Published:Updated:

`ஆட்சியைக் கவனிப்பதா..இல்லை உங்களைக் கண்காணிப்பதா?!' -அமைச்சர்களிடம் கடுகடுத்த எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

ஆளும்கட்சி அமைச்சர்கள் பலரும் ரஜினிக்கு எதிராக விமர்சனம் செய்த நிலையில், ராஜேந்திரபாலாஜி மட்டும் ரஜினி மற்றும் சசிகலாவுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

``அம்மா இருந்தபோது கட்டுக்கோப்பாக இருந்த நீங்கள், இப்போது ஏன் சர்ச்சையை உண்டாக்கும் விதத்தில் பேசுகிறீர்கள். இதை உடனே நிறுத்துங்கள்'' - என்று அமைச்சர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து எச்சரித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

அண்மையில் நடந்த துக்ளக் பொன்விழாவில், பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதை எதிர்த்து திராவிடர் கழகம், தி.மு.க உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களுடைய கண்டனத்தைப் பதிவு செய்திருந்தன. ரஜினியின் கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அ.தி.மு.க அமைச்சர்கள் சிலரும் எதிர்க் கருத்தைப் பதிவு செய்திருந்தனர். ஆனால், அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மட்டும் ரஜினி மற்றும் சசிகலாவுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

கடந்த உள்ளாட்சித்தேர்தலின் போது தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், பிரசாரம் செய்தபோது, `பா.ஜ.க கூட்டணியில் நாங்கள் இல்லை' எனச் சொல்லும் வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியது. அதைத்தொடர்ந்து முன்னாள் எம்.பி அன்வர்ராஜா, `சி.ஏ.ஏ-வை ஆதரித்ததால்தான் இஸ்லாமியர்கள் அ.தி.மு.க-வுக்கு வாக்களிக்கவில்லை’ என்று வெளிப்படையாகவே கருத்து தெரிவித்தார். இவர்களின் கருத்துக்கு பா.ஜ.க-வினர் கடும் விமர்சனத்தை முன்வைத்தனர்.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

பெரியார் குறித்த ரஜினியின் பேச்சுக்குப் பதில் கொடுத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ``ரஜினி, பெரியார் குறித்து தவறாக ஏதும் பேசவில்லை. என்னைப் பொறுத்தவரை பெரியார் குறித்து ரஜினி பேசி இருப்பது யாருக்கும் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அவர் நடந்த நிகழ்வை மட்டுமே கூறியிருக்கிறார். பிடித்தவர்கள் அவரது கருத்தை ஏற்றுக் கொள்ளட்டும். பிடிக்காதவர்கள் அமைதியாக இருந்து கொள்ளட்டும். ரஜினியை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்வது தேவையற்ற செயல்`` என்றார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

கூடவே, ``சசிகலா விரைவில் சிறையிலிருந்து வர வேண்டும் என்பதே எனது எண்ணம். இதற்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்`` என்றார். இந்தப் பேச்சுதான் அ.தி.மு.க தலைமையைக் கோபப்படுத்தியதாகச் சொல்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதையடுத்து, நேற்று மாலை முதல்வ‌ர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளைச் சிறப்பான முறையில் கொண்டாடுவது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, சர்ச்சையாகப் பேசும் அமைச்சர்களை மட்டும் தனித்தனியாக அழைத்துப் பேசியிருக்கிறார். அப்போது, `அம்மா இருந்தபோது கட்டுக்கோப்பாக இருந்த நீங்கள், இப்போது ஏன் சர்ச்சையை உண்டாக்கும்விதத்தில் பேசுகிறீர்கள்.

சசிகலா
சசிகலா

இதை உடனே நிறுத்துங்கள். ஒவ்வொருவரும் தனித்தனியாகப் பேசுவதால் கூட்டணிக் கட்சிகளுக்குள் பல்வேறு குழப்பங்கள் எழுந்து கொண்டே இருக்கின்றன. ஆட்சி நடத்துவதில் பல்வேறு சிரமங்கள் இருக்கின்றன. இதில் நீங்கள் ஆளாளுக்கு ஒவ்வொரு கருத்துகளைச் சொல்வதால் நாங்கள் ஆட்சியைக் கவனிப்போமா இல்லை, உங்களைக் கண்காணிப்பதா? பொதுவெளியில் பேசுவதை நிறுத்துங்கள்.

இனி கட்சி தொடர்பாக ஜெயக்குமார் உட்பட ஒருசிலர் மட்டும் பேச அனுமதிக்கப்பட இருக்கிறார்கள். யார் யார் பேசவேண்டும் என்கிற அறிக்கை இரண்டொரு நாளில் வெளிவரும். அவர்கள் மட்டுமே பேசுவார்கள். அவரைத்தவிர வேறு யாரும் பேசக்கூடாது' என்று கறாரான உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார் எடப்பாடி.

ஒவ்வொருவரும் தனித்தனியாகப் பேசுவதால் கூட்டணிக் கட்சிகளுக்குள் பல்வேறு குழப்பங்கள் எழுந்துகொண்டே இருக்கின்றன.
எடப்பாடி பழனிசாமி

முதல்வரின் கோபத்தைக் கண்ட அமைச்சர்களும் அமைதியாகிவிட்டனர். இனி வரும் நாள்களில் ஆளும்கட்சி சார்பாக யார் யாரெல்லாம் கருத்து தெரிவிக்க வேண்டும் என்பது குறித்த அறிக்கையை வெளியிட இருக்கிறது அ.தி.மு.க தலைமைக் கழகம்.

அடுத்த கட்டுரைக்கு