Election bannerElection banner
Published:Updated:

ஈரோடு: ``சவால் விடுகிறேன்... தைரியம் இருந்தா வாங்க!” - ஸ்டாலினுக்கு எதிராகக் கொதித்த பழனிசாமி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

`எப்படியாவது எங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சொல்லி, மக்களைக் குழப்பி, அரசியல் ஆதாயம் தேட ஸ்டாலின் கனவு காணுகிறார். அவர் கனவு ஒருநாளும் பலித்ததாகச் சரித்திரம் கிடையாது. அது கானல் நீராகத்தான் இருக்கும்’ - பழனிசாமி

2021 சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் பிரசாரத்தை அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி நேற்று ஈரோட்டில் மேற்கொண்டார். எடப்பாடி பழனிசாமி பள்ளிப் படிப்பைப் படித்த பவானி தொகுதியிலிருந்து ஆரம்பித்த பிரசாரம் அந்தியூர், பவானிசாகர், கோபிசெட்டிபாளையம் என நான்கு தொகுதிகளையும் கவர் செய்யும்விதத்தில் அமைந்தது. வழிநெடுகிலும் பிரமாண்டமாக வைக்கப்பட்டிருந்த பேனர்கள், மேளதாளத்துடன் தொண்டர்களின் உற்சாக வரவேற்பு என முதல்வர் செல்லும் இடமெல்லாம் திருவிழாக்கோலம் பூண்டது.

எடப்பாடியாரை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பேனர்
எடப்பாடியாரை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பேனர்

`இந்த அரசு மக்களுக்கு என்னென்ன திட்டங்களையெல்லாம் செய்திருக்கிறது’ என்று முதலில் 10 நிமிடங்கள் பேசிய முதல்வர், அதன் பிறகு முழுக்க முழுக்க தி.மு.க தலைவர் ஸ்டாலினை அட்டாக் செய்தே பேச்சை முடித்தார். பவானியில் பேசிய முதல்வர், “இன்னிக்கு ஸ்டாலின் ஆங்காங்கே போய் மக்கள் கிராமசபைக் கூட்டம் நடத்திக்கிட்டு இருக்காரு. மக்கள் சபைக் கூட்டத்தை நடத்தி என்ன செய்யப்போறீங்க? நாடளுமன்றத் தேர்தலுக்கு முன்னாடி இப்படி ஒரு கிராமசபைக் கூட்டம் போட்டாங்க. அந்த மனுவையெல்லாம் எங்க கொடுத்தீங்க... மக்கள் பிரச்னையைத் தீர்த்துவெச்சீங்களா... மக்களை ஏமாத்தி கூட்டம் நடத்திக்கிட்டு இருக்காரு. பள்ளிக்கூடத்துக் குழந்தைங்க மாதிரி மக்களை உட்காரவெச்சுக்கிட்டு அவர்பாட்டுக்கு ஏதேதோ பேசிக்கிட்டு இருக்காரு.

தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி
தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி

டெண்டரே விடாத, தொடங்கப்படாத திட்டங்களில் ஊழல் நடந்ததா கவர்னர்கிட்ட ஸ்டாலின் புகார் கொடுத்திருக்காரு. கட்சிக்காரர் எழுதிக் கொடுத்ததைப் படிக்காம, அதை கவர்னர்கிட்ட கொண்டுபோய் கொடுத்திருக்கீங்க. நாங்கள்லாம் களி திங்கப் போறாமாம். நீங்க என்ன பிரியாணி திங்கவா போவப் போறிங்க ஜெயிலுக்கு...

ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, பொன்முடி, துரைமுருகன், தங்கம் தென்னரசு, அனிதா ராதாகிருஷ்ணன்னு கிட்டத்தட்ட 14 அமைச்சர்கள் மீது வழக்கு இருக்கு. இதுவரை வாய்தா வாங்கிட்டு தப்பிச்சிக்கிட்டு இருந்தாங்க. நேற்றைய தினம் உயர் நீதிமன்றம் உடனடியாக விசாரிக்கணும்னு உத்தரவு போட்டிருக்காங்க. இன்னும் ரெண்டு, மூணு மாசத்துல விசாரிச்சு முடிச்சிடுவாங்க. ஏப்ரல் மாசத்துல இவங்கல்லாம் தேர்தல்ல நிக்கிறதே சந்தேகம். இவ்வளவு ஊழல் செஞ்சுட்டு எங்களை ஊழல் ஊழல்னு சொல்லிக்கிட்டு இருக்காரு ஸ்டாலின். எப்படியாவது எங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சொல்லி, மக்களைக் குழப்பி, அரசியல் ஆதாயம் தேட ஸ்டாலின் கனவு காணுகிறார். அவர் கனவு ஒருநாளும் பலித்ததாகச் சரித்திரம் கிடையாது. அது கானல் நீராகத்தான் இருக்கும். பதவிக்கு வர்ற வரைக்கும் தி.மு.க-வுல கவர்ச்சிகரமாகப் பேசுவாங்க. மக்கள் ஏமாறக் கூடாது” என்றார்.

எங்க தாத்தா காலத்துல இருந்து நான் விவசாயம் பண்ணிக்கிட்டு இருக்கேன். நான் விவசாயின்னு சொன்னா உங்களுக்கு என்னய்யா வலிக்குது?
எடப்பாடி பழனிசாமி

அந்தியூரில் பேசுகையில், ``தி.மு.க ஓர் அராஜகக் கட்சி, அடாவடிக் கட்சி. கட்டப் பஞ்சாயத்து, நில அபகரிப்பு, பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியாது. சட்ட ஒழுங்கைப் பேணிக் காப்பதில் இந்தியாவில் நம்முடைய அரசு முதலிடத்தில் இருக்கிறது” என்றவர், சத்தியமங்கலத்தில் பேசியபோது, ``உள்ளாட்சி, வேளாண்மை போன்ற பல துறைகளில் சிறந்து விளங்கி பல விருதுகளைப் பெற்றிருக்கோம். ஆனா, இந்த ஆட்சியில் ஒண்ணும் நடக்கலைனு ஸ்டாலின் புலம்பிக்கிட்டே இருக்காரு. எதையுமே செய்யாம, மக்களை ஏமாற்றி, பதவியிலிருந்த ஒரே கட்சி தி.மு.க தான். தி.மு.க கட்சி அல்ல, கார்ப்பரேட் கம்பெனி. ஸ்டாலின் சேர்மனா இருக்காரு. அவரோட குடும்ப உறுப்பினர்கள் எல்லாம் இயக்குநர்களாக இருக்காங்க. வாரிசு அரசியலுக்கு இந்தத் தேர்தலில் முற்றுப்புள்ளி வைப்போம். மக்களுக்குக் கொடுத்த எல்லா வாக்குறுதிகளையும் செஞ்சிருக்கோம். ஸ்டாலினை மாதிரி ஏமாத்த மாட்டோம். இது ஆரம்பம் தான்... இன்னும் நிறைய மக்களுக்காகச் செய்ய இருக்கோம்” என்றார்.

எடப்பாடியாரின் தேர்தல் பிரசாரத்தில் திரண்டிருந்த மக்கள்
எடப்பாடியாரின் தேர்தல் பிரசாரத்தில் திரண்டிருந்த மக்கள்

புஞ்சை புளியம்பட்டியில் பேசிய முதல்வர், ``எங்க தாத்தா காலத்துல இருந்து நான் விவசாயம் பண்ணிக்கிட்டு இருக்கேன். நான் விவசாயின்னு சொன்னா உனக்கு என்னய்யா வலிக்குது... அ.தி.மு.க-வை உடைக்கிறேன்னு சொல்றீங்க... உங்க கட்சியை முதல்ல காப்பாத்திக்கங்க. மதுரையில் அழகிரி தனிக்கட்சி ஆரம்பிக்கிறேன்னு சொல்றாரு. ஒரு தாய் வயித்துல பிறந்த அண்ணனையே மதிக்கலை. அவருக்கே துரோகம் செய்யுறாருன்னா, மக்களுக்கு என்ன செஞ்சிடப்போறாரு” என்றார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இறுதியாக கோபிசெட்டிபாளையத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ``அ.தி.மு.க ஆட்சி மீது எந்தக் குறையும் சொல்ல முடியாததால, தினமும் திட்டமிட்டுப் பொய்யான குற்றச்சாட்டுகளையும், அறிக்கைகளையும் ஸ்டாலின் சொல்லிக்கிட்டு இருக்காரு. நான் இப்ப சொல்றேன். எந்த இடத்துக்கு நீங்க கூப்பிட்டாலும் நான் வர்றேன். எந்தத் துண்டுச்சீட்டும் இல்லாம வாங்க... தைரியம் இருந்தா வாங்க. நான் கேக்குற கேள்விக்கு நீங்க பதில் சொல்லுங்க. நீங்க கேக்குற கேள்விக்கு நான் பதில் சொல்றேன். இந்த கோபிச்செட்டிபாளையத்தில் இருந்து சவால்விடுறேன். உண்மையைப் பேசுங்க. இல்லைன்னா வர்ற தேர்தல்ல எதிர்க்கட்சியாகக்கூட வர முடியாது” என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு