Published:Updated:

Fact Check: பொள்ளாச்சி விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாக பரவும் தகவல் உண்மையா?

முதல்வர் பேசியதாக குறிப்பிட்டு, நியூஸ் ஜெ செய்தி நிறுவன லோகோ கொண்ட செய்தி கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அது உண்மையா என்று ஃபேக்ட் செக் செய்தோம்.

தி.மு.க துணை பொதுச் செயலாளார் ஆ.ராசா முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து பேசிய வீடியோ கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆ.ராசாவின் பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்தது. தி.மு.க தலைவர் ஸ்டாலின்,` கண்ணியக் குறைவான பேச்சை கட்சித் தலைமை ஏற்காது' என்று சூசகமாக அறிவுரைக் கூறினார்.

முதலமைச்சர் காயப்பட்டிருந்தால் மன்னிப்பு கோருகிறேன் - ஆ.ராசா

ஆ.ராசாவின் இந்த பேச்சை குறிப்பிட்டு, பரப்புரையில் கண்கலங்கி பேசினார் எடப்பாடி பழனிசாமி.`` எனது தாயைப் பற்றி கீழ்த்தரமாக பேசியிருக்கிறார் ஆ.ராசா. நான் சாதரண குடும்பத்தில் இருந்து வந்தவன். அதனால் தான் என்னைப் பற்றி இப்படி பேசுகிறார்கள். என் தாய் கிராமத்தில் வாழ்ந்தவர். விவசாயம் செய்தவர். இரவு பகலும் பாடுபட்டவர். அவர் இறந்துவிட்டார். அவரைப் பற்றி தரக்குறைவாக, இழிவாக பேசியிருக்கிறார்கள். முதலமைச்சருக்கே இந்த நிலை என்றால், நாளை தி.மு.க ஆட்சிக்கு வந்தால் பெண்களின் நிலை என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்கள். தாயைப் பற்றியே தரக்குறைவாக பேசியிருக்கிறார்கள். தாயப் பற்றி யார் தரக்குறைவாக பேசினாலும் அவர்களை ஆண்டவன் தண்டிப்பான் ” என்றார்.

முதலமைச்சரின் இந்த பேச்சு பரவலாக அனைத்து ஊடகங்களிலும் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையில், முதல்வர் பேசியதாக குறிப்பிட்டு, நியூஸ் ஜெ செய்தி நிறுவன லோகோ கொண்ட செய்தி கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில், `` அ.தி.மு.க-வினர் அம்மாவின் வளர்ப்பு. பணத்திற்கு ஆசைப்படும் சில பெண்களைக் கொண்டு ஜோடிக்கப்பட்டது தான் பொள்ளாச்சி வழக்கு” என்று முதலமைச்சர் பேசியதாக சர்ச்சைக்குரிய வகையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Fact Check
Fact Check

Fact Check:

முதலமைச்சர் உண்மையில் அப்படி பேசினாரா என்று ஃபேக்ட் செக் செய்தோம். அவர் பேசிய வீடியோக்கள் மற்றும் களத்தில் இருந்த நமது நிரூபர்கள் மூலம் ஆராய்ந்ததில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அப்படி பேசவில்லை என்று தெரிகிறது.

மேலும் பரவி வரும் அந்த கார்டு, நியூஸ் ஜெ செய்தி நிறுவனத்தின் செய்தி கார்டைப் பயன்படுத்தி போலியாக உருவாக்கப்பட்டது என்று தெரிய வந்திருக்கிறது. நியூஸ் ஜெ நிறுவனத்தின் கார்டில் உள்ள எழுத்து வடிவமும், வடிவமைப்பும் இந்த பொய் செய்தியை பரப்பிய கார்டில் வேறுபடுகிறது.

எனவே இந்த தகவல் பொய்யானது என்ற முடிவுக்கு நம்மால் வர முடிகிறது. பொய் செய்திகள் பரவுவதை தடுக்கும் பொருட்டு அந்த, கார்டை மக்கள் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு