Published:Updated:

அ.தி.மு.க: எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி... பன்னீர் செல்வத்தின் அடுத்த அஸ்திரம் என்ன?

ஓ.பி.எஸ். - இ.பி.எஸ்.
ஓ.பி.எஸ். - இ.பி.எஸ்.

இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் வெளிப்படையாக கோஷங்களால் மோதிக்கொண்டனர். வெளியில் மட்டுமல்ல, கூட்டம் நடந்த அரங்கத்துக்குள்ளும் ஜெயலலிதா சமாதி அருகிலும்கூட அனல் பறந்தது.

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி ஒருவழியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அ.தி.மு.க முகாமில் கடந்த நான்கு நாள்களாக நடந்த களேபரத்துக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், ''பன்னீர்செல்வம் இதோட விடமாட்டார்'' என்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள்.

தேர்தல் முடிவுகள் வெளியான நாள் முதலாகவே, எதிர்க்கட்சித் தலைவராக யார் வருவது என்கிற விவாதம் அதிமுகவில் சூடுபிடித்தது. ''முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்தோம். அவரால், ஆட்சியைப் பிடிக்கமுடியவில்லை அதோடு அவர் ஒதுங்கிக்கொள்ள வேண்டும். எதிர்க்கட்சித் தலைவராக, கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள்தான் வரவேண்டும். அதுதான் நடைமுறை'' என ஓ.பி.எஸ் தரப்பும், ''கட்சி இந்தளவுக்கு வெற்றி பெற்றதற்கு காரணமே முதல்வர் எடப்பாடியின் பிரசாரம்தான். அதனால் எடப்பாடி பழனிசாமிதான் எதிர்க்கட்சித் தலைவராக வரவேண்டும்'' என இ.பி.எஸ் தரப்பும் மல்லுக்கட்ட ஆரம்பித்தார்கள். ஆனால், ''எவ்வளவோ விட்டுக் கொடுத்துவிட்டேன், இந்தமுறை விடமாட்டேன்'' என ஓ.பி.எஸ் விடாப்பிடியாக நிற்க, நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் எல்லாம் தோல்வியிலேயே முடிந்தன.

ஓ. பன்னீர் செல்வம்
ஓ. பன்னீர் செல்வம்

அதனைத் தொடர்ந்துதான், எம்.எல்.ஏக்கள் கூட்டத்தைக் கூட்டித் தேர்வு செய்துகொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டு, கடந்த 7-ம் தேதி மாலை சென்னை இராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால், எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் விதமாக அமைந்துவிட்டது அந்தக் கூட்டம். இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் வெளிப்படையாக கோஷங்களால் மோதிக்கொண்டனர். வெளியில் மட்டுமல்ல, கூட்டம் நடந்த அரங்கத்துக்குள்ளும் ஜெயலலிதா சமாதி அருகிலும் கூட அனல் பறந்தது.

''வன்னியர்களுக்குக் கொடுக்கப்பட்ட 10.5 சதவிகித இட ஒதுக்கீடு, தே.மு.தி.க போன்ற கூட்டணிக் கட்சிகளை கழற்றிவிட்டது ஆகிய விஷயங்களில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரிடம் விவாதிக்காமல் எடுக்கப்பட்ட எடப்பாடியின் முடிவுதான் இந்தத் தேர்தல் தோல்விக்குக் காரணம். ஆனால், இப்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் வேண்டுமென்றால் என்ன நியாயம்'' என ஓ.பி.எஸ்ஸின் ஆதரவு நிர்வாகிகளான மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் கொந்தளித்துள்ளனர். ஆனால், எடப்பாடியின் ஆதரவாளர்கள், ''கட்சி இந்தளவுக்கு வெற்றி பெற்றதே எடப்பாடியால்தான். செலவு செய்ததும் நாங்கள்தான் அதனால், எடப்பாடி பழனிசாமிதான் எதிர்க்கட்சித் தலைவர் ஆகவேண்டும்'' என முரண்டுபிடித்துள்ளனர். அப்போது, ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவாக எந்த அணியிலும் இல்லாத கடம்பூர் ராஜூகூட ''எவ்வளவு நாளைக்குத்தான் அவரே விட்டுக்கொடுப்பார்'' என ஓ.பிஎஸ்ஸுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். ஆனால், சுமுக முடிவு எதுவும் எட்டப்படாததால் கூட்டம் இன்று காலை ஒத்திவைக்கப்பட்டது.

அ.தி.மு.க: எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி... பன்னீர் செல்வத்தின் அடுத்த அஸ்திரம் என்ன?

இந்தநிலையில், இன்று முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் கூட்டம் நடக்குமா, நடக்காதா என சந்தேகம் எழுந்தது. ஆனால், கடைசி நேரம் பெறப்பட்ட அனுமதியுடன் இன்று கூட்டம் தொடங்கியது. இதில் ஒரத்தாடு எம்.எல்.ஏவும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கம், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ ஆகியோர் உடல்நலன் சரியில்லாததால் பங்கேற்கவில்லை. இதனால் ஒ.பி.எஸ் – இ.பி.எஸ் என மொத்தம் 62 எம்.எல்.ஏக்களுடன் கூட்டம் தொடங்கியது.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை நடந்த கூட்டத்துக்கு சிறிதும் குறைவில்லாமல் இன்றும் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் ஆதரவு நிர்வாகிகள் மத்தியில் கடுமையாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில், ''சரி எனக்கு வேண்டாம் உங்களுக்கும் எனக்கும் பொதுவாக, தனபாலை எதிர்க்கட்சித் தலைவராக ஆக்கலாம்'' என ஓ.பி.எஸ் தரப்பில் இருந்து முன்மொழியப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு எடப்பாடி தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. முன்னாள் சபாநாயகர் தனபாலும் ''என்னை எந்த வம்பிலும் மாட்டிவிடாமல் உங்களுக்குள்ளாகவே பேசி முடிவெடுத்துக்கொள்ளுங்கள்'' எனச் சொல்லி ஒதுங்கிவிட்டதாகக் கூறப்பட்டுகிறது.

”அவர் சொந்தக் காசையா தந்தாரு?” - ஆத்திரப்பட்ட பன்னீர்; கட்டுப்படாத எடப்பாடி!

ஆனால், எடப்பாடி தரப்புக்கோ பெருவாரியான எம்.எல்.ஏக்களின் ஆதரவு ஏற்கெனவே கிடைத்துவிட்டது. அவர்களிடம் கையெழுத்து வாங்கியும் வைத்துவிட்டனர். ஓ.பி.எஸ் கையெழுத்துப் போட்டால் போதும் பிரச்னை முடிந்தது என அவரைச் சமாதானப்படுத்தி கையெழுத்து வாங்குவதிலேயே குறியாக இருந்திருக்கின்றனர் எடப்பாடியின் ஆதரவாளர்கள். ஓ.பி.எஸ் தரப்பில் ஏதாவது பேச ஆரம்பித்தால் அவர்களை விட இரண்டு மடங்கு எடப்பாடி தரப்பு வேகம் கட்ட, ஒரு கட்டத்தில் பொறுமை இழந்துள்ளார், பன்னீர்செல்வம். வேகவேகமாகக் கையெழுத்தைப் போட்டுவிட்டு, யார் முகத்தையும் பார்க்காமல் இரு கைகூப்பி வணங்கியபடியே, அரங்கத்தை விட்டு முதல் ஆளாக வெளியே வந்தார். அவரைத் தொடர்ந்து எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவராக வெளியே வர கடைசியாக எடப்பாடி பழனிசாமி வெளியே வந்தார். சரியாக அவர், வெளியே வரும்போது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி என்கிற கோஷம் விண்ணைப் பிளந்தது. அதேவேளை ஓ.பி.எஸ் வெளியே செல்லும்போது கடந்த வெள்ளிக்கிழமை போல எந்தக் கோஷமும் இல்லை.

அ.தி.மு.க: எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி... பன்னீர் செல்வத்தின் அடுத்த அஸ்திரம் என்ன?

இதுகுறித்து நம்மிடம் பேசிய எடப்பாடி தரப்பு நிர்வாகிகள் சிலர்,''எம்.எல்.ஏக்கள் ஆதரவு எல்லாமே எடப்பாடியாருக்குத்தான் இருக்கு. ஒரு மரியாதைக்காகத்தான் அவரிடம் பேசவேண்டியிருந்தது. எப்படியும் அவர் கையெழுத்துப் போட்ருவாருன்னு எங்களுக்குத் தெரியும். இத அன்னைக்கே போட்ருந்தா கட்சி பேராவது கெடாம இருந்திருக்கும்'' என்று சொல்ல, '' வருஷத்துக்கு இருபது நாள்தான் அசெம்ப்ளி கூடும். எதிர்க்கட்சித் தலைவர் பதவி போனா போகட்டும். சில துரோகிகளாலதான் எங்க ஐயா ஏமாந்திட்டாரு..இனிமே கட்சியில யாரையும் அவர் நம்புறது இல்ல. இப்படியே விடப்போறதும் இல்ல. கட்சியைக் கைப்பற்ற யாரைச் சந்திச்சு என்ன பண்ணனும்னு அவருக்குத் தெரியும். அதற்கான வேலைகளை அவர் ஏற்கெனவே தொடங்கிட்டாரு'' என சூசகமாகப் பேசுகிறார்கள்.

இரண்டு பேருக்கும் பொதுவான சிலரோ,''கையில இருந்த முதல்வர் பதவியை விட்டுட்டு இப்போ ஒவ்வொரு விஷயத்துக்கும் கெஞ்சிட்டு இருக்காரு. எடப்பாடி லாபிக்கு முன்னாடி அவர் ஜெயிக்குறது எல்லாம் சாதாரண விஷயம் இல்ல. அவரைப் பார்க்க பாவமாவும் இருக்கு. ஆனா, தன்னை நம்பி வந்தவங்களுக்கு எதுவுமே செய்யாம விட்டதாலதான் இன்னைக்கு அவர் பின்னாடி யாரும் இல்லை'' என்கிறார்கள் அனுதாபத்தோடு.

இப்போது உள்ள சூழல்களைப் பார்த்தால் அதிமுகவில் அடுத்தத்து பல அதிரடிகள் நிகழும் என்றே தெரிகிறது.

அடுத்த கட்டுரைக்கு