Published:Updated:

'ஆர்ப்பாட்டம் நடத்தினால் 15 நாள் சிறை!' - தி.மு.க நிர்வாகிகளை மிரட்டுகிறதா உளவுத்துறை?

MK Stalin
MK Stalin

அனுமதியின்றி தி.மு.க-வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினால், கைதுசெய்து சிறையில் அடைக்கும்படி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளாராம். இச்செய்தியால், தி.மு.க.வினர் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

‘இந்தியைத் தேசிய மொழியாகக் கொண்டுவர வேண்டும்’ என மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ.க தலைவருமான அமித் ஷா சமீபத்தில் பேசியிருந்தார். இக்கருத்து, இந்தி பேசாத மாநிலங்களில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பா.ஜ.க ஆளும் கர்நாடக மாநிலத்திலேயே, ‘எக்காரணத்தைக் கொண்டும் கன்னடத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம்’ என அம்மாநில முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார்.

DMK Protest
DMK Protest
இந்தி மொழி திணிப்புக்கு எதிராக தி.மு.க.வினர் நடத்தப்போகும் ஆர்ப்பாட்டத்துக்கு, இதுவரை காவல்துறை அனுமதி அளிக்கவில்லை.

இந்நிலையில், ‘ஒரு நாடு ஒரு மொழிக் கொள்கை'யை மத்திய அரசு கைவிடக் கோரி, தி.மு.க சார்பில் வரும் செப்.20-ம் தேதி, சென்னை வள்ளுவர்கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க செய்து வருகிறது. `சென்னை நகர தி.மு.க-வினர் அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்' என மாவட்ட நிர்வாகிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதேநேரம், `ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரைக் கைதுசெய்து 15 நாள்கள் ரிமாண்ட்டில் வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள்' என முதல்வர் அலுவலகத்தில் இருந்து தகவல் சென்றிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸ் அதிகாரி ஒருவர், “இந்தி மொழி திணிப்புக்கு எதிராக தி.மு.க-வினர் நடத்தப்போகும் ஆர்ப்பாட்டத்துக்கு, இதுவரை காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. தி.நகர் துணை ஆணையரிடம் அவர்கள் அளித்த விண்ணப்பம், இன்னமும் நிலுவையில்தான் உள்ளது. வழக்கமாக, அனுமதியின்றி நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்தில் கைதானவர்களை மண்டபத்தில் தங்கவைத்து, மாலை 6 மணிக்கு மேல் விடுதலைசெய்து விடுவோம். ஸ்டாலின், உதயநிதி போன்ற வி.ஐ.பி-க்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டால், ஏ.சி மண்டபத்தை தி.மு.க-வினரே புக் செய்து கொடுத்துவிடுவார்கள்.

MK Stalin in Protest
MK Stalin in Protest

இம்முறை நடக்கப்போகும் ஆர்ப்பாட்டத்தில் அப்படி நடப்பதற்கு வாய்ப்பில்லை. அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்திக் கைதாகிறவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 15 நாள் காவலில் சிறையில் அடைக்க மேலிடம் உத்தரவிட்டுள்ளது. இதனை தி.மு.க நிர்வாகிகளிடமும் தெரிவித்துவிட்டோம்” என்றார்.

அ.தி.மு.க தரப்பில் இதுகுறித்து விசாரித்தபோது, “ஆர்ப்பாட்டம் என்கிற பெயரில் தி.மு.க-வினர் அவதூறாகப் பேசுவது, சர்ச்சையை உருவாக்குவது எனச் செயல்படுகின்றனர். இனிமேல் அனுமதியில்லாமல் தி.மு.க-வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினால், சிறையில் அடைக்கவும் வாய்மொழியாக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்” என்கின்றனர்.

Edappadi Palaniswami
Edappadi Palaniswami

‘ஆர்ப்பாட்டத்துக்கு வந்தால் சிறை’ என்ற செய்தி, சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க-வினரிடையே வைரலாகிவருகிறது. இதனால் வழக்கமாக வெள்ளைச்சட்டை, கறுப்பு பேன்ட்டில் வலம்வரும் தி.மு.க-வினரில் பெரும்பாலானோர், செப்.20 வள்ளுவர்கோட்டம் ஆர்ப்பாட்டத்துக்கு மட்டும், கலர் சட்டையில் செல்ல முடிவெடுத்துள்ளனராம்.

ஆளும்கட்சியின் மறைமுக உத்தரவு குறித்துப் பேசும் தி.மு.க நிர்வாகிகள், “ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி கோரி, தி.நகர் காவல் துணை ஆணையரிடம் மனு அளித்துள்ளோம். இதுவரை எங்களுக்கு அனுமதி தரவில்லை. ‘ஆர்ப்பாட்டத்துக்கு வருபவர்கள், 15 நாள்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்’ என உளவுத்துறை மூலமாக கட்சியினரிடையே அச்சத்தை ஏற்படுத்த முயல்கின்றனர். டெல்லியின் பேச்சைக் கேட்டு, தமிழக அரசு தமிழ் மொழிக்கான குரலை நசுக்கப்பார்க்கிறது. காவல்துறையின் இந்த அச்சுறுத்தல்களுக்கெல்லாம் நாங்கள் அஞ்சப்போவதில்லை. அனுமதியளிக்கவில்லை என்றாலும் திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்கின்றனர் உறுதியாக.

MK Stalin
MK Stalin

அதேநேரம், `இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்கு அ.தி.மு.க அரசு அனுமதி தரவில்லை என்றால், அது தமிழக மக்கள் மத்தியில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகும் என்பதால், நாளைக்குள் அனுமதி தந்துவிடுவார்கள்' என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர் தி.மு.க நிர்வாகிகள்.

Update: தமிழக ஆளுநரை நேரில் சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து, 20-ம் தேதி நடக்கவிருந்த போராட்டத்தை தி.மு.க தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளார் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின்.

அடுத்த கட்டுரைக்கு