Published:Updated:

`கருணாநிதியின் சட்டமன்ற சாதுர்யமும் எம்.ஜி.ஆரின் மாண்பும்!’ -துரைமுருகன் பகிரும் கலகல நினைவுகள்

துரைமுருகன்
துரைமுருகன்

``சட்டமன்றத்துக்கு என்று ஒரு மாண்பு இருந்தது. அந்த மாண்பு  ஜெயலலிதா முதல்வரான பிறகு குறைந்துவிட்டது” என்று வருத்தப்படுகிறார் சட்டமன்ற முன்னவரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சட்டமன்றத்தில் ஐம்பதாண்டுகளை நிறைவு செய்திருக்கும் துரைமுருகனை நேர்காணலுக்காக அவரது இல்லத்தில் சந்தித்தபோது, கடந்தகால சட்டமன்ற வரலாற்றில் நடந்த சில சுவாரஸ்யமான தகவல்களையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

சட்டப்பேரவை நூற்றாண்டு விழா
சட்டப்பேரவை நூற்றாண்டு விழா

``சட்டமன்றத்துக்குள் நான் அமரும் முன்பே அவை நடவடிக்கைகளை மாடத்திலிருந்து கண்ட காலங்கள் எல்லாம் உண்டு. அப்படி மாடத்திலிருந்து அவை நடவடிக்கையைப் பார்த்த காரணத்தால்தான் அவைக்குள் சென்ற என்னால் சிறப்புடன் பணியாற்றவும் முடிந்தது” என்று பேசத் தொடங்கினார்.

``எம்.ஜி.ஆர் இருந்த வரை சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள், ஆளுங்கட்சிகள் என்கிற பாகுபாடெல்லாம் இருக்காது. எங்களுக்கு ஒரு கோரிக்கை என்றால் உடனே அதை அன்றைக்கு அதிமுக-வின் அமைச்சர்களிடம் கேட்போம். அவர்களும் மறுக்காமல் செய்து தருவார்கள். அதேபோல் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்வதை எம்.ஜி.ஆர் ஒருபோதும் விரும்ப மாட்டார். ஒருமுறை நாங்கள் வெளிநடப்பு செய்துவிட்டு, அறிவாலயத்துக்கு வந்துவிட்டோம். அப்போது அவையில் எம்.ஜி.ஆர் இல்லை. அவர் அவைக்குள் வந்தபோது நாங்கள் இல்லாதது குறித்து விசாரித்திருக்கிறார். உடனே அன்றைக்கு அ.தி.மு.க-வின் மூத்த சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த இருவரை அறிவாலயத்துக்கே அனுப்பி அழைத்து வரச்சொன்னார். அறிவாலாத்துகு வந்து தலைவர் கலைஞரிடம் அவர்கள் பேசினார்கள். அப்போதும் தலைவர் வர மறுத்தவுடன் எம்.ஜி.ஆருக்கு அறிவாலயத்திலிருந்தே போனில் தொடர்புகொண்டு விஷயத்தைச் சொன்னார்கள். அவர் அப்போதே தலைவரிடம் போனில் பேசி `அவைக்கு வாருங்கள்’ என்று அழைப்பு கொடுத்தார். அதன் பிறகு `நாளை அவைக்கு வருகிறோம்’ என்று தலைவர் சொன்னார். அப்படி ஒரு நாகரிகம் அன்று இருந்தது.”

``2006-ல் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு புதிய தலைமைச் செயலகத்தில் சட்டமன்றக் கூட்டம் நடந்தது. அப்போது பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க-வினர் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். உடனே தலைவர் வீரபாண்டி ஆறுமுகத்தையும், மற்றோர் அமைச்சரையும் அனுப்பி பன்னீரிடம் பேசி சபைக்குள் அழைத்துவரச் சொன்னார்கள். அவர்கள் பன்னீரை சென்று சந்தித்து திரும்ப அவைக்கு வரும்படி அழைப்பு கொடுத்தனர். அதற்குள் பன்னீர்செல்வம் அந்த அம்மாவுக்குத் தகவல் சொல்லிவிட்டதால், `இன்றைக்கு அவைக்கு வர முடியாது. நாளை வருகிறோம்’ என்று வீரபாண்டியாரிடம் பதிலளித்திருக்கிறார். ஜெயலலிதாவின் நடவடிக்கையால்தான் அவைக்குள் ஓர் அந்நியோன்யம் இல்லாம் போனது” என்று பழைய நினைவுகளை அசைபோட்டார்.

கருணாநிதி - துரைமுருகன்
கருணாநிதி - துரைமுருகன்

``அப்போதெல்லாம் அவைக்குள் தண்ணீர்கூட குடிக்க முடியாது. பேசிக்கொண்டிருந்தால், தண்ணீர் தவித்தது என்றாலும் பேச்சை நிறுத்திவிட்டு வெளியே சென்றுதான் குடிக்க வேண்டும். அப்படியெல்லாம் கட்டுப்பாடுகள் இருந்தன. ஆனால், இப்ப பாருங்க, சீட்டில் உட்கார்ந்துக்கிட்டே முறுக்கு திங்கிறாங்க, கடலைமிட்டாய் சாப்பிடுறது, சிக்கன் 65 சாப்பிடுறதுனு அவுங்க இஷ்டத்துக்கு இருக்காங்க. இதெல்லாம் தப்புனு புதிதாக வரும் உறுப்பினர்கள் யாருக்கும் தெரியலையே... இதற்காகத்தான் சட்டமன்றக் கூட்டத்தொடரை லைவ் செய்ய வேணாம்னு நினைக்கிறாங்கபோல” என்று வருத்தப்படவும் செய்கிறார். அடுத்த சட்டமன்ற கூட்டத்தொடர் கண்டிப்பா லைவ் செய்யப்படும் என்கிற முடிவில் அரசு உறுதியாக இருக்கிறது என்கிற உபரித் தகவலையும் நம்மிடம் சொன்னவர்,

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘வாத்தியார்’ துரைமுருகன்... ‘சிவாஜி’ எ.வ.வேலு... ‘டஃப் ஃபைட்’ அ.தி.மு.க!

``சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் கையில் பேப்பர் வைத்துக்கொண்டு வாசிக்கவே கூடாது. இந்தப் பழக்கமும் இப்போது உருவானதுதான். இப்படித்தான் 89-ல் தி.மு.க ஆட்சியிலிருந்தபோது எங்கள் அமைச்சர் ஒருவர் அவர் பி.ஏ ரெடி செயது கொடுத்த மானியக் கோரிக்கை மசோதாவை அப்படியே வாசிக்க ஆரம்பித்தார். அவர் பேச்சை ஆரம்பித்தபோது பின்னால் இருந்த காங்கிரஸ் உறுப்பினர் சொக்கன் என்பவர் துாங்க ஆரம்பித்துவிட்டார். நமது அமைச்சரும் பேப்பரை பார்த்துக் படித்துக்கொண்டே இருந்தார். ஏற்கெனவே படித்த பக்கங்களே அடுத்தடுத்த பக்களில் இருந்திருக்கின்றன. படித்ததையே மீண்டும் படித்துக்கொண்டிருந்தார் அமைச்சர்.

பேரவையில் துரைமுருகன்
பேரவையில் துரைமுருகன்

சட்டென விழித்த காங்கிரஸ் உறுப்பினர் சொக்கன், தூங்கும்போது கேட்ட விஷயங்களையே மீண்டும் அமைச்சர் வாசிப்பதைக் கண்டு, `அமைச்சர் வாசித்தவற்றையே மீண்டும் வாசிக்கிறார்’ என்று எழுந்து சொன்னார். நிலைமையை உணர்ந்த முதல்வர் கலைஞர், ``மாண்புமிகு உறுப்பினர் உறங்கிக்கொண்டிருந்தார். அவருக்கும் தெரியட்டும் என்றுதான் அமைச்சர் இரண்டாவது முறையாக வாசிக்கிறார்” என்று கூறிச் சமாளித்தார். இப்படி அன்றைய சபைக்குள் நடந்த சுவாரஸ்யங்களெல்லாம் வேற ரகம் என்று நினைவுகளுக்குள் மூழ்கினார் பொன்விழா நாயகர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு