இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்காக, தமிழக அரசு சார்பில் 1,300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, பச்சரிசி, வெள்ளம், கரும்பு என 21 பொருள்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பை தமிழகத்திலுள்ள அனைத்துக் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போர் ஆகியோருக்கு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டபடி அனைவருக்கும் வழங்கப்பட்டுவருகிறது. இது ஒருபுறம் நடந்து கொண்டிருந்தபோதே பொங்கல் பரிசின் மீதான விமர்சனங்களும் வந்தபடியே இருந்தன.

தற்போது பொங்கல் பண்டிகை முடிந்துள்ளதை அடுத்து தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் பரிசுத்தொகுப்புக்காக ஒதுக்கப்பட்டிருந்த நிதியில் முறைகேடு நடந்துள்ளதாக தி.மு.க அரசின் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எடப்பாடியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி கூறுகையில், பொங்கல் பரிசுத்தொகுப்பில் தரமற்ற பொருள்களை வழங்கியிருப்பதாகவும், சில இடங்களில் 16 பொருள்களே வழங்கியுள்ளனர் என்று விமர்சித்ததுடன், இதற்காக ஒதுக்கப்பட்டிருந்த ரூ.1,300 கோடி நிதியில் முறைகேடாக ரூ.500 கோடி ஊழல் நடந்திருப்பதாக தி.மு.க அரசைக் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் இந்த ஆண்டு விவசாயிகளிடமிருந்து நேரடியாகத் தமிழக அரசு கரும்பு கொள்முதல் செய்திருந்ததில் கரும்பு ஒன்றுக்கு 33 ரூபாய் அரசு நிர்ணயித்திருந்தும், விவசாயிகளுக்குக் கரும்பு ஒன்றுக்கு 16 ரூபாய் மட்டுமே அரசு வழங்கியுள்ளது என்றும், கரும்பு கொள்முதலில் மொத்தமாக 34 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருக்கிறார்.