Published:Updated:

குமரி: `இலங்கையில் நல்ல நிலையிலுள்ள படகுகளை எடுத்து வந்துவிட்டோம்!’ - முதல்வர் பழனிசாமி

செய்தியாளர் சந்திப்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி
செய்தியாளர் சந்திப்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

`சி.பி.ஐ விசாரணை நடத்த மாநில அரசு அனுமதி வேண்டும் எனச் சில மாநிலங்கள் தீர்மானம் எடுத்திருப்பதால், நாமும் எடுக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. ஒருகாலத்தில் அப்படி வந்தால் அது குறித்துப் பரிசீலிப்போம்’ என்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், ``பள்ளிகள் திறப்பது குறித்து நேற்றுதான் கருத்துக் கேட்புக் கூட்டம் நடந்திருக்கிறது. அது சம்பந்தமாக உயரதிகாரிகள், சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் ஆய்வு செய்துகொண்டிருக்கிறார்கள். அந்த ஆய்வின்படி முடிவு விரைவாக அறிவிக்கப்படும்.

இலங்கையில் நல்ல நிலையிலுள்ள படகுகளை நமது ஆட்கள் எடுத்து வந்துவிட்டார்கள். எடுத்துக்கொண்டு வர முடியாத நிலையிலுள்ள படகுகள் அங்கே நின்னுக்கிட்டு இருக்கு. அதை அங்கேயுள்ள நீதிமன்றம் அழிக்கச் சொல்லியிருக்காங்க. நெய்யார் இடத்துக்கரை கால்வாய் குறித்து கேரளா அரசிடம் பேச்சுவார்த்தை ரெண்டு மூணு கட்டமா நடந்துக்கிட்டிருக்கு. நம்முடைய விவசாயிகள் பாதிக்கப்படுவதை கேரள அரசிடம் கூறியிருக்கிறோம். அதுமட்டுமல்ல, இரண்டு மாநிலங்களுக்குமான நதி நீர்ப் பிரச்னை பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறோம்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்திலுள்ள பிரச்னைகள் அரசின் கவனத்துக்கு வந்திருக்கின்றன. அதற்கு வல்லுநர்குழு மூலம் தீர்வு காணப்படும். `சி.பி.ஐ விசாரணை நடத்த மாநில அரசு அனுமதி வேண்டும்’ எனச் சில மாநிலங்கள் தீர்மானம் எடுத்திருப்பதால் நாமும் எடுக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. ஒருகாலத்தில் அப்படி வந்தால் அது குறித்துப் பரிசீலிப்போம்.

குமரியின் அருகில் திருவனந்தபுரம் இருக்கிறது. அங்கு நோய்ப் பரவல் அதிகமாக இருக்கிறது. திருவனந்தபுரத்திலிருந்து குமரி வருபவர்களை தீவிரமாகக் கண்காணிக்க கேட்டுக்கொண்டிருக்கிறேன். கன்னியாகுமரி சுற்றுலாதலத்தில் இன்று முதல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றுக்கு படகு இயக்கப்படும். அணை புனரமைப்பு மற்றும் சீரமைப்புப் பணியில் சிற்றாறு மற்றும் பேச்சிப்பாறை அணைகள் சீரமைக்கப்பட்டிருக்கின்றன.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் கோரிக்கையினபடியும், மக்கள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாகவும் பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சியில் ஒரே பெண் அமைச்சர் லூர்தம்மாள் சைமன் பெயர் கன்னியாகுமரி அருகேயுள்ள மணக்குடி பாலத்துக்கு சூட்டப்படும் எனத் தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோல நாகர்கோவில் வார்டு எண் 18 கோட்டாறு இடலாக்குடி சந்தி தெருவுக்கு, சுதந்திரப் போராட்ட வீரர் சதாவதானி செய்குத்தம்பி பாவலர் பெயர் சூட்டப்படுகிறது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு