Published:Updated:

பேராசை.. சுயநலம்.. தி.மு.கவுக்கு எடப்பாடி சொன்ன மந்திர கண்ணாடி கதை!

முதல்வர்
முதல்வர் ( எம். விஜயகுமார் )

`தமிழகம் விருது பெற்றதை அவரால் சீரணிக்க முடியவில்லை. எதிர்க்கட்சியான தி.மு.க-வுக்கு ஒரு கதையை சொல்லுகிறேன்.'

சேலம் மாவட்டம் தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துக் கல்லூரியின் திட்டப்பணிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார்கள். இந்நிகழ்ச்சியில் அனைத்து துறை அமைச்சர்கள், தலைமை செயலாளர் மற்றும் துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர் என அனைவரும் கலந்து கொண்டார்கள்.

முதல்வர், துணை முதல்வர்
முதல்வர், துணை முதல்வர்
எம். விஜயகுமார்

இந்நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ''தமிழகம் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்தியாவில் சிறந்த மாநிலமாகத் தமிழ்நாடு அறிவிக்கப்பட்டு தேசிய விருது பெற்றது. இது தமிழ் நாட்டிற்கே பெருமை. தமிழர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். எதிர்க்கட்சி தலைவர் மட்டும் விருது கொடுத்தவரை அடிக்க வேண்டுமென்று கூறுகிறார். தமிழகம் விருது பெற்றதை அவரால் சீரணிக்க முடியவில்லை. எதிர்க்கட்சியான தி.மு.க-வுக்கு ஒரு கதையை சொல்லுகிறேன்.

ஒரு ஏழை முதியவர் கடவுளை வேண்டிக் கொண்டிருந்தார். கடவுள் தோன்றி உனக்கு இந்த மந்திர கண்ணாடியை தருகிறேன். இந்த மந்திர கண்ணாடியிடம் 3 முறை எதைக் கேட்டாலும் கொடுக்கும் என்று கூறி மந்திரக் கண்ணாடியை ஏழை முதியவரிடம் கொடுத்து விட்டு மறைந்தார். அந்த ஏழை முதியவர் மந்திரக் கண்ணாடியை அணிந்து கொண்டு என்னுடைய இந்த குடிசை வீடு மாளிகையாக மாற வேண்டுமென்றார். உடனே குடிசை வீடு மாளிகையாக மாறியது.

திறப்பு விழா
திறப்பு விழா
எம். விஜயகுமார்

அதையடுத்து வறண்டு கிடக்கும் என்னுடைய கிராமம் மழை பெய்து ஏரி, குளம், குட்டைகளில் தண்ணீர் நிரம்ப வேண்டுமென்றார். அடுத்த நொடியே மழை பெய்து ஏரி, குளம், குட்டைகள் நிரம்பியது. மூன்றாவதாக என்னுடைய கிராமம் சொர்க்கமாக மாற வேண்டுமென்றார். அதே போல அந்த கிராமம் சொர்க்கமாக மாறியது. அந்த கிராமத்தில் வசித்த எல்லோரும் மக்கள் செழிப்பாக வாழ்ந்தார்கள்.

ஆனால் எதிர் வீட்டில் இருந்தவன் மட்டும் ஒரே நாளில் எப்படி இவன் மாளிகை வீடு கட்டினான். ஊரைச் சொர்க்கமாக மாற்றினான் என்று பொறாமையோடு அந்த ஏழை முதியவரிடம் காரணத்தை கேட்டான். அவரும் யதார்த்தமாக நடந்த சம்பவத்தை சொன்னார். எனக்கும் அந்த மந்திர கண்ணாடி வேண்டுமென்றான். அந்த முதியவர்கள் நல்ல மனிதர் என்பதால் அந்த மந்திர கண்ணாடியை எதிர் வீட்டுக்காரனிடம் கொடுத்தார்.

அந்த எதிர் வீட்டுக்காரர் மந்திரக் கண்ணாடியை அணிந்து கொண்டு சப்பையாக இருக்கும் என் மூக்கை நீளமான மூக்காக மாற்ற வேண்டுமென்றான். உடனே ஒரு மீட்டர் நீளத்திற்கு மூக்கு நீளமானது. அதையடுத்து எனக்கு மூக்கே வேண்டாமென்றான். உடனே மூக்கு இல்லாமல் போனது. மூன்றாவதாக முன்பு இருந்த பழைய மூக்கே வேண்டுமென்றான். அதே போல பழைய மூக்கை போல ஆனது.

விழா மேடை
விழா மேடை
எம். விஜயகுமார்

அதன் பிறகு கூறியது நிறைவேறவில்லை. மூன்று முறையும் சுயநலத்திற்காக கேட்டான். அந்த சுயநலத்தால் யாருக்கும் நன்மை கிடைக்கவில்லை. பேராசை பிடித்தவர்களுக்கு எதுவும் கிடைக்காது. இந்த பேராசை பிடித்த எதிர் வீட்டுக்காரரைப் போல தமிழகத்தில் எதிர்க்கட்சி தி.மு.க செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பொய் பிரசாரங்கள் செய்து வருகிறது'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு