Published:Updated:

சஞ்சய் ராவத் எம்.பி-க்கு ஸ்கெட்ச்சா? - ரூ.100 கோடி ஊழல் புகாரை விசாரிக்கும் அமலாக்கப் பிரிவு!

சஞ்சய் ராவத்

கொரோனா ஒழிப்பில் ரூ.100 கோடி ஊழல் நடந்திருப்பதாக வந்த புகாரைத் தொடர்ந்து, மும்பை மாநகராட்சி கமிஷனருக்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியிருக்கிறது.

சஞ்சய் ராவத் எம்.பி-க்கு ஸ்கெட்ச்சா? - ரூ.100 கோடி ஊழல் புகாரை விசாரிக்கும் அமலாக்கப் பிரிவு!

கொரோனா ஒழிப்பில் ரூ.100 கோடி ஊழல் நடந்திருப்பதாக வந்த புகாரைத் தொடர்ந்து, மும்பை மாநகராட்சி கமிஷனருக்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியிருக்கிறது.

Published:Updated:
சஞ்சய் ராவத்

மும்பையில் கொரோனாவைக் கட்டுப்படுத்த மருத்துவ உபகரணங்கள் வாங்கியது மற்றும் கொரோனா சிகிச்சை மையத்தை நடத்தும் பொறுப்பை மாநகராட்சி நிர்வாகம் தனியாரிடம் கொடுத்ததில் ஊழல் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. லைஃப்லைன் ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட் சர்வீஸஸ் என்ற நிறுவனத்துக்கு இந்த ஒப்பந்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தம் பெற்ற நிறுவனம் இந்தத் துறையில் எந்தவித அனுபவமும் இல்லாத நிறுவனம் என்று பா.ஜ.க முன்னாள் எம்.பி கிரீத் சோமையா தெரிவித்திருக்கிறார். அந்த நிறுவனம் போலியானது என்றும், பினாமி நிறுவனம் என்றும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

கமிஷனர் இக்பால்
கமிஷனர் இக்பால்

இந்த பினாமி நிறுவனத்துக்கு கொரோனா ஒழிப்பு ஒப்பந்தம் கொடுத்ததில் ரூ.100 கோடி ஊழல் நடந்திருக்கிறது என்றும், 2020-ம் ஆண்டிலிருந்து 2022-ம் ஆண்டுவரை இந்த நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது என்றும் குற்றம்சாட்டியிருந்தார் பா.ஜ.க எம்.பி. மேலும், ``அந்த நிறுவனத்துக்கு மருத்துவத் துறையில் எந்தவித அனுபவமும் இல்லை என்று தெரியவந்ததும், அந்த நிறுவனத்துக்கு மேற்கொண்டு எந்தப் பணியும் கொடுக்கவேண்டாம் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே கேட்டுக்கொண்டார். ஆனாலும் தொடர்ந்து அந்த நிறுவனத்துக்கு பணிகள் கொடுக்கப்பட்டுக்கொண்டே இருந்தன" என்று கிரீத் சோமையா தெரிவித்திருந்தார்.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

இது தொடர்பாக 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கிரீத் சோமையா மும்பை ஆசாத் மைதான் போலீஸில் புகார் செய்தார். இந்தப் புகார் கடந்த ஆகஸ்ட் மாதம்தான் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. அதுவும் கம்பெனியின் நிர்வாகிகள் நான்கு பேர்மீது போலி ஆவணங்களைத் தாக்கல் செய்ததாகப் புகார் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. அதில் அரசையும், சாமான்ய மக்களையும் ஏமாற்றியிருப்பதாகவும், கவனக்குறைவால் பலர் உயிரிழந்திருப்பதாகவும் போலீஸார் பதிவுசெய்த முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அந்தப் புகாரின் அடிப்படையில் மும்பை போலீஸுடன் பொருளாதாரக் குற்றப்பிரிவு, வருமான வரித்துறையும் விசாரித்துவருகின்றன. இந்த நிலையில், அமலாக்கப் பிரிவும் தற்போது விசாரிக்க ஆரம்பித்திருக்கிறது. அமலாக்கப் பிரிவு இது குறித்து விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி மாநகராட்சி கமிஷனர் இக்பாலுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

அவர் திங்கள்கிழமை அமலாக்கப் பிரிவு முன்பு ஆஜராக இருக்கிறார். இந்த நோட்டீஸ் குறித்து கமிஷனர் இக்பாலிடம் நிருபர்கள் கேட்டதற்கு பதிலளிக்க மறுத்துவிட்டார். மாநகராட்சி அதிகாரிகள் சிலரும் விசாரணை வளையத்துக்குள் வருவார்கள் என்று தெரிகிறது.

சஞ்சய் ராவத் சிக்குவாரா?

லைஃப்லைன் ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட் நிறுவனம் ஒப்பந்தம் பெற போலி ஆவணங்களைத் தாக்கல் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனத்தை 2020-ம் ஆண்டுதான் பதிவுசெய்ததாகவும், இதன் உரிமையாளர் சுஜித் பட்கர் என்றும் தெரியவந்திருக்கிறது. சுஜித் பட்கர் சிவசேனா எம்.பி.சஞ்சய் ராவத்தின் நெருங்கிய உறவினர் ஆவார். இந்த நிறுவனத்தில் ஹேமந்த் குப்தா, சஞ்சய் ஷா, ராஜு ஆகியோரும் பங்குதாரர்கள் ஆவர். நிறுவனத்தில் போதிய ஊழியர்களோ அல்லது பயிற்சி பெற்ற டாக்டர்களோ கிடையாது என்கிறார்கள்.

புதிய நிறுவனமாகவும், அனுபவம் இல்லாமலும் இருந்தபோதிலும் அதற்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது. புனே மெட்ரோபாலிடன் மேம்பாட்டு ஆணையம் இந்த நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கியிருந்தது. ஆனால், நிறுவனம் ஒப்பந்தத்தை ரத்து செய்ததோடு ரூ.25 லட்சத்தைப் பறிமுதல் செய்தது.

சஞ்சய் ராவத்
சஞ்சய் ராவத்

அதைத் தொடர்ந்தே மும்பையிலும் விசாரணை தொடங்கியிருக்கிறது. இது தொடர்பாக மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``அனைத்துக்கும் மாநகராட்சி கமிஷனர்தான் பொறுப்பு. அவர்தான் இதற்கு பதிலளிக்க வேண்டும். அதோடு அமலாக்கப் பிரிவின் விசாரணையையும் எதிர்கொள்ள வேண்டும்" என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனம் மும்பையில் ஒர்லி, முலுண்ட் உட்பட நான்கு இடங்களிலும், புனேவிலும் கொரோனா சிகிச்சை முகாம்களை நடத்த அனுமதி வாங்கியிருந்தது. இந்த நிறுவனத்தை சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்தான் தனது உறவினர் மூலம் பினாமியாக நடத்தியதாக பா.ஜ.க தரப்பில் கூறப்படுகிறது.

எனவே சஞ்சய் ராவத்துக்கு கட்டம் கட்டி இந்த அமலாக்கப் பிரிவு விசாரணையைத் தொடங்கியிருக்கிறது. இதனால் மீண்டும் சஞ்சய் ராவத் சிறைக்குச் செல்லக்கூடும் என்று தெரிகிறது. சமீபத்தில்தான் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் சஞ்சய் ராவத்தின் ஜாமீனை ரத்துசெய்ய வேண்டும் என்று கோரினர்.