Published:Updated:

இ-பாஸ்: `காரணங்களும் பார்க்காது... ஆவணங்களும் சரிபார்க்காது!’ - எதற்காக இந்த ஆல் பாஸ்?

TN Epass
TN Epass

இன்று முதல் தமிழகத்தில் இ-பாஸ் பெறும் நடைமுறையில் தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. `விண்ணப்பித்த அனைவருக்குமே இ-பாஸ் வழங்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது முழுக்க முழுக்க கேலிக்கூத்தாக இருக்கிறது என்பதே உண்மை!

கொரோனா பரவல் காரணமாக சென்னையைவிட்டு `வொர்க் ஃப்ரம் ஹோம் டவுன்’ சென்றவர்களெல்லாம், இன்று காலை முதல் மீண்டும் சென்னையை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். காரணம், இ-பாஸ் கட்டுப்பாடுகளில் வழங்கப்பட்ட `தாராள’த் தளர்வு.

தமிழகத்தில் நேற்றுவரை இ-பாஸ் பெறுவதற்குக் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டுவந்தன. திருமணம், இறப்பு மற்றும் மருத்துவ அவசரங்களுக்காக உரிய ஆவணங்களோடு விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே இ-பாஸ் வழங்கப்பட்டது. இ-பாஸ் இல்லாமல், இறந்த உடலுடன் வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தைப் பல மணிநேரம் காத்திருக்கவைத்த சம்பவங்களெல்லாம் நடைபெற்றன. இந்த நடைமுறையை எளிமையாக்க பொதுமக்களிடத்திலிருந்தும், பல்வேறு அரசியல் தலைவர்களிடமிருந்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

வாகன சோதனை
வாகன சோதனை

பொதுமக்கள் பலர் சரியான காரணங்களுக்காக விண்ணப்பித்து, இ-பாஸ் கிடைக்காமல் மன வேதனையிலிருந்தார்கள். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஒரு கும்பல் பணம் பெற்றுக்கொண்டு சட்டவிரோத முறையில் இ-பாஸ் பெற்றுக்கொடுத்தது. இதை நாம் ஸ்டிங் ஆபரேஷன் மூலம் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தோம்.

மத்திய அரசும், `ஒரு மாநிலத்துக்குள் பயணம் செய்ய இ-பாஸ் தேவையில்லை’ என்று அறிவித்திருந்தது. இருந்தபோதிலும், `தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை தொடரும்’ என்று தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில், தமிழகத்தில் `இன்று (17.08.2020) முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும்’ என்று முதல்வர் தெரிவித்திருந்தார்.

எதற்கெல்லாம் இ-பாஸ் வழங்கப்படும்.?

திருமணம், இறப்பு மற்றும் மருத்துவ அவசரங்களுக்காகவும், அரசுப் பணிகளுக்காக அல்லது அரசு ஒப்பந்தப் பணிகளுக்காகச் செல்வோருக்கும் இ-பாஸ் வழங்கப்பட்டுக்கொண்டிருந்தது. 17.08.2020 இன்று முதல் `எந்தக் காரணமாக இருந்தாலும், விண்ணப்பிப்பவர்கள் யாராக இருந்தாலும் இ-பாஸ் வழங்கப்படும்’ என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழக தலைமைச் செயலகம்
தமிழக தலைமைச் செயலகம்

`இ-பாஸ் பெறும் முறை எளிமைப்படுத்தப்பட்டது மக்களின் தேவைக்காக. அவசர காரணங்களுக்காக மட்டுமே மக்கள் பயன்படுத்த வேண்டும். நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுவிட்டது என்று தேவையில்லாமல் யாரும் பயணம் மேற்கொள்ள வேண்டாம்’ என்று முதல்வர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

எப்படி இ-பாஸ் வழங்கப்படுகிறது என்று நாங்கள் ஒரு சில முறை இ-பாஸ் பெற விண்ணப்பித்துப் பார்த்தோம். அந்த மூன்று இ-பாஸ்களுமே உடனடியாக கிடைத்தன. விண்ணப்பம் போட்டு முடித்த அடுத்த நொடியே இ-பாஸ் ஒப்புதல் வழங்கப்படுகிறது.

E-pass Application
E-pass Application

நாங்கள் விண்ணப்பித்த இ-பாஸ் களின் காரணம் வெவ்வேறானவை. உதாரணமாக, `எல்லாருக்கும் இ-பாஸ் கொடுக்கிறதா சொன்னாங்க. எனக்கும் பொழுதுபோகலை. அதான் ECR வரைக்கும் போயிட்டு வரலாம்னு...’ என்ற காரணத்தோடுதான் இ-பாஸ் விண்ணப்பித்திருந்தோம். ஆட்டோ ஜெனரேட் என்பதால், உடனடியாகக் கிடைத்துவிட்டது.

இப்படிக் கொடுக்கப்படும் ஆவணங்களும் சரிபார்க்கப்படாமல்... காரணங்களும் சரிபார்க்கப்படாமல் எதற்கு இந்த இ-பாஸ் நடைமுறையை வைத்திருக்க வேண்டும்? இ-பாஸ் முறையில் தளர்வு என்றதுமே பலர் ஊருக்குக் கிளம்பிச் செல்ல அந்தந்த மாவட்ட எல்லைகளில் இ-பாஸ் நடைமுறையில் தளர்வுகள்தான் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், இ-பாஸ் இல்லாம் வந்தவர்களை, `செல்ல முடியாது’ என்று திருப்பியும் அனுப்பியுள்ளனர்.

Application Approved Message
Application Approved Message
Durairaj G

இது ஒருபக்கமிருக்க, இத்தனை நாள்களாக இ-பாஸுக்கு விண்ணப்பித்து, அது கிடைக்காமல் காத்திருந்த ஒரு கூட்டம். இன்று விண்ணப்பித்து, ஒட்டுமொத்தமாகக் கிளம்பிவிட்டது. அதனால், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடந்த 150 நாள்களாக இல்லாத அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இப்படி ஒரு வழிமுறையை அரசு ஏன் பின்பற்றுகிறது என்று சம்பந்தப்பட்ட அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, ``மக்களின் தேவைக்காகவே இ-பாஸ் நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. அவசர காரணங்கள் இல்லாமல் யாரும் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று அரசு வலியுறுத்தியுள்ளது. அதோடு, தவறான தகவல்கள் கொடுத்து இ-பாஸ் பெற முயன்றால் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நடைமுறை அமலில் இருப்பதற்கான முக்கிய காரணமே ஓர் ஊர் விட்டு இன்னோர் ஊருக்குச் செல்வோரின் விவரங்கள் சேகரிக்கப்படும். நோய்ப் பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கையாகவே இதைப் பார்க்கவேண்டும்" என்று கூறினார்.

E-Pass Terms & Conditions
E-Pass Terms & Conditions
Durairaj G

கடந்த சில வாரங்களாக முறையாக இ-பாஸ் பெற்று சென்னை வந்தவர்கள் சிலரைத் தொடர்புகொண்டபோது, அப்படி வந்தவர்கள் தனிமைப்படுத்தப்படவும் இல்லை, பரிசோதனைக்கு உட்படுத்தப்படவும் இல்லை என்பதை நாம் அறிந்தோம். அப்படியிருக்க, இன்னும் எதற்குத்தான் இந்த நடைமுறையை தமிழக அரசு கொண்டு வந்திருக்கிறதுஎன்பதுதான் புரியாத புதிர்.

சென்ற வாரம் மட்டும் பல்லாயிரக்கணக்கானோர் சென்னைக்கு வர இ-பாஸ் விண்ணப்பித்திருந்ததாகவும், அவை எதுவுமே ஏற்கப்படவில்லை என்பதும் நமக்குக் கிடைத்த தகவல். இன்று அவர்கள் அனைவரும் மீண்டும் முயன்று இ-பாஸ் பெற்றிருப்பார்கள். அவர்கள் எப்படி வரப்போகிறார்கள்? கூட்டம் கூட்டமாக டாக்ஸி, பைக் என்று ஏற்பாடு செய்துகொண்டு வருவார்கள். வரும் நாள்களில் சென்னை நுழைவாயில், போக்குவரத்து நெரிசலைச் சந்திக்கவிருப்பதை தொலைக்காட்சிகளில் நீங்கள் காணப்போகிறீர்கள்.

சென்னை டோல்கேட்
சென்னை டோல்கேட்

`இப்படி இ-பாஸ் வழங்குவதற்கு பதிலாக, பொதுப் போக்குவரத்தை அதிகக் கட்டுப்படுகளுடன் செயல்படுத்தலாம்’ என்பதே மக்கள் பலரின் கோரிக்கையாக இருக்கிறது. இ-பாஸ் பெற்று சென்னை வந்த சிலரிடம் பேசினோம். ``அலுவலகத்தில் வரச் சொன்னதால் இ-பாஸ் விண்ணப்பித்து, சென்னைக்கு வந்தோம். விண்ணப்பித்த உடனேயே பாஸ் கிடைத்துவிட்டது. ஆனால் ஊரிலிருந்து சென்னைக்கு வருவதற்கு பொதுப் போக்குவரத்து இல்லை என்பதால், வாடகை கார்களைத்தான் நாடினோம். அதனால் அதிக செலவாகிறது. வழக்கமாக 400, 500 ரூபாயில் சென்னை வரும் நான், வாடகை காருக்கு 3,500 வரை செலவு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதனால் இ-பாஸ் தளர்வைக் காட்டிலும், பொதுப் போக்குவரத்தை 50% பயணிகளுடன் அரசு அனுமதித்தால்கூட சிறப்பாக இருக்கும். கட்டணம் சற்றுக் கூடுதலாக வசூலித்தாலும், மக்களுக்கு அது பெரிய சிரமமாக இருக்காது” என்றார்.

``வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, அன்றாடத்துக்கே சிரமப்படுறப்போ... இப்படி டாக்ஸி பிடிச்சு வர்ற சிரமத்துக்கு உள்ளாகறதுக்கு பதிலா பொதுப் போக்குவரத்தையே திறந்துவிட்டுடலாம். இந்த இ-பாஸெல்லாம் வெறும் நாடகமாத்தான் தெரியுது’ என்றார் நம்மிடம் ஒரு பொதுஜனம்.

என்ன செய்யக் காத்திருக்கிறது தமிழக அரசு?

அடுத்த கட்டுரைக்கு