Published:Updated:

தூத்துக்குடி: `விவசாயியை, ரௌடிகளோடு ஒப்பிடுவதா?!’ - ஸ்டாலினை விமர்சித்த முதல்வர் பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

``அ.தி.மு.க மூன்றாக உடையும் எனச் சொல்வது ஒருபுறம் இருக்கட்டும். மதுரையிலுள்ள உங்க சகோதரர் கட்சி தொடங்கினா, தி.மு.க-தான் உடையும். உங்க கட்சியை உடையாமப் பார்த்துக்கோங்க” என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோவில்பட்டியில் பேசினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். கோவில்பட்டி அருகிலுள்ள வில்லிச்சேரியில் விவசாயிகளுடன் கலந்துரையாடினார். ``விவசாயிகளின் விளைபொருள்களை அரசே நேரடியாகக் கொள்முதல் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது குறித்து ஆலோசனை நடத்திவருகிறோம். இடைத்தரகர் இல்லாமல் விவசாயிகளுக்கு நேரடியாகவே உரிய விலை கிடைக்கும்படியாக நடவடிக்கை எடுக்கப்படும்’’ எனப் பேசினார்.

கருப்பட்டி காபி பருகிய முதல்வர்
கருப்பட்டி காபி பருகிய முதல்வர்

அதைத் தொடர்ந்து கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் அருகில் நடந்த கூட்டத்தில் பேசினார். அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``தி.மு.க என்பது குடும்பத்தினருக்கான கட்சிதான். அங்கு தாத்தா, அப்பா, பேரன் மட்டும்தான் முக்கியமான பதவிக்கு வர முடியும். தி.மு.க தலைவர் ஸ்டாலின் அமைச்சர்களின் ஊழல் பட்டியல் என்று ஒரு பட்டியலை ஆளுநரிடம் கொடுத்திருக்கிறாராம். அவர் கொடுத்த பட்டியலில் ஒரு டெண்டர் ரத்து செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டாகிறது. அதுகூடத் தெரியாமல் ஆளுநரிடம் குற்றம்சாட்டுகிறார்.

அவர் கொடுத்த அந்த ஊழல் பட்டியலிலுள்ள தகவல்கள் எதுவுமே உண்மையில்லை. ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால், எங்களையெல்லாம் ஜெயிலில் அடைப்பாராம். முந்தைய தி.மு.க ஆட்சியின்போதுதான் நிறைய ஊழல்கள் ஆதாரத்துடன் நிரூபணமாகியிருக்கின்றன. அப்போதைய பல எம்.எல்.ஏ-க்கள், முன்னாள் அமைச்சர்கள் எனப் பலரின் மீதும் ஊழல், நில அபகரிப்பு, கட்டப் பஞ்சாயத்து போன்ற பல வழக்குகள் நீதிமன்றங்களில் நடந்துவருகின்றன.

முதல்வர் உரை
முதல்வர் உரை

தற்போதைய நிலையில், அவர்கள்தான் தங்கள் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகள் குறித்துக் கவலைப்பட வேண்டும். ஊழலுக்காகக் கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க-தான். அ.தி.மு.க மூன்றாக உடையும் என்கிறார் அவர். மதுரையிலுள்ள ஸ்டாலினின் சகோதரர் அழகிரி கட்சி தொடங்கிவிட்டால் தி.மு.க-தான் உடையும். முதலில் தி.மு.க-வை உடையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். உங்க கட்சிதான் உடையும். எங்க கட்சி உடையாது.

`நானும் ரெளடிதான்’னு சொல்லி ரெளடிகள் தன்னைப் பெருமைப்படுத்திக்கொள்வதைப் போல, `நானும் விவசாயிதான்’னு ஒவ்வொரு இடத்திலும் சொல்லி தன்னைப் பெருமைப்படுத்திக்கொள்கிறார்னு என்னைப் பார்த்து தி.மு.க தலைவர் ஸ்டாலின் சொல்றாரு. நான் விவசாயிதான். என்னை விவசாயி என நான் சொல்வதில் என்ன தவறு? அதுவும் சேற்றில் கால்வைத்து வேலை செய்யும் விவசாயியை, ரெளடிகளோடு ஒப்பிட்டுப் பேசுகிறார். ரெளடியும் விவசாயியும் ஒண்ணா... விவசாயத்தைப் பற்றி அவருக்கு என்ன தெரியும்?

முதல்வர் உரை
முதல்வர் உரை

ஏர் பிடிச்சு உழுது, மண்வெட்டியால் வெட்டி நிலத்தில் வேலை செய்தவருக்குத்தான் அதிலுள்ள கஷ்டம் என்னன்னு தெரியும். வீட்டுக்குள்ளயே இருப்பவருக்கு விவசாயத்தைப் பற்றி என்ன தெரியும்... தி.மு.க ஆட்சியில் ரெளடிகள் ராஜ்ஜியம் செய்திருக்கிறார்கள். அதனால்தான், ரெளடிகளை விவசாயிகளுடன் ஒப்பிட்டுப் பேசுகிறார். தி.மு.க மக்களுக்காக ஆளும் கட்சியல்ல. அது, குடும்பத்துக்காக ஆளும் கட்சி. அவரால், ஒரு நாள் நிலத்தில் விவசாய வேலைகளை செய்து பார்க்க முடியுமா?” என ஸ்டாலினுக்குச் சவால் விடும் வகையில் பேசினார்.

பின்னர், நடந்து சென்று பொதுமக்களிடம் பிரசார துண்டுப் பிரசுரங்களைக் கொடுத்தார். பின்னர், தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் தொழில் வர்த்தக சங்கத்தினருடன் கலந்துரையாடினார். ``கோவில்பட்டியில் புதிய தொழில்நுட்பங்கள் அமைக்கப்பட வேண்டும், கிராமங்களில் தொழில் தொடங்கிட அனுமதி பெற, 10,000 சதுர அடி வரை உள்ளாட்சி அமைப்புகள் அனுமதி வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். தீப்பெட்டித் தொழில்முனைவோர் பொதுப் பயன்பாட்டு மையத்துக்கு புதியக் கட்டடம், தீப்பெட்டித் தொழிலுக்குத் தேவையான மூலப்பொருள்களை சிட்கோ மூலம் இறக்குமதி செய்து உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டும்” என்பது உள்ளிட்ட 13 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

கடலைமிட்டாய் ருசித்த முதல்வர்
கடலைமிட்டாய் ருசித்த முதல்வர்

கடலைமிட்டாய் உற்பத்தியாளர்கள் சார்பில் முதல்வருக்கு கடலைமிட்டாய் வழங்கப்பட்டது. கடலைமிட்டாயைக் கடித்து ருசித்தார். தொடர்ந்து நடந்த இளைஞர், இளம்பெண்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அணியினருடன் கலந்துரையாடியவர், கோவில்பட்டியிலுள்ள தமிழ்நாட்டு பார்ம்பர்ய உணவு பதார்த்தக் கடையில் கருப்பட்டி காபி அருந்தினார். பின்னர், விளாத்திகுளத்தில் பேசினார். அங்கும் தி.மு.க மீதான குற்றச்சாட்டுகளை அடுக்கிப் பேசினார். மழை பெய்தபோதிலும் திரண்டிருந்த மக்கள் முதல்வரின் பேச்சைக் கேட்டனர்.

அடுத்த கட்டுரைக்கு