Published:Updated:

`இவர்கள் இப்படிச் செய்வார்கள் என நினைக்கவில்லை!'-ஆலோசனைக் கூட்டத்தில் கொதித்த எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க தலைமைக் கழக கூட்டம்
அ.தி.மு.க தலைமைக் கழக கூட்டம்

அ.தி.மு.க-வினர் பெரிய அளவில் எதிர்பார்த்த இடங்களைப் பிடிக்கமுடியாமல் போனதற்கு என்ன காரணம் என்பதை விவாதிக்கச் சென்னையில் நேற்றிரவு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

``நாம் ஆளும் கட்சியாக இருக்கிறோம். இத்தனை எம்.பி, எம்.எல்.ஏ இருந்தும் ஏன் உள்ளாட்சித்தேர்தலில் பின்னோக்கிச் சென்றோம். இதற்கு என்ன காரணம் வைத்திருக்கிறீர்கள். இந்தக் கூட்டணிக் கட்சிகள் இப்படி நடந்துகொள்வார்கள் என்று கொஞ்சம்கூட நினைக்கவில்லை. இப்படிப்பட்டவர்களை வைத்துக்கொண்டு எதிர்வரும் தேர்தல்களை எப்படிச் சந்திக்கப் போகிறோம் என்று தெரியவில்லை'' என அவசர ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி கொந்தளிப்பை வெளிப்படுத்தினார் என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.

ஓ.பி.எஸ். எடப்பாடி பழனிசாமி
ஓ.பி.எஸ். எடப்பாடி பழனிசாமி

உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் தி.மு.க வேட்பாளர்கள் அதிகளவில் வெற்றி பெற்றுள்ளனர். அ.தி.மு.க-வினர் பெரிய அளவில் எதிர்பார்த்த இடங்களைப் பிடிக்கமுடியாமல் போனதற்கு என்ன காரணம் என்பதை விவாதிக்கச் சென்னையில் நேற்றிரவு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டணிக் கட்சிகள் மீது கடுமையான கோபத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிப்படுத்தியதாகச் சொல்கிறார்கள் கட்சி நிர்வாகிகள்.

``உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது தி.மு.கவினருக்கும் வாக்கு எண்ணும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனாலும் நேரம் ஆக ஆக தி.மு.க வேட்பாளர்கள், அ.தி.மு.க வேட்பாளர்களைவிட அதிக இடங்களில் வெற்றி பெற்றதாகத் தகவல் வெளியானது.

ஓ.பி.எஸ், எடப்பாடி பழனிசாமி
ஓ.பி.எஸ், எடப்பாடி பழனிசாமி

இந்தநிலையில் கடைசிக்கட்ட நிலவரப்படி தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் தி.மு.க வேட்பாளர்களே அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக மாநிலத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்தது. நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் தலைமைக்கும் தொண்டர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது" என விவரித்த அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர்,

``உள்ளாட்சித் தேர்தலில் 70 விழுக்காடு இடங்களை அ.தி.மு.க பிடிக்கவேண்டும் என்று பல வியூகங்களோடு தேர்தலைச் சந்தித்தோம். 25-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் என மாவட்டங்களில் முகாமிட்டுத் தேர்தல் வேலையைப் பார்த்தார்கள். ஆனால், எதிர்பார்த்த அளவில் வெற்றி வாய்ப்புகள் இல்லை என்பதால் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார் முதல்வர்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றிருந்திருந்தால் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான தேர்தல் தேதியை அறிவிக்கும் முடிவில் தலைமை இருந்தது. ஏன் இப்படியொரு பின்னடைவு என முக்கிய அமைச்சர்களிடம் முதல்வர் கேட்டிருக்கிறார். அதற்கு அவர்கள், `கூட்டணிக் கட்சியான பா.ம.க, பா.ஜ.க, தே.மு.தி.க ஆகிய கட்சிகளின் நிர்வாகிகள் பெரிதாக வேலை செய்யவில்லை. அவர்கள் சில விஷயங்களை மனதில் வைத்துக்கொண்டு நமக்கு எதிராகச் செயல்பட்டனர்.

அதேபோல் கூட்டணிக் கட்சிகள் செய்த கோஷ்டி மோதல்களும் உட்கட்சி அரசியலும் முக்கியக் காரணம் எனப் பட்டியலிட்டுள்ளனர். அதற்கு முதல்வர், `எந்தெந்த மாவட்டங்களில் இதுபோன்று நடந்தது என்பதை ஒரு பட்டியலை எடுங்கள். நாம் வலுவான கூட்டணியை அமைத்திருக்கிறோம். எப்படிப் பார்த்தாலும் அதிக இடங்களைப் பிடித்துவிடுவோம் என்று நம்பித்தான் களமிறங்கினோம். ஆனால், இவர்கள் இப்படிச் செய்வார்கள் என நினைக்கவில்லை' எனப் பேசினார்.

எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வத்துடன் ராமதாஸ்
எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வத்துடன் ராமதாஸ்

இதைத் தொடர்ந்து முக்கிய நிர்வாகி ஒருவர் பேசுகையில், `இவர்கள் இப்படி நடந்துகொண்டால் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை எப்படிச் சந்திக்கப் போகிறோம் என்று தெரியவில்லை' எனவும் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இதன்பின்னர் பேசிய துணை முதல்வர், `விரைவில் நடவடிக்கை எடுப்போம்' எனக் கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்" என விவரித்து முடித்தனர்.

தொடர்ந்து, மாவட்ட ஊராட்சித் தலைவர், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர், மாவட்ட ஒன்றியத் தலைவர், மாவட்ட ஒன்றிய துணைத் தலைவர் பதவிகளுக்காக நடைபெறும் மறைமுகத் தேர்தலில் வெற்றி பெறுவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு