Published:Updated:

உள்ளாட்சித் தேர்தல்: `கள்ள ஓட்டுப் போடுவதிலே வல்லவர்கள் திமுகவினர்!’ - எடப்பாடி பழனிசாமி தாக்கு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி ( தே.சிலம்பரசன் )

``இந்த ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. திமுக-வைப் பொறுத்தவரை கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக சரித்திரமே கிடையாது. மாணவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைவரையும் ஏமாற்றிய கட்சி திமுக ஒன்றுதான்." - எடப்பாடி பழனிசாமி.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

புதிதாகப் பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலின் வேட்புமனுக்கள் பரிசீலனை முடிந்து, சின்னங்களும் ஒதுக்கப்பட்டு, பிரசாரக் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. அரசியல் கட்சியினர், தங்களது வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் முனைப்புக் காட்டத் தொடங்கியுள்ளனர். அந்த வரிசையில் நேற்று (27.09.2021) விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ``திமுக, ஆட்சி பொறுப்பேற்று 130 நாள்களுக்கு மேலாகிறது. இந்த நாள்களில் 202 அறிவிப்புகளை நிறைவேற்றியதாகச் சொல்கிறார்கள். அப்படிப் பார்த்தால் எத்தனை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும்?

சி.வி.சண்முகம் - எடப்பாடி பழனிசாமி
சி.வி.சண்முகம் - எடப்பாடி பழனிசாமி
தே.சிலம்பரசன்

தேர்தலின்போது 505 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு, கூடுதலாக 20 என மொத்தம் 525 அறிவிப்புகள் திமுக-வால் அறிவிக்கப்பட்டன. அவற்றில் இப்போது 202 அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டதாகச் சொல்கிறார்கள். மூன்று, நான்கு அறிவிப்புகள் மட்டுமே செயல்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. இவை வெறும் சாதாரண அறிவிப்புகள். இவற்றைத்தான் முதல்வர் ஸ்டாலின் ஊடகங்களில் வெளியிட்டிருக்கிறார். இப்போது, இந்த ஆட்சியில் சட்ட, ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு போன்ற சம்பவங்கள் உச்சத்துக்குப் போய்க்கொண்டிருக்கின்றன. ரெளடிகளைக் கைதுசெய்வதாக டி.ஜி.பி சொல்கிறார். இவ்வளவு நாள் என்ன பண்ணுனீங்க..? அம்மா ஆட்சி சட்டப்படி இயங்கிய காரணத்தால்தான், இந்தியாவிலேயே சட்ட, ஒழுங்கு சிறப்பாக உள்ள மாநிலம் என்ற விருது பெற்றோம். ஆனால் இன்று, சட்ட, ஒழுங்கு சீர்குலைந்து போயிருக்கிறது.

நெல் குவிண்டாலுக்கு 2,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். ஆனால் சன்ன ரகத்துக்கு 30 ரூபாயும், பொது ரகத்துக்கு 50 ரூபாயும் அறிவித்திருக்கிறார். அதேபோலத்தான் கரும்புக்கும்... எப்படியெல்லாம் விவசாயிகளை ஏமாற்றியிருக்கிறார்கள் என இதன் மூலம் மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். எப்போது தேர்தல் வந்தாலும்... பொய்யான அறிவிப்புகள், வாக்குறுதிகளைத் தருவார்கள். தேர்தல் முடிந்த பிறகு அதை கைவிட்டுவிடுவார்கள். ஆனால், மக்களின் எண்ணங்களைப் புரிந்து சேவை செய்த அரசுதான் அம்மாவின் அரசு.

உள்ளாட்சி உய்யலாலா!

மிகவும் பின்தங்கிய இந்த விழுப்புரம் பகுதிக்கு மாணவர்கள் நலன் கருதி பல்கலைக்கழகம் வேண்டும் என்று என்னிடத்தில் தொடர்ந்து கோரிக்கை வைத்தார் சி.வி.சண்முகம். அதன்படி இங்கு அம்மா பெயரில் பல்கலைக்கழகமும் கொண்டுவந்தோம்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

பல்கலைக்கழகம் இயங்கும் நிலையில் இருக்கும்போது திமுக ஆட்சிக்கு வந்தது. ஒரு நல்ல அரசு என்றால்... மக்களுக்காகக் கொண்டு வந்த திட்டத்தைச் செயல்படுத்தியிருக்க வேண்டும். அதற்கு முற்றிலும் மாறான ஒரு செயலை செய்திருக்கிறது. இன்று உயர்கல்வித்துறை அமைச்சராக இருப்பவர் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பொன்முடி. அமைச்சர்கள் ஒவ்வொருவரும் அவர்களது மாவட்ட மக்கள்நலனுக்காகத் திட்டங்களைக் கொண்டு வருகிறார்கள். ஆனால் இங்குள்ள உயர்கல்வித்துறை அமைச்சரோ... இந்தப் பல்கலைக்கழகத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைத்திருக்கிறார். இத்தகு பெருமை பொன்முடி அவர்களையே சாரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த விழுப்புரம் மாவட்ட மக்கள் மீதான அவரது அக்கறையை இதன் மூலமாக எண்ணிப்பார்க்க வேண்டும். ஆனால், சட்டக் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி போன்றவற்றை இந்த மாவட்டத்தில் ஏற்படுத்தி தந்தது அம்மா அரசுதான். 2006 - 2011 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில், "திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும்" என்று திமுக-வினர் அறிவித்தார்கள். அதன்படியேதான் எங்கள் ஆட்சியின்போது விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்தோம். ஆனால், இன்று அவதூறான தகவல்களை மக்களிடம் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள் திமுக-வினர்.

உள்ளாட்சித் தேர்தல்: லட்சக்கணக்கில் ஏலம்போன ஊராட்சித் தலைவர் பதவிகள்?! - விழுப்புரத்தில் பரபரப்பு

ஐந்து சவரனுக்குள்ளாக கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் அடகு வைத்த நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றார் ஸ்டாலின். ஆனால் தள்ளுபடி செய்யவில்லை. இப்படித்தான் என் மக்களை ஏமாற்றுகின்றனர் திமுக-வினர். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் தருவோம் என்றார் ஸ்டாலின். இதுவரை தரவில்லை. கேட்டால் மௌனம் சாதிக்கிறார். திமுக-வைப் பொறுத்தவரை கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய சரித்திரமே கிடையாது. இப்போதும் நிறைவேற்ற மாட்டார்கள்.

எடப்பாடி பழனிசாமி-ஸ்டாலின்
எடப்பாடி பழனிசாமி-ஸ்டாலின்

அதேபோல மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி என்றார். ஆனால் இதுவரை அதைப் பற்றி வாயைக்கூடத் திறக்கவில்லை. இவர்கள் முதியோரையும் விட்டுவைக்கவில்லை. முதியோர் உதவித்தொகையை உயர்த்தித்தருவதாகக் கூறியும்... இதுவரை உறுதி தரவில்லை. மாணவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைவரையும் ஏமாற்றிய கட்சி திமுக ஒன்றுதான். இன்று மக்களைத் தேடி மருத்துவம் என்கிறார் ஸ்டாலின். ஆனால், அம்மா மினி கிளினிக், நடமாடும் மருத்துவம் கொண்டு வந்தது அம்மா அரசுதான். நற்பெயரை பெறுவதற்கு இன்று திட்டத்தின் பெயரை மாற்றிச் சொல்கிறார். நாங்க ஏற்கெனவே கொண்டு வந்த டைடல் பார்க், உணவுப் பூங்கா போன்ற பல திட்டங்களையெல்லாம் இவங்க கொண்டு வந்ததாகச் சொல்லிக்கிறாங்க. இந்த திமுக ஆட்சியில் புதிதாக எந்தத் திட்டத்துக்கும் அடிக்கல் நாட்டப்படவில்லை.

எல்லா துறையைவிடவும் உள்ளாட்சித்துறை மிகவும் சிறப்பானது. அடிப்படைத் தேவைகளை மக்கள் நேரடியாக பெற்று பயன்பெறுவார்கள். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் நம் கழகத் தோழர்கள் வெற்றிபெற வேண்டும். மக்களுக்கு சேவை செய்து மக்கள் மனதில் நீங்க இடம் பிடிக்க வேண்டும். திமுக- காரர்களுக்கு தேர்தலில் என்னென்ன பித்தலாட்டம், தில்லுமுல்லு பண்ணலாம் என நன்றாகத் தெரியும். ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்திய அரசு அம்மா அரசுதான். வெற்றிபெற்றவர்களை நேர்மையாக அறிவித்தோம். ஆனால், இன்று நேரடியாகக் களத்தில் இறங்க முடியாமல் வேட்புமனுக்களை நிராகரிப்பு செய்றாங்க.

தேர்தல் அதிகாரியை கன்னத்தில் அறைந்த கள்ளக்குறிச்சி அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர்!

தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவரும் உள்ளாட்சித் தேர்தலில் கவனமாகச் செயல்பட வேண்டும். ஒவ்வொரு வாக்கும் நமக்கு முக்கியம். தேர்தல் நேரத்தில் சற்று அசந்தாலும் கள்ள ஓட்டுப் போட்டுவிடுவார்கள். கள்ள ஓட்டுப் போடுவதிலே வல்லவர்கள் திமுக-வினர். அவர்களிடம் நாணயத்தை, ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியாது. எல்லோரும் விழிப்புடன் இருக்க வேண்டும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு