Published:Updated:

``ஆபரேஷன் மின்னல் நடக்கும்போதே வடக்கு மண்டல ஐஜி பூர்வீக வீட்டில் கொள்ளை” - விமர்சித்த எடப்பாடி

எடப்பாடி பழனிசாமி

``விடியா திமுக அரசின் விளம்பரக்குழு தயாரித்துக் கொடுக்கும் திரைக்கதையை அரங்கேற்றும் வேலையை தமிழகக் காவல்துறை உடனடியாகக் கைவிட வேண்டும்.'' - எடப்பாடி

``ஆபரேஷன் மின்னல் நடக்கும்போதே வடக்கு மண்டல ஐஜி பூர்வீக வீட்டில் கொள்ளை” - விமர்சித்த எடப்பாடி

``விடியா திமுக அரசின் விளம்பரக்குழு தயாரித்துக் கொடுக்கும் திரைக்கதையை அரங்கேற்றும் வேலையை தமிழகக் காவல்துறை உடனடியாகக் கைவிட வேண்டும்.'' - எடப்பாடி

Published:Updated:
எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ``தமிழ்நாட்டில் தற்போது நடைபெற்றுவரும் விடியா அரசின் ஆட்சியில், நிர்வாகத் திறமையற்ற தடுமாறும் தலைமையின் கீழ் நடைபெறும் ஆட்சியில் பல்வேறு விசித்திரங்கள் அரங்கேறிவருகின்றன. கடந்த 16 மாத கால ஆட்சியில் சட்டம் -ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து, கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்கொடுமைகள், போதைப்பொருள்கள் பழக்கம் போன்றவை அதிகரித்துக்கொண்டேயிருப்பதால் நிலைமை மிக மிக மோசமாகிவிட்டது. இதனால் மக்களும் பெண்களும் வீதிகளில் நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆளுங்கட்சியினரின் அராஜகமோ எல்லை மீறிப் போய்விட்டது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

தறிகெட்டு ஓடும் குதிரைகள்போல், அமைச்சர்கள் கட்டுப்பாடின்றி தான்தோன்றித்தனமாகச் செயல்படுகிறார்கள். திறமையற்ற முதலமைச்சராக ஸ்டாலின் இருக்கிறார் என்று நான் சொன்னபோது, அவருடைய தொண்டரடிப் பொடியாழ்வார்களுக்கு கோபம் கொப்பளித்தது. ஆனால், இப்போது அவரே தன்னால் யாரையும் கட்டுப்படுத்த முடியவில்லை என்று புலம்பியதை இந்த நாடே பார்த்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழக காவல்துறைத் தலைவர், `ஆபரேஷன் மின்னல்’ என்று மாநிலம் முழுவதும் 72 மணி நோத்தில் 3,905 ரெளடிகள் கைதுசெய்யப்பட்டிருப்பதாகச் செய்தி வெளியிடுகிறார்.

இவர்களில் 705 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும், 2,390 ரெளடிகளிடம் உறுதிமொழிப் பத்திரம் பெறப்பட்டிருக்கிறது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. சட்டமன்றம் எப்போதெல்லாம் கூட்டப்படும் என்ற செய்தி வருகிறதோ, அப்போதெல்லாம் இதுபோல் பல காட்சிகள் தமிழ்நாட்டில் அரங்கேறும். ஆபரேஷன் மின்னல் பற்றியும், இதன் காரணமாக ரெளடிகள் அண்டை மாநிலங்களுக்கு ஓடிவிட்டதாகவும் அறிக்கை வெளியிடப்பட்டது.

சைலேந்திர பாபு
சைலேந்திர பாபு

காவல்துறைத் தலைவரின் இந்த அறிக்கையை தமிழக மக்கள் படிக்கும்போதே, சென்னையை அடுத்துள்ள ஊத்துக்கோட்டையிலுள்ள வடக்கு மண்டல ஐஜி அவர்களின் பூர்வீக வீட்டில் திங்கள்கிழமை அன்று கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம், CCTV, ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்டிருக்கின்றன என்று நாளிதழ்களிலும் ஊடகங்களிலும் செய்திகள் வருகின்றன. பணியிலுள்ள ஒரு ஐ.ஜி-யின் வீட்டுக்குள் ஆபரேஷன் மின்னலால் வெளி மாநிலங்களுக்கு ஓடிப்போன ரெளடிகளும், கொள்ளையர்களும் 24 மணி நேரத்தில் மீண்டும் எப்படி வந்தார்கள் என்பது புரியாத புதிராக இருக்கிறது.

ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி
ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி

மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்கவேண்டியது காவல்துறையின் முக்கியப் பொறுப்பாகும். அதைவிடுத்து, விடியா திமுக அரசின் விளம்பரக்குழு தயாரித்துக்கொடுக்கும் திரைக்கதையை அரங்கேற்றும் வேலையை தமிழகக் காவல்துறை உடனடியாகக் கைவிட வேண்டும்.

உறுதிமொழிப் பத்திரம் எழுதி வாங்கிய 2,390 நபர்களை கண்காணிப்பு வளையத்தில் வைக்கும் வேலையை காவல்துறை செய்கிறதா என்பதற்குச் சரியான விளக்கமில்லை. இவர்களைச் சுதந்திரமாக நடமாடவிட்டதன் மர்மம் என்ன என்பதை விளக்க வேண்டும். இனியாவது சட்டம்-ஒழுங்கைக் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் இந்த விடியா திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்'' என தெரிவித்திருக்கிறார்.