Published:Updated:

`அதே வழக்கு; ஆனால் இந்தமுறை அமலாக்கத்துறை..!’ - மீண்டும் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம்

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறையினர் சிறையில் வைத்து கைது செய்துள்ளனர்.

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி சி.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

இந்நிலையில் அதே ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை 14 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என அமலாக்கத்துறை சார்பில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, `அரைமணி நேரம் தருகிறேன், நீதிமன்றத்திலேயே விசாரணை செய்துகொள்ளுங்கள்’ எனக் கூறினார்.

 `சிறையிலேயே விசாரிக்கலாம்; தேவைப்பட்டால் கைது!' - ப.சிதம்பரம் வழக்கில் அமலாக்கத்துறைக்கு அனுமதி

ஆனால், இதை மறுத்த அமலாக்கத் துறை சிறையில் சென்று விசாரிக்க அனுமதி வேண்டும் எனக் கோரியது. இதற்கு ஒப்புதல் வழங்கிய நீதிபதி தேவைப்பட்டால் அவரை கைது செய்யலாம் என அனுமதி வழங்கினார். அதன்படி இன்று காலை மூன்று அதிகாரிகள் கொண்ட அமலாக்கத்துறையினர் திகார் சிறைக்குச் சென்று ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்

சுமார் ஒரு மணி நேரம் நடந்த விசாரணைக்குப் பிறகு ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறையினரும் கைது செய்துள்ளனர்.

சிதம்பரத்தின் மனைவி நளினி மற்றும் மகன் கார்த்தி ஆகிய இருவரும் இன்று காலை திகார் சிறைக்குச் சென்றுள்ளனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கார்த்தி, ``நான் என் தந்தையைச் சந்திப்பதற்காக வந்தேன். அவர் நல்ல உற்சாகத்தில் உள்ளார். என் தந்தை மீது எந்தவித நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அது அனைத்தும் அரசியல் நாடகமே. இன்று நடப்பது ஒரு போலியான விசாரணை” எனக் கூறியுள்ளார்.