Election bannerElection banner
Published:Updated:

`மக்களை ஏமாற்றுவதில் நம்பர்-ஒன்; ஸ்டாலினுக்குப் பொய்தான் மூலதனம்!’ - எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு

விழுப்புரத்தில் எடப்பாடி பழனிசாமி
விழுப்புரத்தில் எடப்பாடி பழனிசாமி ( தே.சிலம்பரசன் )

திமுக நல்லது செய்தால் பரவாயில்லை. நல்லது செய்யவே அவர்களுக்கு மனம் கிடையாது. அவர்கள் நல்ல மனம் படைத்தவர்கள் அல்ல, கொடும் உள்ளம் படைத்தவர்கள்’ – எடப்பாடி பழனிசாமி.

தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்துவருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. நேற்று (20.03.2021) கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டத்தில் தனது கட்சி மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். விழுப்புரத்தில், சி.வி.சண்முகத்தை ஆதரித்துப் பிரசாரம் செய்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அப்போது பேசிய அவர்,

``இன்று, திமுக தலைவர் தோல்வி பயத்தால் ஏதோ பிதற்றிக்கொண்டிருக்கிறார். அதிமுக கூட்டணியை வெல்ல முடியாது என்று அவர் தெரிந்துகொண்டார். அதிமுக-வுடன் அமைக்கப்பட்ட கூட்டணி வலிமையான கூட்டணி. மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் கூட்டணி. திமுக தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணி, காலத்துக்கு ஏற்ப அமைக்கப்பட்ட சந்தர்ப்பவாத கூட்டணி. எம்.ஜி.ஆர் 10 ஆண்டுக்காலமும், புரட்சித்தலைவி 15 ஆண்டுக்காலமும் சிறப்பான ஆட்சியைத் தந்தார்கள். அதைத் தொடர்ந்து எனது தலைமையிலேயே சிறப்பான ஆட்சியைத் தந்துகொண்டிருக்கிறோம். இந்த மண்ணில் அதிக நாள் ஆண்ட கட்சி அதிமுக. இறுதிவரை மக்களுக்காக உழைத்தவர் புரட்சித்தலைவி. அவருடைய வழியில் இந்த அரசு சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அதைப் பொறுத்துக்கொள்ள முடியாத திமுக தலைவர் ஸ்டாலின் ஏதேதோ பிதற்றிக்கொண்டிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம்
எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம்
தே.சிலம்பரசன்

இன்றைக்கு அவர் எதைச் சொன்னாலும் பொய்தான் சொல்வார். உண்மை என்ற வார்த்தையே அவர் அகராதியில் வந்தது கிடையாது. பொய்தான் மூலதனம். அந்தப் பொய் மூலதனத்தை வைத்து, இன்று தமிழகம் முழுவதும் பிரசாரம் தொடங்கி அரசு மீது, கட்சியின் மீது, கூட்டணிக் கட்சிகள் மீது குற்றம் கூறிவருகிறார். ஆக, இது திமுக-வுக்கு மூடுவிழா காணும் தேர்தல். 10 ஆண்டுக்காலம் வனவாசம் போயிருந்தார்கள். திமுக இன்னும் திருந்தவில்லை. இந்தத் தேர்தல்தான் அவர்களுக்கு இறுதித் தேர்தல் என்று மக்கள் நல்ல தீர்ப்பு வழங்குவார்கள். திமுக நல்லது செய்தால் பரவாயில்லை. நல்லது செய்யவே அவர்களுக்கு மனம் கிடையாது. அவர்கள் நல்ல மனம் படைத்தவர்கள் அல்ல, கொடும் உள்ளம் படைத்தவர்கள். அதிமுக தொண்டர்கள் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என எண்ணி எண்ணி நன்மை செய்வார்கள். திமுக அப்படி அல்ல, எதைச் செய்தாலும் மக்களுக்கு துரோகச் செயலைத்தான் செய்வார்கள். நல்ல எண்ணமே கிடையாது. தீய எண்ணம் படைத்தவர் திமுக தலைவர் ஸ்டாலின்.

அது ஒரு வாரிசு அரசியல் கட்சி. கருணாநிதியைத் தொடர்ந்து ஸ்டாலின் வந்தார். ஸ்டாலினைத் தொடர்ந்து அவர் மகன் உதயநிதி வந்துவிட்டார். தன் குடும்பத்திலிருந்து யாரும் வர மாட்டார்கள் என பச்சைப் பொய் சொன்னார் ஸ்டாலின். உதயநிதியோ, `என் அப்பா சொல்வதே முடிவு’ என்றார். அப்பா இவருக்கு சீட் கொடுத்திருக்கிறார். அவர் என்ன சொன்னாரோ அங்குதான் இவர் நிற்கிறார்… எவ்வளவு கில்லாடித்தனம்! யாரை ஏமாற்றுகிறீர்கள்? விழிப்போடு இருப்பவர்கள் தமிழ்நாடு மக்கள். உங்களுடைய பேச்சை மக்கள் ஏற்றுக்கொள்வதாக இல்லை. நல்லதைச் சொன்னால் ஏற்றுக்கொள்வார்கள். நீங்கள் எந்த நல்லதையும் சொல்வதில்லை. குடும்ப அரசியல், வாரிசு அரசியலைத்தான் நாங்கள் வேண்டாம் என்கிறோம். வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் இது. `கட்சி நிர்வாகிகளுடைய குழந்தைகள் எம்.எல்.ஏ., எம்.பி - யாக நிற்கலாம், தப்பில்லை. ஆனால், தலைவராவதுதான் தப்பு.’ உதயநிதி எப்போது அரசியலுக்கு வந்தார்... அவர் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து திமுக-வின் தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார், தமிழகம் முழுவதும் சுற்றிவருகிறார் என்றால் அது வாரிசு அரசியல்தானே... கலைஞரும் உங்களை இப்படித்தான் சுற்றவிட்டார். நீங்கள் திமுக தலைவர் ஆனீர்கள். உங்கள் பிள்ளையை அதே பாணியில் இப்போது சுற்றவிடுகிறீர்கள். நான் என்னுடைய சொந்தக்காரர்களுக்கு டெண்டர் கொடுத்துவிட்டேனாம்... ஸ்டாலின் கூறியுள்ளார். இது என்ன கடையில் விற்கும் பொருளா… பொட்டலம் கட்டிப் போவதற்கு. அதை திமுக ஆட்சியில் செய்யலாம். அதிமுக ஆட்சி சிறப்பான ஆட்சி. எல்லாமே ஓப்பன் டெண்டர்தான்.

எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம்
எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம்
தே.சிலம்பரசன்

யாரோ எழுதிக் கொடுப்பதைவைத்துப் படித்து நீங்களே மாட்டிக்கொள்கிறீர்கள். பேசுகிற பொய்யைக் கூட ஒழுங்காக பேசத் தெரியவில்லை உங்களுக்கு. தில்லுமுல்லு செய்து தேர்தலில் வெற்றி பெறலாம் எனும் நினைப்பில் இருப்பதை மறந்துவிடுங்கள். நேர்மையாக மக்களைச் சந்தியுங்கள் அப்போதுதான் எதிர்க்கட்சி என்பதாவது மிஞ்சும். இல்லையென்றால் அதுவும் போய்விடும். பெரும்பான்மையை நிரூபிக்கச் சட்டமன்றத்தில் நாங்கள் கூடியபோது, மேசையில் ஏறி டான்ஸ் ஆடினார்கள். எவ்வளவு அட்டூழியம்... எவ்வளவு அராஜகம்… அந்த இடத்திலேயே ரெளடித்தனம் பண்ணினார்கள். அப்படிப்பட்ட உங்களிடம் ஆட்சியைக் கொடுத்தால் நாடு தாங்குமா..! இப்படி அராஜகம் பண்ணுகிற கட்சி திமுக. இந்திய நாட்டிலேயே ஊழலுக்காகக் கலைக்கப்பட்ட அரசாங்கம் திமுக அரசாங்கம். மக்களை ஏமாற்றுவதில் நம்பர்-ஒன் ஸ்டாலின். உண்மை, தர்மம், நீதிதான் வெல்லும். அது நம்மிடத்தில் இருக்கிறது. எனவே, நாம்தான் வெல்வோம்” என்றார்.

`ஊர்ந்து சென்று முதல்வராவதற்கு நான் என்ன பாம்பா, பல்லியா?’ கடலூரில் கடுகடுத்த எடப்பாடி பழனிசாமி
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு