Published:Updated:

குமரி: `கேரள எல்லை... தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்!’ - கலெக்டருக்கு முதல்வர் உத்தரவு

குமரியில் நலத்திட்டங்களை வழங்கிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி
குமரியில் நலத்திட்டங்களை வழங்கிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி

`கேரளாவிலிருந்து வருபவர்களால் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ளவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவினால் அது தமிழகம் முழுவதும் பரவிவிடும்’ என்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கன்னியாகுமரி மாவட்டம் வந்தார். அவருக்கு மாவட்ட எல்லையான ஆரல்வாய்மொழியில் கட்சி நிர்வாகிகள் வரவேற்பளித்தனர். நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகைக்கு வருவதற்கு முன்பு முதல்வருக்கு ஒன்பது இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அரசு விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்தவர், பின்னர் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். மேடைக்கு வருவதற்கு முன்பு முதல்வருக்கு வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு சானிடைஸர் வழங்கப்பட்டது. பின்னர் மேடையில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். ஏற்கெனவே முடிவுற்ற ரூ.153.92 கோடி மதிப்பிலான 21 திட்டங்களைத் தொடங்கிவைத்தார். மேலும், ரூ.60.44 கோடியில் 36 புதிய திட்டங்களைத் தொடங்கிவைத்தார்.

நாகர்கோவில் வந்த முதல்வர்
நாகர்கோவில் வந்த முதல்வர்

பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பினர், விவசாயப் பிரதிநிதிகள், மீனவ சங்கப் பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுப் பிரதிநிதிகளுடன் கலைந்தாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டார். இதில் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், கன்னியாகுமரி கலெக்டர் அரவிந்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ``கேரளாவில் கொரோனா நோய்ப் பரவல் அதிகமாக இருப்பதால் அங்கிருந்து கன்னியாகுமரி மாவட்டம் வருபவர்களை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. கேரளாவிலிருந்து வருபவர்களால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவினால் அது தமிழகம் முழுவதும் பரவிவிடும்.

முடிவுற்ற திட்டங்கள் தொடக்கம்
முடிவுற்ற திட்டங்கள் தொடக்கம்

எனவே, இந்த விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும். தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்திருக்கிறது. இதற்கு அரசு எடுத்த நடவடிக்கையே காரணம். தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன" என்றார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் அரசு விழாவில் மாவட்டத்தின் குறைகளை பற்றிப் பேச சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதியில்லை என்பதாலும், சட்டமன்றத்தில் வைத்த கோரிக்கைகள் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்பதாலும் முதல்வர் கலந்துகொள்ளும் கூட்டத்தை புறக்கணிக்கப்போவதாக குமரி மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க., காங்கிரஸின் ஆறு சட்டமன்ற உறுப்பினர்களும் அறிவித்திருந்தனர். அதன்படி அவர்கள் கலந்துகொள்ளாமல் முதல்வர் ஆய்வுக் கூட்டத்தை புறக்கணித்தனர்

அடுத்த கட்டுரைக்கு