Published:Updated:

விஐபி தொகுதி: திருவண்ணாமலை... வேலு Vs வேல்!

எ.வ.வேலு - தணிகைவேல்
எ.வ.வேலு - தணிகைவேல்

வளமான பொருளாதாரத்தைக்கொண்டவரான வேலு, சொந்தக் கட்சிக்காரர்களுக்கு மட்டுமல்லாமல் மாற்றுக் கட்சிக்காரர்களுக்கும் செலவு செய்வதில் தாராளம் காட்டுபவர்.

தி.மு.க-வில் முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளருமான எ.வஜ்ஜிரவேலு என்ற எ.வ.வேலு, மூன்றாவது முறையாக திருவண்ணாமலையில் களம்காண்கிறார். அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க-வின் வர்த்தகர் அணி மாநிலத் துணைத் தலைவர் தணிகைவேலும், அ.ம.மு.க சார்பில் திருவண்ணாமலை மத்திய மாவட்டச் செயலாளர் ஏ.ஜி.பஞ்சாட்சரமும் போட்டியிடுகிறார்கள்.

எ.வ.வேலு
எ.வ.வேலு

வளமான பொருளாதாரத்தைக்கொண்டவரான வேலு, சொந்தக் கட்சிக்காரர்களுக்கு மட்டுமல்லாமல் மாற்றுக் கட்சிக்காரர்களுக்கும் செலவு செய்வதில் தாராளம் காட்டுபவர். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே வாக்காளர்கள் கணக்கெடுப்பு, பூத் கமிட்டிகள், தெருவாரியாகத் தேர்தல் பொறுப்பாளர்களை நியமிப்பது என கனகச்சிதமாக முடித்து, பிரசாரத்தில் பிஸியாகிவிட்டார் எ.வ.வேலு. மாவட்டச் செயலாளரான தன்னைத் தாண்டி யாரையும் வளரவிடாமல், ஒன்மேன் ஆர்மியாகக் கட்சிக்காரர்களைக் கட்டுக்குள்வைத்திருப்பதும், தொடர்ந்து நான்கு முறை எம்.எல்.ஏ-வாக இருப்பதும் இவருக்கு ப்ளஸ். அதேபோல இவரின் அதீத ஆதிக்கத்தால் கட்சிக்காரர்கள் மத்தியில் நிலவும் அதிருப்தி இவருக்கு மைனஸ்.

பா.ஜ.க வேட்பாளர் எஸ்.தணிகைவேல் திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் என்றாலும், சென்னையில் செட்டிலானவர். சினிமா ஃபைனான்ஸியரான இவர், முதன்முறையாக சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கிறார். கடந்த இரண்டு தேர்தல்களில் இந்தத் தொகுதியில் பா.ஜ.க-வின் வாக்குவங்கி ஒரு சதவிகிதத்தைக்கூடத் தாண்டியதில்லை என்றாலும், 2016 தேர்தலில் 32.45 சதவிகித வாக்குகளைப் பெற்ற அ.தி.மு.க-வும், 3.88 சதவிகித வாக்குகளைப் பெற்ற பா.ம.க-வும் கூட்டணியில் இருப்பது மட்டும்தான் இவருக்கு ப்ளஸ். எ.வ.வேலுவுக்கு நிகரான பொருளாதாரப் பின்னணி இல்லை என்பதும், உள்ளூர் அ.தி.மு.க-வில் நிலவும் கோஷ்டிப்பூசலும் இவருக்கு மைனஸ்.

தணிகைவேல்
தணிகைவேல்

வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் அ.தி.மு.க-வின் திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளரான அக்ரி கிருஷ்ணமூர்த்தியைச் சந்தித்து ஆதரவு கேட்டிருக்கிறார் தணிகைவேல். அதையடுத்து அவரது எதிர்க் கோஷ்டியாகச் செயல்பட்டுவரும் முன்னாள் மாவட்டச் செயலாளர் பெருமாள் நகர் ராஜனையும் சந்தித்து ஆதரவு கேட்டிருக்கிறார். இந்தத் தகவல் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் காதுகளுக்கு எட்டியதால் உஷ்ணமாகிவிட்டாராம் அவர். இப்படி அ.தி.மு.க-வில் நிலவும் கோஷ்டிப்பூசல் தணிகைவேலின் காலை வாரக் காத்திருக்கிறது. யார் யாரைச் சந்தித்து ஆதரவு கேட்பது என்று குழம்பிப் போயிருப்பதால், முக்கிய நிர்வாகிகளைச் சந்திப்பது, தேர்தல் அலுவலகம் திறப்பது என அனைத்திலும் தணிகைவேலுவுக்குத் தொய்வு ஏற்பட்டிருக்கிறது.

அ.ம.மு.க சார்பில் களமிறங்கியிருக்கும் ஏ.ஜி.பஞ்சாட்சரத்துக்கு, 2016 தேர்தலில் 2.49 சதவிகித வாக்குகளைப் பெற்ற தே.மு.தி.க கூட்டணியில் இருப்பது மட்டும்தான் ப்ளஸ். மொத்தத்தில் இந்தத் தேர்தல் எ.வ.வேலுவுக்கு ஜாக்பாட் என்றே கூறலாம். அசுர வேகத்தில் இயங்கிவரும் எ.வ.வேலுவை வீழ்த்துவது எதிரணியினருக்குக் கடும் சவால் என்பதே கள நிலவரம்!

அடுத்த கட்டுரைக்கு