Published:Updated:

`காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்; தனிச்சட்டம்!' - சேலத்தில் அறிவித்த முதல்வர் பழனிசாமி

முதல்வர்
முதல்வர் ( எம். விஜயகுமார் )

`இது எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கும் தெரியும். இருந்தாலும் மக்களிடம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நாங்கள் ஆதரிப்பதாகப் பொய் பிரசாரம் செய்து வருகிறார்.'

சேலம் மாவட்டம் தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரியின் திட்டப்பணிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார்கள். இந்நிகழ்ச்சியில் அனைத்து துறை அமைச்சர்கள், தலைமை செயலாளர் மற்றும் துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர் என அனைவரும் கலந்து கொண்டார்கள்.

அடிக்கல்
அடிக்கல்
எம். விஜயகுமார்

இந்நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் பன்னீர் செல்வம், ''அம்மா அரசு ஒவ்வொரு துறைகளிலும் போட்டி போட்டு வளர்ந்து கொண்டிருக்கிறது. வேளாண் துறை, உள்ளாட்சித் துறைகளில் தேசிய விருதுகள் பெற்று சாதனைப் புரிந்து வருகிறது. அம்மா வழங்கிய இலவச கறவை மாடு வழங்கும் திட்டம், இலவச வெள்ளாடு வழங்கும் திட்டம், நாட்டுக் கோழி திட்டத்தின் மூலம் கிராமப் புற மக்கள் வளர்ச்சி அடைந்திருக்கிறார்கள். இதை எதிர்க்கட்சிகள் மட்டுமே விமர்சித்து வருகிறார்கள்'' என்றார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ''நானும் ஒரு விவசாயி என்பதால் வேளாண்மை துறைக்கு பார்த்துப் பார்த்து நன்மைகளைச் செய்கிறேன். நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்குத் தமிழக அரசு தடையில்லா சான்று வழங்காமல் இத்திட்டத்தை செயல்படுத்த முடியாது. இது எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கும் தெரியும். இருந்தாலும் மக்களிடம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நாங்கள் ஆதரிப்பதாகப் பொய் பிரசாரம் செய்து வருகிறார்.

இந்த திட்டத்தை தி.மு.க தான் கொண்டு வந்தது. 1996ம் ஆண்டு டி.ஆர்.பாலு மத்திய அமைச்சராக இருந்த போது தான் கொண்டு வந்தார். 2010ம் ஆண்டு ஸ்டாலின் முன்னிலையில் டி.ஆர். பாலு மத்திய அரசோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டார்கள். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தி.மு.க அரசு தான் கொண்டு வந்தது. அதை அ.தி.மு.க தடுத்து நிறுத்தியது.

திறப்பு விழா
திறப்பு விழா
எம். விஜயகுமார்

டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிக்கிறேன். இந்த அறிவிப்பைச் செயல்படுத்துவதோடு தனிச் சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஹைட்ரோ கார்பன் திட்டம் கொண்டு வரப்படாது. நான் விவசாயத்தை அழிக்கும் எந்த திட்டத்தையும் கொண்டு வர மாட்டோம். எங்கள் அரசு விவசாயிகளின் அரசு'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு