Published:Updated:

வழக்கமான இருக்கை... `இணைந்து செயல்பட’ அறிவுரை... எடப்பாடி அதிமுக அலுவலக விசிட் | ஸ்பாட் ரிப்போர்ட்

அதிமுக அலுவலகத்தில் எடப்பாடி

இடைக்கால பொதுச்செயலாளரான பின்னர் முதன்முறையாக எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்குச் சென்றிருக்கிறார்.

வழக்கமான இருக்கை... `இணைந்து செயல்பட’ அறிவுரை... எடப்பாடி அதிமுக அலுவலக விசிட் | ஸ்பாட் ரிப்போர்ட்

இடைக்கால பொதுச்செயலாளரான பின்னர் முதன்முறையாக எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்குச் சென்றிருக்கிறார்.

Published:Updated:
அதிமுக அலுவலகத்தில் எடப்பாடி

ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழுவில் அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வுசெய்யப்பட்டார். அந்த நேரத்தில் பன்னீர்செல்வம் தன்னுடைய ஆதரவாளர்களுடன், அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்குச் செல்ல முயன்றபோது, அங்கிருந்த எடப்பாடி ஆதரவாளர்கள் அவரைத் தடுக்க முயன்றனர். இதனால், இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, வன்முறை அரங்கேறியது. இதனால், கட்சி அலுவலகத்துக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

அதிமுக தலைமைக் கழக அலுவலகம்
அதிமுக தலைமைக் கழக அலுவலகம்

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் எடப்பாடிக்கு அலுவலகத்தின் சாவியை வழங்கியது. ஆனால், ஆக.20-ம் தேதி வரை அலுவலகம் செல்ல நீதிமன்றம் தடைவிதித்திருந்தது. இந்தக் காலக்கெடு முடிவடைந்தாலும் பொதுக்குழு வழக்கு நிலுவையில் இருந்த காரணத்தால், எடப்பாடியால் அங்கு செல்ல முடியவில்லை. இந்நிலையில்தான், 7-ம் தேதி சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் சேதம் குறித்து அலுவலகத்தில் நேரில் ஆய்வு நடத்தினர். இதைத் தொடர்ந்து, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடியும், அவர் நியமித்த அமைப்புச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் ஆகியோர் பொறுப்பேற்பதற்கான நிகழ்ச்சி 8-ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதன்படி, நேற்று காலை 10:38 மணிக்கு பசுமை வழிச்சாலையிலுள்ள தனது இல்லத்திலிருந்து கிளம்பிய எடப்பாடியை வழிநெடுக தொண்டர்கள் மலர்தூவி வரவேற்றனர். பின்னர், 11:45 மணிக்கு அலுவலகம் வந்த அவர், வளாகத்தில் இருக்கும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மலர்தூவி மரியாதை செய்தார்.

எடப்பாடியை வரவேற்ற தொண்டர்கள்
எடப்பாடியை வரவேற்ற தொண்டர்கள்

இதையடுத்து அலுவலகம் உள்ளே செல்லும் முன்பாக வாசலை மூன்று முறை தொட்டு வணங்கினார். பின்னர் முதல்தளத்தில் இருக்கும் கூட்டரங்கில் நிர்வாகிகளுடன், இடைக்கால பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றுகொண்டார். இதையடுத்து, நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றியவர், பொதுச்செயலாளர் அறைக்குச் சென்றார்.

இது குறித்து நிர்வாகிகள் சிலர் நம்மிடம் கூறுகையில், "பொன்விழா காணும் அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி ஜூலை 11-ம் தேதியே தேர்வு செய்யப்பட்டுவிட்டார். ஆனால், அலுவலகத்தில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களால், அலுவலகத்துக்கு அவரால் வர முடியவில்லை. இந்நிலையில்தான் சி.பி.சி.ஐ.டி போலீஸார் வன்முறைச் சம்பவம் குறித்து நேரில் ஆய்வு நடத்தியுள்ளனர். மேலும், எங்கள் தரப்பு அலுவலகம் செல்லவும் அனுமதி வழங்கினர்.

ஜெயலலிதா சிலைக்கு மரியாதை செலுத்தும் எடப்பாடி
ஜெயலலிதா சிலைக்கு மரியாதை செலுத்தும் எடப்பாடி

அதன்படி, அலுவலகம் வந்து இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பதவியேற்று இருக்கிறார். அவரின் வருகை துவண்டுபோன தொண்டர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. அதேபோல, ' கட்சிப் பணியை சிறப்பாக செய்யுங்கள். அதிகப்படியாக உறுப்பினர்களைச் சேருங்கள். அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளுடன் தொடர்ந்து பேசி, இணைந்து செயல்படுங்கள் என்று அறிவுறுத்தினார். பொதுச்செயலாளர் அறைக்குச் சென்ற எடப்பாடிக்கு, அம்மா அமர்ந்த இருக்கையை நிர்வாகிகள் சிலர் எடுத்து வந்தனர். ஆனால், அதில் அமர அவர் மறுத்ததோடு, வழக்கமான தனது இருக்கையிலேயே சில நிமிடங்கள் அமர்ந்தார். பின்னர், எடப்பாடிக்கு கட்சி நிர்வாகிகள் முழு உருவப்படத்தை வழங்கினர். எடப்பாடி அலுவலகம் வரும் நிகழ்ச்சி அவசர அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டதால், தொண்டர்கள் பெரிய அளவில் கூட முடியவில்லை" என்றனர்.