துவரும் அரசியலை எதிர்க்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை ஐ.பி.எஸ் படித்தவர். நன்கு படித்திருந்தும், அவர் தரம் தாழ்ந்து அவதூறாகப் பேசுகிறார். இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவர் அரசியலுக்கு வருவதாக வந்த செய்தியைப் பார்த்து நானும் மகிழ்ச்சியடைந்தேன். ஆனால், கடந்த ஓராண்டாக அவர் கூறிவரும் கருத்துகள் மிகவும் அவதூறு பரப்புவதாக இருப்பதால் அவரது கருத்துகள் வேதனையளிக்கின்றன. நான் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பதைக் கட்சியும், தொண்டர்களும், நிர்வாகிகளும்தான் முடிவுசெய்வார்கள்.

வைகோவின் ஆவணப்படம்.
வைகோவின் ஆவணப்படம்.

கோவை கார் குண்டுவெடிப்புச் சம்பவத்தில், 24 மணி நேரத்துக்குள் விரைந்து செயல்பட்டு துப்புதுலக்கி, சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து பேரை போலீஸார் கைதுசெய்துள்ளனர். வெளிநாடுகளிலும், வெளி மாநிலங்களிலும் விசாரணை நடத்த வேண்டியிருதால்தான் என்.ஐ.ஏ வசம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது. ஏற்கெனவே என்.ஐ.ஏ-வின் கண்காணிப்பு பட்டியலில் இருந்தவர்தான் குண்டு வெடிப்பில் உயிரிழந்த ஜமேஷா முபீன். இதைவைத்து அரசியல் செய்து, தமிழக அரசுமீது அவதூறு பரப்பும் முயற்சியில் அண்ணாமலை ஈடுபட்டிருப்பது கண்டனத்துக்குரியது. கடந்த ஆட்சியில் பொள்ளாச்சிப் பாலியல் குற்றச்சாட்டு எழுந்து ஒரு மாதம் கழித்துத்தான் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் கோவை குண்டு வெடிப்பு விவகாரத்தில் அரசு விரைந்து செயல்பட்டு ஏழு பேரை உடனடியாகக் கைதுசெய்திருக்கிறது. ராகுல் காந்தி மேற்கொண்டிருக்கும் நடைப்பயணம் தேர்தலை முன்னிலைப்படுத்தி கிடையாது. நாட்டு மக்களின் ஒற்றுமைக்காகவே யாத்திரை செல்வதாக என்னிடம் ராகுல் தெரிவித்தார்" என்றார்.