Published:Updated:

`ராமநாதபுரமா... எதுவும் பேசாதீங்க, போயிட்டு வாங்க...!' - நிர்வாகிகளைத் திகைக்க வைத்த எடப்பாடி

Edappadi palanisamy
Edappadi palanisamy

`யார் இவர்... இதற்கு முன்பு எங்கே இருந்தார்?' என்ற கேள்விகள் வலம் வந்தாலும், `அம்மா நிறுத்திய வேட்பாளர்' என்ற காரணத்துக்காக அவரை வெற்றிபெற வைத்தனர் தொண்டர்கள்.

எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, ஆதரவாளர்கள் துணையின்றி வலம் வருகிறார் முன்னாள் அமைச்சர் மணிகண்டன். ` ராமநாதபுரம் என்று கூறினாலே கை எடுத்துக் கும்பிவிட்டு அனுப்பி வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. மணிகண்டன் குறித்துப் பேசவே வேண்டாம் எனவும் அறிவுறுத்தியிருக்கிறார்' என்கின்றனர் கோட்டை வட்டாரத்தில்.

minister manikandan
minister manikandan

ராமநாதபுரம் மாவட்டத்தில் அண்ணா தி.மு.க-வுக்காக காலம்காலமாக உழைத்துவரும் சீனியர்கள் பலர் இருக்க, சசிகலா ஆதரவுடன் சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கினார் டாக்டர்.மணிகண்டன். `யார் இவர்... இதற்கு முன்பு எங்கே இருந்தார்?' என்ற கேள்விகள் வலம் வந்தாலும், `அம்மா நிறுத்திய வேட்பாளர்' என்ற காரணத்துக்காக அவரை வெற்றிபெற வைத்தனர் தொண்டர்கள். தேர்தலில் வெற்றி பெற்ற கையோடு அமைச்சர் பதவியும் வந்து சேர்ந்தது. அதன் தொடர்ச்சியாக மாவட்டச் செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது. ஆனால், மா.செ பதவியில் அவரால் நீடிக்க முடியவில்லை. மாவட்டத்தில் சீனியரான அன்வர் ராஜாவைப் பல மேடைகளில் விமர்சனம் செய்து வந்ததையும் கட்சிக்காரர்கள் ரசிக்கவில்லை.

இந்த நிலையில், அரசு கேபிள் டி.வி கார்ப்பரேஷன் தலைவராக உடுமலை ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். ராதாகிருஷ்ணனை நியமிப்பது தொடர்பாக முதல்வர் என்னிடம் விவாதிக்கவில்லை எனக் குற்றம் சுமத்தியவர், ` அரசு கேபிள் டி.வி கார்ப்பரேஷன் தலைவராக உள்ள அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் சொந்தமாக கேபிள் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவரிடம் 2,00,000-க்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். அதை அரசு நிறுவனத்தோடு இணைக்காமல், தனியாக நடத்திவருகிறார்' எனக் கூறியிருந்தார். இதை ரசிக்காத எடப்பாடி பழனிசாமி, அமைச்சரவையில் இருந்தே மணிகண்டனை நீக்கினார்.

அப்ரூவர் மணிகண்டன்?

மணிகண்டன் வகித்துவந்த தகவல் தொழில்நுட்பத்துறையை, அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் கூடுதலாக ஒப்படைத்தார் முதல்வர். இதன்காரணமாக, ராமநாதபுரம் மாவட்டத்துக்கென அமைச்சரவையில் எந்த பிரதிநிதித்துவமும் வழங்கப்படவில்லை. ` எடப்பாடி பழனிசாமி மனதில் என்ன இருக்கிறது?' என்பதை அறிந்துகொள்வதற்காக நேற்று தலைமைச் செயலகம் வந்திருந்தனர் ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள். மாவட்டச் செயலாளர் எம் ஏ.முனியசாமி, பரமக்குடி எம்.எல்.ஏ சதன் பிரபாகரன், தமிழ்நாடு பனை வெல்ல கூட்டுறவுச் சங்கத்தின் மாநிலத் தலைவருமான சேது பாலசிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள், அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரைச் சந்தித்துள்ளனர்.

minister r.b udhayakumar
minister r.b udhayakumar

இந்தச் சந்திப்பில் மணிகண்டன் குறித்துப் பேச்சு வந்தபோது, ` அவரைப் பற்றி எதுவும் பேச வேண்டாம். நாம் பேசுகின்ற விஷயம், வேறுவிதமாகத் திரிக்கப்பட்டுவிடும்' எனக் கூறியிருக்கிறார் அமைச்சர். இதற்குப் பதில் அளித்தவர்களும், `அவரைப் பதவியிலிருந்து நீக்கிய அன்றே, யாரும் எந்த விமர்சனத்தையும் வைக்கக் கூடாது, தரக்குறைவாக பேசக் கூடாது என மாவட்டம் சார்பில் அறிவிப்பே வெளியிடப்பட்டது' எனத் தெரிவித்துள்ளனர். இதன்பிறகு மாவட்டத்தில் நிலவும் அரசியல் சூழல்களைப் பற்றி விவாதித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து இரவு 8 மணியளவில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். ` அண்ணே... நாங்கள் ராமநாதபுரத்திலிருந்து வருகிறோம்' என எடப்பாடி பழனிசாமியிடம் கூற, ` வேண்டாம், எதுவும் பேசாதீங்க... நான் மாவட்டத்துகிட்ட பேசியிருக்கிறேன். அந்த டாபிக்கை மட்டும் விட்டுவிடுங்கள். நீங்கள் வந்ததற்கு நன்றி' எனக் கூறி அவசர அவசரமாகக் கூறி அனுப்பிவைத்தார். முதல்வரின் இந்தச் செயலை எப்படி எடுத்துக்கொள்வது எனத் தெரியாமல் ஊர் திரும்பியுள்ளனர் கட்சி நிர்வாகிகள்.

udhayakumar
udhayakumar

முதல்வருடனான சந்திப்பு குறித்துப் பேசிய நிர்வாகிகள் சிலர், `` எடப்பாடி பழனிசாமி மனதில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. அமைச்சரவையில் யாரைச் சேர்க்க வேண்டும், யாரைச் சேர்க்கக் கூடாது என்பது குறித்து அவர்தான் முடிவெடுக்க வேண்டும். பதவியிலிருந்து நீக்கப்பட்டதால் மிகுந்த வேதனையில் இருக்கிறார் மணிகண்டன். இதை அவர் பதவியில் இருந்தபோதே உணர்ந்திருக்க வேண்டும். கட்சிக்காக வாழ்க்கையையே தொலைத்த நிர்வாகிகளையெல்லாம் அவர் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. சீனியர்களின் அதிருப்தியையும் சம்பாதித்துவிட்டார் மணிகண்டன்.

அவரைப் பதவியிலிருந்து நீக்கியதைக் கொண்டாடும் வகையில், அவரின் வீட்டு முன்பே பட்டாசு வெடித்துக்கொண்டாடினார்கள். அப்போது அவரும் வீட்டுக்குள்தான் இருந்தார். பழைய மணிகண்டனாக இருந்திருந்தால், அந்த இடத்தில் கலவரமே மூண்டிருக்கும். அந்தளவுக்கு நிர்வாகிகள் அனைவரும் கொந்தளிப்பில் இருந்தனர். மாவட்ட அரசியலுக்குள் திடீரென வந்தவர், பாதியிலேயே கிளம்பிவிட்டார். ராமநாதபுரம் மாவட்டத்துக்கென அமைச்சரவையில் தற்போது எந்த பிரநிதித்துவமும் இல்லை. இதை எடப்பாடி பழனிசாமி சரிசெய்வார் எனவும் நம்புகிறோம்" என்கின்றனர் விரிவாக.

மிஸ்டர் கழுகு: மணிகண்டன் முதல் விக்கெட்... இன்னும் மூவருக்கு பிராக்கெட்!
அடுத்த கட்டுரைக்கு