அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி, நேற்று மாலை விழுப்புரம் பழைய பேருந்துநிலையம் அருகேயுள்ள அம்பேத்கர் சிலைக்கு வி.சி.க-வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பிறகு, 'சனநாயகம் காப்போம்' என்ற பெயரில் விழுப்புரம் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் தலைமையில், புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள அம்பேத்கர் சிலை வரை பேரணியாகச் சென்றனர். இதற்காக விழுப்புரம் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் சுமார் 3,000 வி.சி.க-வினர் திரண்டு வந்திருந்தனர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ரவிக்குமார், "அதானி முறைகேடு காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் நிலைகுலைந்து போயிருக்கிறது. இந்த நிலையிலும் எல்.ஐ.சி என்கிற பொதுத்துறை நிறுவனத்துடைய பணத்தையெல்லாம் எடுத்து, மீண்டும் அதானியுடைய நான்கு நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறார்கள். இந்த அதிர்ச்சிகரமான உண்மை, இரண்டு நாள்களுக்கு முன்னே வெளியாகியிருந்தது. தொடர்ந்து அதானியுடைய முறைகேடுகளை மூடி மறைப்பதிலும், அவரைக் காப்பாற்றுவதிலும் நரேந்திர மோடி அரசு ஈடுபட்டிருக்கிறது.

இது இந்திய பொருளாதாரத்துக்கு மட்டுமல்ல, இந்திய ஜனநாயகத்துக்கே மிகப்பெரிய சவாலாக, அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. ஆகவேதான் எழுச்சித் தமிழரின் வழிகாட்டுதலின்படி, 'சனநாயகம் காப்போம்' என்ற பெயரிலே இன்று விழுப்புரத்தில் மாபெரும் பேரணி நடத்தியிருக்கிறோம். எனவே, மத்திய அரசு அதானிக்கு ஆதரவான தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். அதானி மீது விசாரணை நடத்த மோடி அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
இந்தியாவிலேயே மிகப்பெரிய ஊழல் என்று சொல்லப்படுகின்ற அதானி ஊழலிலே, பா.ஜ.க இன்று சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது.
'இதைப் பற்றி நாடாளுமன்றத்தில் பேசிவிடுவார்கள், அது பதிவாகிவிடும்' என்ற அச்சத்திலேதான் வரலாற்றிலே இல்லாத அளவுக்கு பட்ஜெட் கூட்டத்தொடரையே ஒருநாள்கூட நடத்தாமல் ஒட்டுமொத்த கூட்டத்தொடரையும் காலி செய்திருக்கிறார்கள். அதானி பிரச்னையைப் பேசியதற்காகத்தான் ராகுல் காந்தியின் பதவியைப் பறித்திருக்கிறார்கள்.

அதானி பிரச்னையைப் பேசினாலே பயந்து நடுங்குகிறார்கள். அந்த மெகா ஊழலை மறைப்பதற்காக பல தில்லுமுல்லுகளை அவர்கள் செய்கிறார்கள். அதனுடைய ஒரு பகுதிதான் அண்ணாமலையின் செயல். அதற்கு தி.மு.க உரிய பதிலைக் கொடுக்கும். ஆளுநர் தமிழைப் பற்றி பேசியிருப்பது அவர்கள் முன்னெடுத்திருக்கும் புதிய அவதாரம், புதிய நாடகம். ஓட்டு வாங்குவதற்காக எல்லாவித தந்திரங்களையும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் செய்யும். அதனுடைய வெளிப்பாடுதான் ஆளுநர் பேசியது. நேற்றைய தினம் பிரதமர் மோடி அவர்கள், மத்திய அமைச்சர் எல்.முருகன் வீட்டுக்குச் சென்று தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடி, 'தமிழ் மொழிபோல பழைமையான மொழி வேறு ஏதும் இல்லை' என்று புகழ்ந்து பாராட்டியிருக்கிறார்.

இவர்களுக்கு உண்மையிலேயே தமிழ் மொழிமீது பற்றிருந்தால் நான் ஒன்றே ஒன்றைக் கேட்கிறேன். ஒரே நாளில் சம்ஸ்கிருதத்துக்காக நான்கு மத்திய பல்கலைக்கழகங்களை பா.ஜ.க அரசு சட்டம் இயற்றி உருவாக்கியது. தமிழ்மீது பற்றிருந்தால்... தமிழுக்காக ஒரு மத்திய பல்கலைக்கழகத்தை அவர்கள் உருவாக்கட்டுமே" என்றார் காட்டமாக.