Published:Updated:

`ஆளுநர் இருக்கைக்கு அருகே இடம் ஒதுக்கிய முதல்வர்; ஆனால் இ.பி.எஸ் கலந்துகொள்ளவில்லை!’ - துரைமுருகன்

தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழா
தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழா ( நன்றி: பொதிகை )

ஆளுநர் இருக்கைக்கு அருகில் இடம்கொடுத்தும், வாழ்த்துரை வழங்க பெயர் சேர்த்தும் இ.பி.எஸ் கலந்துகொள்ளவில்லை என சட்டமன்ற விழாவை அதிமுக புறக்கணித்தது குறித்து அமைச்சர் துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``உரிய மரியாதையோடு அழைத்து, ஆளுநர் இருக்கைக்கு அருகில் அமர இடம் கொடுத்து, வாழ்த்துரை வழங்க பெயர் சேர்த்தும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விழாவில் கலந்துகொள்ளவில்லை" என அமைச்சர் துரைமுருகன் வருத்தம் தெரிவித்துள்ளார். சட்டமன்ற விழாவை அதிமுக புறக்கணித்தது குறித்து ஜெயக்குமார் அளித்த கருத்துக்கு பதிலளித்துப் பேசிய துரைமுருகன் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் துரைமுருகன்
அமைச்சர் துரைமுருகன்

தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழாவும், சட்டமன்றத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்திறப்பு விழாவும் நேற்று (02-08-2021) நடைபெற்றது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு, கருணாநிதியின் உருவப்படத்தைத் திறந்துவைத்தார்.

கட்சி பேதமின்றி விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்ற அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த விழாவில் பங்கேற்றன. ஆனால், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நூற்றாண்டு விழாவை பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க புறக்கணித்தது.
ஜெயக்குமார்
ஜெயக்குமார்

இந்தநிலையில், இன்று தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமைச்செயலகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். நூற்றாண்டு விழா மற்றும் கருணாநிதி படத்திறப்பு விழாவை அதிமுக புறக்கணித்தது குறித்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, ``முன்னாள் முதல்வர் அம்மையார் ஜெயலலிதாவின் படத்திறப்பு விழாக்கு அவர்கள் அழைப்பிதழ் மட்டுமே கொடுத்தனர். ஆனால் நாங்கள் அப்படிச் செய்யவில்லை. இந்த விழா திட்டமிடலின்போதே, முதல்வர் ஸ்டாலின் என்னை அழைத்து, `இந்த விழாவை எதிர்க்கட்சிகளின் தோழமையோடும், அனுசரணையோடும் நடத்தப்பட வேண்டும். எனவே, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை அழைத்துப் பேசி இந்த விழாவில் கலந்துகொள்ளச் செய்ய வேண்டும்’ எனக் கூறினார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்தைத் திறந்துவைத்தார் குடியரசுத் தலைவர்!
முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்தைத் திறந்துவைத்தார் குடியரசுத் தலைவர்!
நன்றி: பொதிகை

மேலும், `அவருக்கு குடியரசுத் தலைவர். ஆளுநர், சபாநாயகர் அமர்ந்திருக்கும் வரிசையில் அவர்களுக்கு அருகிலேயே இருக்கை ஒதுக்கப்பட்டு, வாழ்த்துரை வழங்கவும் இடமளிக்க வேண்டும்’ என்றும் அறிவுறுத்தினார். முதல்வரின் அறிவுறுத்தலின்படி எடப்பாடி பழனிசாமியை நானே தொலைபேசியில் அழைத்துப் பேசினேன். ஆனால், `கலந்தாலோசித்துவிட்டு முடிவு சொல்கிறேன்’ என்று கூறிய எடப்பாடியார், என்னிடம் பதில் தெரிவிக்காமல், சட்டமன்றச் செயலாளரிடம் `நாங்கள் விழாவில் கலந்துகொள்ள மாட்டோம்’ எனத் தெரிவித்துவிட்டார்" என்று துரைமுருகன் தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு