Published:Updated:

ஸ்டாலினுக்கு சவால்; தோப்பு வெங்கடாசலத்துக்குக் குட்டு! - முதல்வரின் ஈரோடு விசிட்

எந்தக் குற்றச்சாட்டாக இருந்தாலும் நான் பதில் சொல்கிறேன். மக்கள் நீதிபதிகளாக இருந்து நீதி வழங்கட்டும். அதேபோல, தி.மு.க ஆட்சியில் நடந்த தவறுக்கு ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும். எனக்கு மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை - என்கிறார் முதல்வர்.

ஈரோடு மாவட்ட அ.தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பெருந்துறை அருகே சரளையில் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். `தொடர்ந்து பிரசாரத்துல பேசிப் பேசி தொண்டை புண்ணாகிவிட்டது. குரல் கொஞ்சம் கம்மியாத்தான் இருக்கும். மன்னிச்சிக்குங்க’ எனப் பேச்சை ஆரம்பித்தார்.

ஈரோடு மாவட்ட அ.தி.மு.க மற்றும் கூட்டணி வேட்பாளர்கள்
ஈரோடு மாவட்ட அ.தி.மு.க மற்றும் கூட்டணி வேட்பாளர்கள்

பிரசார வேனில் தன்னுடன் அமைச்சர் செங்கோட்டையனை நிற்கவைத்திருந்த முதல்வர், ``அண்ணன் செங்கோட்டையன் அவர்கள் எம்.ஜி.ஆர் காலத்திலேயே எம்.எல்.ஏ-வாக இருந்தவர். என்னைவிட மூத்தவர், திறமையானவர். கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவர். ஈரோடு சிறந்து விளங்கக் காரணமாக இருப்பவர். கோபிசெட்டிபாளையத்தை அ.தி.மு.க-வின் கோட்டையாக வைத்திருக்கிறார்” எனப் பாராட்டிவிட்டு, மற்ற வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்தி வாக்குச் சேகரித்தார். ``கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கூட்டணியும் இல்லாமல், ஈரோடு மாவட்டத்திலுள்ள எட்டு தொகுதிகளிலும் அ.தி.மு.க வெற்றிபெற்றது. இப்படி தமிழ்நாட்டில் எந்த மாவட்டமும் 100 சதவிகித வெற்றியைக் கடந்த தேர்தலில் பெற்றதில்லை. அந்த அளவுக்கு ஈரோடு மாவட்டம் அ.தி.மு.க-வின் கோட்டையாக இருந்துவருகிறது. இந்தத் தேர்தலிலும் நாம் அதை நிரூபித்துக் காட்டி, மறுபடியும் அம்மா ஆட்சியை அமைக்கப் பாடுபட வேண்டும்” என ரத்தத்தின் ரத்தங்களை உற்சாகமாக்கிவிட்டு, தி.மு.க தலைவர் ஸ்டாலின் மீதான அட்டாக்கை ஆரம்பித்தார்.

பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி
பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி

`` `கொங்கு மண்டலம் அ.தி.மு.க கோட்டை இல்லை; இந்தத் தேர்தலோடு அ.தி.மு.க காணாமல் போய்விடும்’ என ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். ஈரோடு பெருந்துறையில் வந்துபாருங்கள் ஸ்டாலின் அவர்களே, அ.தி.மு.க கூட்டணியின் வலு எப்படி இருக்கிறதென்று. கொங்கு மண்டலம் என்றென்றைக்கும் அ.தி.மு.க-வினுடைய கோட்டைதான். அ.தி.மு.க-வை வீழ்த்த நீங்கள் எடுத்த எந்த அவதாரத்திலும் வெற்றிபெற முடியவில்லை. அதேபோல, எத்தனை அவதாரங்கள் எடுத்தாலும் என்றும் அ.தி.மு.க-வினுடைய கொங்கு மண்டலக் கோட்டையை வெற்றிபெற முடியாது.

கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த நான் முதல்வராகத் தேர்வு பெற்றபோது, ஆளுநர் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கச் சொன்னார்கள். அப்போது, தி.மு.க தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் டேபிள் மீது ஏறி நடனமாடியும், ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் புத்தகங்களை வீசி எறிந்தும் அராஜகத்தில் ஈடுபட்டனர். புனிதமான சட்டப் பேரவையிலேயே அராஜகம் செய்த தி.மு.க-வினர் கையில் நாட்டைக் கொடுத்தால் என்னாவது?

பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி
பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி

அதேபோல தி.மு.க ஆட்சியில் சட்டப் பேரவையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் அவமானப்படுத்தப்பட்டனர். பெண் என்றும் பாராமல் அம்மாவின் தலைமுடியைப் பிடித்து, சேலையை இழுத்தும் அராஜகத்தில் ஈடுபட்ட தி.மு.க-,வினர் ஆட்சிக்கு வந்தால் எவ்வாறு பெண்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பார்கள்? தி.மு.க எம்.பி. ஆ. ராசா, திண்டுக்கல் லியோனி ஆகியோர் பெண்களை, தலைவர்களைத் தரக்குறைவாகப் பேசுகின்றனர். இவர்கள் ஆட்சிக்கு வந்தால் மக்கள் நிம்மதியாக வாழ முடியுமா? அராஜகக் கட்சியான திமுக-வுக்கு இந்தத் தேர்தலோடு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி
பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி

ஊர், ஊராகச் சென்று மனுக்களை வாங்கி ஸ்டாலின் ஏமாற்று வேலை செய்கிறார். கவர்ச்சிகரமாகப் பேசி, குறுக்குவழியில் ஆட்சியைப் பிடிக்க நினைக்கும் ஸ்டாலினின் கனவு நிறைவேறாது. எந்தக் குறையாக இருந்தாலும் முதல்வர் உதவி மைய எண் 1100-க்கு தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கும் திட்டத்தை நான் கொண்டு வந்தேன். இதுவரை ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட புகார்களுக்கு தீர்வு காணப்பட்டிருக்கிறது. இனிமேல் மனு வாங்கி ஏமாத்துற வேலையெல்லாம் நடக்காது. அ.தி.மு.க ஆட்சியில் ஊழல் நடப்பதாக ஸ்டாலின் பொய்யான கருத்தைக் கூறிவருகிறார். டெண்டர் விடப்படாத, நடக்காத திட்டத்தில் ஊழல் நடந்ததாக என்மீது ஆளுநரிடம் புகார் தெரிவித்துள்ளார். பெருந்துறையில ஒரு மேடையைப் போடலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எந்தக் குற்றச்சாட்டாக இருந்தாலும் நான் பதில் சொல்கிறேன். மக்கள் நீதிபதிகளாக இருந்து நீதி வழங்கட்டும். அதேபோல, தி.மு.க ஆட்சியில் நடந்த தவறுக்கு ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும். எனக்கு மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை. உண்மை, தர்மம், நீதிதான் வெல்லும்” என்றார்.

பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி
பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி

தொடர்ந்தவர், ஈரோடு மாவட்டத்துக்கு அ.தி.மு.க அரசு செய்த திட்டங்களை வரிசையாகப் பட்டியலிட்டார். ``பெருந்துறைக்கு கொடிவேரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நான்தான் கொண்டு வந்தேன். அதேபோல ஐ.ஆர்.டி மருத்துவமனையை அரசு மருத்துவமனையாக மாற்றியதும் நான்தான். அமைச்சர்கள் கோரிக்கை வைத்ததாலேயே நான்தான் அதையெல்லாம் செய்து கொடுத்தேன். வேறு யாரும் செய்யவில்லை” என்றார்.

பெருந்துறை சிட்டிங் எம்.எல்.ஏ-வான தோப்பு வெங்கடாசலத்துக்கு அ.தி.மு.க தலைமை இம்முறை சீட் வழங்காததால், அவர் சுயேச்சையாக பெருந்துறையில் போட்டியிடுகிறார். கட்சி தலைமைக்குக் கட்டுப்படாததால் தோப்பு வெங்கடாசலம் அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். ஆனாலும், `எம்.எல்.ஏவாக இருந்து நான்தான் கொடிவேரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை கொண்டுவந்தேன். பெருந்துறை ஐ.ஆர்.டி மருத்துவமனையை அரசு மருத்துவமனையாக மாற்றினேன்’ என தோப்பு வாக்குச் சேகரித்துவருகிறார். இதைத்தான் சூசகமாக எடப்பாடியார் தன்னுடைய பிரசாரத்தின்போது `இதையெல்லாம் நான்தான் செய்தேன்’ என்று கூறி தோப்புவுக்கு ஒரு குட்டு வைத்திருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு