Election bannerElection banner
Published:Updated:

விஐபி தொகுதி: காட்பாடியில் கரைசேருவாரா துரைமுருகன்?

துரைமுருகன் - வி.ராமு
துரைமுருகன் - வி.ராமு

துரைமுருகன் மீது மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். நானில்லை... அ.தி.மு.க-வில் நண்டுசிண்டு நின்றாலும் துரைமுருகனைத் தோற்கடித்துவிடலாம்

தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் சந்திக்கும் 12-வது தேர்தல் இது. காட்பாடி தொகுதியில் மட்டும் ஒன்பது முறை போட்டியிட்டு, ஏழு முறை வெற்றி பெற்றுள்ளார். கருணாநிதிக்கு அடுத்தபடியாக சட்டமன்றத்தில் அரை நூற்றாண்டுக்கால அனுபவம்கொண்டவரும் துரைமுருகன்தான். அதனாலேயே அந்தத் தொகுதியில் யாருக்கும் வழிவிடாமல் ஆதிக்கம் செலுத்துகிறார் துரைமுருகன்.

துரைமுருகனை எதிர்த்து அ.தி.மு.க சார்பில் முன்னாள் மாவட்டச் செயலாளர் வி.ராமு போட்டியிடுகிறார். ‘‘ராமு ஒரு டம்மி பீஸ். துரைமுருகனைப் போய் அவரால் வீழ்த்த முடியுமா? இதெல்லாம் மந்திரி வீரமணியின் உள்குத்து அரசியல்’’ என்று சொந்தக் கட்சியின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றினார் அமைச்சர் நிலோபர் கபில். தேர்தலில் தோற்பதற்காக ராமுவிடம் ரகசிய ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதாகவும், அதனால், பிரசாரக் களத்தில் ராமுவும் ஆமை வேகத்தில் நகர்வதாகவும் அ.தி.மு.க-வினரே கொந்தளிக்கிறார்கள்.

விஐபி தொகுதி: காட்பாடியில் கரைசேருவாரா துரைமுருகன்?

குடியாத்தம் கொண்டசமுத்திரத்தில் 15 ஆண்டுகள் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்துள்ள ராமு, முதன்முறையாகச் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்கிறார். அவர் காட்பாடி தொகுதியைச் சேர்ந்தவர் இல்லை என்பதால், சொந்தக் கட்சியினரே சரிவர ஒத்துழைப்பு தருவதில்லை. இன்னொரு பக்கம் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவும் அவருக்குக் கிடைக்கவில்லை. பிரசாரத்துக்குச் செல்லும்போது ஐம்பது பேர் திரள்வதே அதிசயமாக இருக்கிறது. ஆனால், ராமுவிடம் பேசினால், ‘‘துரைமுருகன் மீது மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். நானில்லை... அ.தி.மு.க-வில் நண்டுசிண்டு நின்றாலும் துரைமுருகனைத் தோற்கடித்துவிடலாம்’’ என்கிறார் கொஞ்சமும் அசராமல்.

விஐபி தொகுதி: காட்பாடியில் கரைசேருவாரா துரைமுருகன்?

பிரதான கட்சிகளின் முக்கியத் தலைவர்களே இரண்டாம்கட்ட பிரசாரத்துக்கு வராத நிலையில், முதன்முறையாகச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் உதயநிதி ஸ்டாலின், 12-வது முறை போட்டியிடும் துரைமுருகனுக்காக வாக்கு சேகரிக்க வந்தது உள்ளூர் கட்சியினர் இடையே முணுமுணுப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் திறந்த வேனில் உதயநிதி பேசும்போது, அவருக்குப் பின்னால் கைகட்டியபடி சோர்வாகக் காணப்பட்ட துரைமுருகனைக் கண்டு, ‘யாருக்கு யார் சமம் என்ற தகுதிகூட தலைமைக்குத் தெரியவில்லையா?’ என்று கொந்தளிக்கிறார்கள் தொண்டர்கள். ஆனால், இதைப் பற்றியெல்லாம் துரைமுருகன் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. 83 வயதான பின்னரும், ‘‘உதயநிதி அமைச்சரவையில் இடம்பெறும்வரை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன்’’ என்று நமட்டு சிரிப்பு சிரிக்கிறார். ‘‘எனக்கு இதுதான் கடைசித் தேர்தல்’’ என்று வழக்கம்போல் வாக்காளர்கள் மத்தியில் குமுறிக் குமுறி அழும் நாடகத்தை அரங்கேற்றுவதும், அவருக்கு ஓரளவுக்குப் பலனைத் தரவே செய்கிறது.

இவ்வளவு முணுமுணுப்புகள் இருந்தாலும், காட்பாடியில் துரைமுருகனை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல என்பதே கள நிலவரம்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு