Published:Updated:

சீனாவின் கடன் வலையில் சிக்குகிறதா பாகிஸ்தான்?

ஷெபாஸ் ஷெரீப்
பிரீமியம் ஸ்டோரி
ஷெபாஸ் ஷெரீப்

சீனாவின் கடன் வலையில் சிக்கியதால் வீழ்ந்த பொருளாதாரத்தைச் சரிசெய்ய, மீண்டும் சீனாவிடமே கடன்பெறுவது ஆபத்தானது.

சீனாவின் கடன் வலையில் சிக்குகிறதா பாகிஸ்தான்?

சீனாவின் கடன் வலையில் சிக்கியதால் வீழ்ந்த பொருளாதாரத்தைச் சரிசெய்ய, மீண்டும் சீனாவிடமே கடன்பெறுவது ஆபத்தானது.

Published:Updated:
ஷெபாஸ் ஷெரீப்
பிரீமியம் ஸ்டோரி
ஷெபாஸ் ஷெரீப்

இலங்கையைப்போலவே, பாகிஸ் தானிலும் பணவீக்கம் அதிகரித்திருப்பதுடன், அந்நியச் செலாவணி கையிருப்பும் குறையத் தொடங்கியிருக்கிறது. சீனாவிடம் அதீத கடன் வாங்கிவிட்டு, எப்படித் திருப்பிச் செலுத்த முடியாமல் இலங்கை திணறியதோ, அதே நிலைதான் இப்போது பாகிஸ்தானுக்கும்! என்ன நடக்கிறது அங்கே?

விண்ணை முட்டும் விலைவாசி... மணிக்கணக்கில் மின்வெட்டு!

கடந்த ஏப்ரல் மாதத்தில், இம்ரான் கானின் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் கவிழ்க்கப்பட்டது. ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலும், பொருளாதார நெருக்கடியும்தான் இம்ரான் அரசு கவிழ்ந்ததற்கு முக்கியக் காரணங்களாக அமைந்தன. இதைத் தொடர்ந்து பாகிஸ்தானின் புதிய பிரதமரானார் ஷெபாஸ் ஷெரீப். `பொருளாதார நெருக்கடியைச் சரிசெய் வது பெரும் சவால்தான் என்றாலும், படிப்படி யாக இதைச் சரிசெய்வோம்’ என்றது புதிய அரசு. ஷெரீப் அரசு ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்கள் ஆன நிலையில், பாகிஸ்தானின் பொருளாதாரம் மேலும் அதல பாதாளத்துக்குச் சென்றுவிட்டது.

பாகிஸ்தானின் பணவீக்கம் 13.4 சதவிகிதமாக அதிகரித்ததோடு, அந்நியச் செலாவணி கையிருப்பும் வேகமாகத் தீர்ந்துவருகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் 16 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த அந்நியச் செலாவணி கையிருப்பு, ஜூன் முதல் வாரத்தில் 10 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் கீழே சென்றுவிட்டது. இப்போதைய கையிருப்பு, இரண்டு மாத காலத்துக்குக்கூட போதாது என்கிறார்கள். டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பும் சரிந்துகொண்டே செல்கிறது. இந்த நெருக்கடி நிலையால், பெட்ரோல், டீசல் விலை பல மடங்கு அதிகரிக்க, கூடவே மற்ற அத்தியா வசியப் பொருள்களின் விலையும் விண்ணை முட்டியிருக்கின்றன. எரிபொருள் தட்டுப்பாடு, சீன மின்சார உற்பத்தியாளர்களுக்குப் பணம் செலுத்தாதது போன்ற காரணங்களால், மின்சாரத் தட்டுப்பாடும் அதிகரித்திருக்கிறது. பாகிஸ்தானின் சில பகுதிகளில் 12 மணி நேரத்துக்கும் அதிகமாக மின்வெட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.

சீனாவின் கடன் வலையில் சிக்குகிறதா பாகிஸ்தான்?

பாகிஸ்தானிலுள்ள வியாபாரிகளோ, ``சந்தைகளில், பொருள்களை வாங்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே செல்கிறது. இதேநிலை நீடித்தால், பாகிஸ்தான் மக்கள் பலரும் வறுமைக் கோட்டுக்குக்கீழ் செல்வார்கள். பொருளாதாரத்தை மீட்டெடுக்க புதிய அரசிடமும் எந்தத் திட்டமும் இருப்பதாகத் தெரியவில்லை’’ என்று புலம்புகிறார்கள்.

அமைச்சரின் விநோத கோரிக்கை!

இதையடுத்து, விநோத கோரிக்கை ஒன்றை மக்கள் முன் வைத்திருக்கிறார் பாகிஸ்தானின் வளர்ச்சித் திட்டம், சீர்திருத்தங்கள் துறையின் அமைச்சர் ஆசன் இக்பால். ``நாம் கடன் பெற்றுத் தான் தேயிலையை இறக்குமதி செய்கிறோம். எனவே, நீங்கள் குடிக்கும் தேநீர் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும். இரவு 8:30 மணிக்கே தொழில் நிறுவனங்களையும், பெரிய கடைகளையும் மூடினால், மின்சாரத்தைச் சேமிக்கலாம்’’ என்பதுதான் இக்பாலின் கோரிக்கை. `மக்கள் தேநீர் அருந்துவதை நிறுத்தி னால், எப்படி நாட்டின் பொருளாதாரம் சரியா கும்?’ என்று பாகிஸ்தான் இளைஞர்கள் சமூக வலைதளங்களில் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

தேயிலையை அதிக அளவில் இறக்குமதி செய்யும் உலக நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று. கடந்த ஆண்டு மட்டும் சுமார் 600 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான தேயிலையை இறக்குமதி செய்தது பாகிஸ்தான்.

சீனாவின் கடன் வலை!

இந்த நிலையில் ஜூன் 23 அன்று, சீன வங்கிகள் கூட்டமைப்பிடமிருந்து 2.3 பில்லியன் அமெரிக்க டாலரைப் பெறுவதற்கான கடன் பத்திரத்தில் கையெழுத்திட்டிருக்கிறது பாகிஸ்தான். ``2013-ம் ஆண்டு சீன அதிபர் ஜி ஜின்பிங், `பெல்ட் அண்ட் ரோடு’ திட்டத்தைக் கொண்டுவந்தார். ஆசிய நாடுகளுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் வர்த்தகப் பாதையை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என்று சீனா கூறியது. ஆனால், சீனாவுடன் உலக நாடுகளை வர்த்தகரீதியாக இணைப்பதும், ஒட்டுமொத்த ஆசிய நாடுகளில் ஆதிக்கம் செலுத்துவதுமே இந்தத் திட்டத்தின் உண்மையான நோக்கம். இந்தத் திட்டத்தின்படி, ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுள் சில எனப் பல நாடுகளுக்கும் கடன் வழங்கியது சீனா. கடன்பெற்ற நாடுகளில் துறைமுகங்கள், இரு நாடுகளை இணைக்கும் சாலைப் பணிகள், உள்கட்டமைப்பு பணிகள் உள்ளிட்டவை நடைபெறும். இந்தக் கடனுக்கு வட்டி மிக மிக அதிகம். இலங்கையும் பாகிஸ்தானும் இந்தத் திட்டத்தின்கீழ் கடன்பெற்றதுதான், தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு மூல காரணம்’’ என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

இம்ரான் கான் - ஜி ஜின்பிங்
இம்ரான் கான் - ஜி ஜின்பிங்

2019-ல் வழங்கவிருந்த 6 மில்லியன் அமெரிக்க டாலரை, `பாகிஸ்தான் எவ்வாறு திருப்பிச் செலுத்தும்’ என்ற கேள்வியெழுந்ததால், நிறுத்திவைத்தது சர்வதேச நாணய நிதியம். பாகிஸ்தான் அரசு தரப்பிலிருக்கும் சிலர், ``சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவியைப் பெறும் நோக்கில்தான், ஜூன் 10 அன்று, ஐந்து சதவிகித பொருளாதார வளர்ச்சியை எட்டும் வண்ணம் 47 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருக்கிறது அரசு. முக்கிய மாகாணங்களில் ஆடம்பரப் பொருள்களை இறக்குமதி செய்வதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. ஷெரீப் அரசு பொறுப்பேற்று மூன்று மாதங்கள்தான் ஆகின்றன. அதற்குள் எப்படி அதல பாதாளத்துக்குச் சென்ற பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும்... படிப்படியாகப் பொருளாதாரம் மீட்டெடுக்கப்படும்’’ என்கிறார்கள்.

``சீனாவின் கடன் வலையில் சிக்கியதால் வீழ்ந்த பொருளாதாரத்தைச் சரிசெய்ய, மீண்டும் சீனாவிடமே கடன்பெறுவது ஆபத்தானது. பாகிஸ்தான் அரசு தனது போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால், நிச்சயம் இலங்கையின் நிலைதான் ஏற்படும்’’ என்கிறார்கள் சர்வதேச அரசியல் நோக்கர்கள்!