Published:Updated:

`அ.தி.மு.க உறுப்பினர்’... பொதுக்குழுவில் சசிகலாவுக்கு எதிராக எடப்பாடி அஸ்திரம்?

எடப்பாடி  - சசிகலா
எடப்பாடி - சசிகலா

இந்தப் பொதுக்குழு கூடிய சில நாள்களில் சசிகலாவின் விடுதலையும் இருக்கிறது. அவர் எப்போது விடுதலையானாலும் அது அ.தி.மு.க-வுக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தும் என்பதை எடப்பாடி நன்றாக உணர்ந்திருக்கிறார்.

மூன்று மாதங்களில் முடிவுக்கு வரும் ஆட்சி, நான்கு ஆண்டு தண்டனைக் காலம் முடிந்து வெளியே வரும் சசிகலா என பரபரப்பான சூழலிலுக்கு நடுவே நாளை அ.தி.மு.க-வின் பொதுக்குழு கூடவிருக்கிறது. தனது இருப்பைத் தக்கவைத்துக்கொள்ளவும், எதிர்வரும் தேர்தலில் தனது ஆளுமையைக் காட்டவும் இந்தப் பொதுக்குழுவை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

அ.தி.மு.க-வின் பொதுக்குழுக் கூட்டம் வரும் 9-ம் தேதி சென்னை வானகரத்திலுள்ள ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் நடக்கவிருக்கிறது. இந்தப் பொதுக்குழுவுக்கு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் என 2,500 பேர், சிறப்பு அழைப்பாளர்களாக சுமார் 1,500 பேர் என கிட்டத்தட்ட 4,000 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருக்கிறது. கொரோனா தாக்கம் இருப்பதால் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்திருப்பது அவசியம் என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள். பொதுக்குழுவுக்கான அனுமதிக் கடிதம் உள்ளவர்களுக்கு மட்டுமே மண்டபத்துக்குள் அனுமதி வழங்கப்படும். பொதுக்குழு ஏற்பாடுகளை, சென்னை மாவட்ட அ.தி.மு.க-வினர் தீவிரமாக மேற்கொண்டுவருகிறார்கள்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடக்கவிருக்கும் இந்தப் பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் ஓ,பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் பேசவிருக்கிறார்கள். அத்தோடு துணை ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அமைச்சர்கள் சிலர் பேசவிருக்கிறார்கள். பொதுக்குழுவில் யார் பேச வேண்டும் என்பதை எடப்பாடி தரப்பும், பன்னீர் தரப்பும் பட்டியலிட்டிருக்கின்றன. இந்தப் பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் தயாரிக்கப்பட்டுவருகின்றன. பன்னீர்செல்வம் தேனியில் இருப்பதால் இன்று இரவு சென்னை வந்த பிறகு தீர்மானங்களை இறுதி செய்யவிருக்கிறார்கள். ஏற்கெனவே அ.தி.மு.க-வில் பதினோரு பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு இந்தப் பொதுக்குழுவில் ஒப்புதல் தரப்படவிருக்கிறது. அதேபோல் கூட்டணி விவகாரங்கள் முதல், தேர்தலில் வேட்பாளர்கள் தேர்வு வரை வழிகாட்டுதல்குழு மற்றும் ஒருங்கிணைப்பாளர்களுக்கான அதிகாரங்கள் குறித்தும் பொதுக்குழுவில் ஒப்புதல் தரப்படவிருக்கிறது. இதைத் தாண்டி மேலும் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்படவிருக்கின்றன.

இந்தநிலையில், இந்தப் பொதுக்குழுவில் சில விவகாரங்களுக்குக் கடைசி நேரத்தில் உயிர்கொடுக்க எடப்பாடி திட்டமிடுகிறார். அது அரசியல் களத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தலாம் என்கிறார்கள் அ.தி.மு.க-வுக்கு நெருக்கமானவர்கள். ``இந்த பொதுக்குழு கூடிய சில நாள்களில் சசிகலாவின் விடுதலையும் இருக்கிறது. அவர் எப்போது விடுதலையானாலும், அது அ.தி.மு.க-வுக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தும் என்பதை எடப்பாடி நன்றாக உணர்ந்திருக்கிறார். பா.ஜ.க-வுடன் கூட்டணி தொடர்கிறது என்று அ.தி.மு.க தலைமை அறிவித்தும்,அதை இதுவரை பா.ஜ.க அங்கீகரித்ததாகத் தெரியவில்லை. மேலும், எடப்பாடியை முதல்வர் வேட்பாளராகவும் ஏற்றுக்கொள்ளாமல் இழுத்தடிக்கிறார்கள். இதற்குப் பின்னால் பா.ஜ.க-வின் அரசியல் ஆட்டம் இருக்கலாம் என்று எடப்பாடி நினைக்கிறார்.

சசிகலா
சசிகலா

குறிப்பாக, தினகரன் அணியினர் சமீப நாள்களாகச் சுறுசுறுப்பாகச் செயல்பட்டுவருகிறார்கள். அதோடு தினகரன் தரப்புக்கும் பா.ஜ.க-வுக்கும் இருந்த இறுக்கம் குறைந்திருக்கிறது. இதனால் பா.ஜ.க-வுடன் கைகோக்கவும் தினகரன் தரப்பு தயாராக இருக்கலாம் என்கிறார்கள். இந்தநிலையில் சசிகலாவின் விடுதலையும் நடப்பது எடப்பாடியை யோசிக்கவைத்திருக்கிறது. அதற்குக் காரணமும் இல்லாமல் இல்லை. தினகரன் உள்ளிட்ட பலரையும் அ.தி.மு.க-விலிருந்து நீக்கிய அ.தி.மு.க தலைமை இதுவரை சசிகலாவை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து முறைப்படி நீக்கவில்லை. அவரது உறுப்பினர் கார்டு புதுப்பிக்கப்படாமல் இருப்பதால், அவர் கட்சியில் இல்லை என்று எடப்பாடி தரப்பு சப்பைக் கட்டுக் கட்டினாலும் ,கட்சியின் தலைமை அதிகாரபூர்வமாக நீக்காத வரை அ.தி.மு.க-வில் சசிகலாவின் பங்கு இருந்துகொண்டேயிருக்கும்.

`கணக்கு தீர்க்கும் சிவாஜி குடும்பம்... தவிக்கும் சசிகலா தரப்பு’-முடிவுக்கு வரும் 4 ஆண்டு போராட்டம்!

அதேநேரம், சசிகலா விடுதலையாகும் நாள் அன்று பிரமாண்ட முறையில் வரவேற்பு அளிக்க, தினகரன் தரப்பு திட்டமிட்டிருக்கிறது. சுமார் 300-க்கும் மேற்பட்ட வாகனங்களில் அணிவகுத்து சசிகலாவை வரவேற்க திட்டமிட்டிருக்கிறார்கள். வரவேற்பு குறித்து தினகரன் ஆதரவாளர்கள் ஆலோசனை நடத்தியபோது ``சின்னம்மாவுக்குப் பிரமாண்ட வரவேற்பு கொடுத்து அழைத்து வந்து நேராக அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்குள் அவரை அழைத்துச் செல்லலாம். யார் நம்மைத் தடுக்கிறார்கள் என்று பார்க்கலாம்” என்று உணர்ச்சிவசப்பட்டுப் பேசியிருக்கிறார்கள். இந்தத் தகவல் எடப்பாடி தரப்புக்குச் சென்றதும் உஷாராகிவிட்டார். கட்சி அலுவலகத்துக்குள் நுழைவதுகூட சாத்தியமில்லாத விஷயம். ஆனால், எதிர்காலத்தில் கட்சிக்கு உரிமை கொண்டாட சசிகலா தயங்க மாட்டார். அது தனது முதல்வர் வேட்பாளர் கனவுக்கே சிக்கலாக வந்துவிடும் என நினைக்கிறார். இதனால் இந்த பொதுக்குழுவில் சசிகலாவைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கும் தீர்மானத்தைக் கொண்டுவர எடப்பாடி தரப்பு திட்டமிட்டிருக்கிறது” என்கிறார்கள்.

பன்னீர்செல்வம்
பன்னீர்செல்வம்

ஆனால், இந்த தீர்மானத்துக்கு பன்னீர் ஒப்புக்கொள்வது கடினம் என்கிறார்கள். ஏற்கெனவே எடப்பாடியின் யதேச்சதிகாரம் அதிகமாக இருக்கிறது. இந்தநிலையில் தினகரன் தரப்பபினர் அவ்வப்போது பன்னீருடன் பேசிவருகிறார்கள். சசிகலா வந்த பிறகு காட்சிகள் எப்படி மாறும் என்பது தெரியாத நிலையில், எடப்பாடியுடன் கைகோத்து எதற்காக சசிகலாவைப் பகைத்துக்கொள்ள வேண்டும் என்று பன்னீர் நினைக்கிறார். எனவே, இந்தத் தீர்மானத்துக்குப் பன்னீர் ஒப்புக்கொள்ள வாய்ப்பில்லை. இன்று இரவு பன்னீர் சென்னை திரும்பியதும், இது குறித்து எடப்பாடி தரப்பிலிருந்து பேசவிருக்கிறார்கள். பன்னீர் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் இந்தத் தீர்மானத்தைக் கிடப்பில் போட்டுவிட்டு, பொதுக்குழுவில் தனது ஆதரவாளர்கள் மூலம் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்யவும் எடப்பாடி திட்டமிட்டிருக்கிறார்” என்கிறார்கள் இருதரப்புக்கும் பொதுவானவர்கள்.

பொதுக்குழுவில் வெடிக்கப்போகிறது புதிய சர்ச்சை என்பது மட்டும் புரிகிறது.

அடுத்த கட்டுரைக்கு