Published:Updated:

கொடநாடு: `ஆட்சியில் இருந்தபோதே வழக்கை மூட முயன்றார் எடப்பாடி’ - எதிர்த்தரப்பு வழக்கறிஞர் சொல்வதென்ன?

கொடநாடு விவகாரம்
கொடநாடு விவகாரம்

``எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி முடிவதற்குள்ளாகவே கொடநாடு வழக்கை முடித்துவிட பல வேலைகளைச் செய்து பார்த்தார்கள். ஆனால், அவர்களின் திட்டம் எதுவுமே இந்த வழக்கில் எடுபடவில்லை."

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அடுத்தடுத்து பல பரபரப்பு திருப்பங்களைக் கண்டுவரும் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் உச்சகட்ட பரப்பாக சயானின் வாக்குமூலம் இடம்பெற்றிருக்கிறது. கொட்டும் மழையில் ஊட்டியில் நடைபெற்ற அந்த ரகசிய வாக்குமூலத்தில், தொடர்ந்து மூன்று மணி நேரம் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் பல உண்மைகளைத் தெரிவித்திருக்கிறாராம் சயான்.

கொடநாடு வழக்கு விசாரணை
கொடநாடு வழக்கு விசாரணை

சயானின் இந்த ரகசிய வாக்குமூலம், வரும் 27-ம் தேதி ஊட்டியிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருக்கும் நிலையில், வாக்குமூலத்தின் சாரம்சங்கள் எனச் சில தகவல்கள் வெளியில் கசிந்துவருகின்றன. அவற்றில் முக்கியமான ஒன்று, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பெயரையும் இந்த வழக்கில் சயான் தெரிவித்திருக்கலாம் என்பதுதான். அப்படி ஒருவேளை எடப்பாடி பழனிசாமியை சயான் இந்த வழக்கில் குறிப்பிட்டிருந்தால், இது ஒன்றும் முதன்முறையல்ல, கடந்த முறை ஜாமீனில் வெளிவந்த வாளையார் மனோஜும் இதே சயானும் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து, ``எடப்பாடி பழனிசாமி சொன்னதன் பேரிலேயே இந்தக் குற்றத்தைச் செய்தோம்’’ என பகிரங்கமாகப் பேட்டி கொடுத்தனர்.

இந்தப் பேட்டியால் நாடே பரபரப்படைந்தாலும், அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியோ அலட்டிக்கொள்ளாமல் மிகவும் கூலாக இருந்து, இரண்டு பேரின் ஜாமீனையும் ரத்து செய்து சிறையில் அடைத்ததோடு, குண்டர் சட்டத்தையும் பாயச்செய்தார். ஆனால், இன்றைக்கோ நிலைமை தலைகீழாக மாறி, எல்லோரும் கூலாக இருக்க, வாக்குமூலத்தின் சாராம்சம் வெளிவரும் முன்னரே எடப்பாடி கொந்தளிப்பில் இருக்கிறார்.

வழக்கறிஞர் விஜயன்
வழக்கறிஞர் விஜயன்

எடப்பாடி பழனிசாமி ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போதே கொடநாடு வழக்கை விரைந்து முடித்து இழுத்து மூட பல்வேறு திட்டங்களை வகுத்தாக நம்மிடம் பகிர்கிறார் எதிர்த்தரப்பு வழக்கறிஞர்களில் ஒருவரான விஜயன்... ``கடந்த ஆண்டு கொரோனா பொதுமுடக்க காலத்திலும் இந்த வழக்கை விரைந்து நடத்தத் தீவிரம் காட்டினர். முதல் சாட்சியான கிருஷ்ண தாபாவை விருந்தினரைப்போல சொந்தச் செலவில் தங்கவைத்து, பராமரித்து வந்தனர். 103 அரசுத் தரப்பு சாட்சிகள் இருந்த நிலையில், அனைவரிடமும் குறுக்கு விசாரணை நடத்தினால் வழக்கு விசாரணை தாமதமாகும் எனக் கருதி, வலுவில்லாத சாட்சிகளென 41-ஆகக் குறைத்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொடநாடு வழக்கு: `முன்னாள் முதல்வர் சட்டரீதியாக எதிர்கொள்ள வேண்டியதுதானே?!’ - கார்த்தி சிதம்பரம்

எதிரிகளின் நியாயமான கேரிக்களைக்கூட கடுமையாக எதிர்த்தனர். இதையெல்லாம்விட ஒருபடி மேலே போய், ஊட்டியைச் சேர்ந்த சாந்தா என்ற பெண்ணின் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து, 90 நாள்களில் இந்த வழக்கை முடிக்க வேண்டும் என்ற உத்தரவையும் பெற்றனர். எதிரிகளுக்கு முறையாக நோட்டீஸ் வழங்காமலேயே விரைந்து முடிக்கவும் முயன்றனர். ஆனால், எதுவுமே இந்த வழக்கில் எடுபடவில்லை. சயானிடம் மேற்கொள்ளப்பட்ட இந்தக் கூடுதல் விசாரணையே இந்த வழக்கை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லும்" என்றார்.

கொடநாடு எஸ்டேட்
கொடநாடு எஸ்டேட்

சயான் அளித்த வாக்குமூலத்தின் சாராம்சமே இன்னும் முறையாக வெளிவராத நிலையில், கொடநாடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் அதீத பதற்றத்துக்குக் காரணம் என்ன என்பதுதான் பல கேள்விகளை எழுப்புகிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு