Published:Updated:

`ஏக்கருக்கு 15,000 ரூபாய்?!’ - எடப்பாடியின் `நான் உழவன்’ அஸ்திரம்!

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

மழையால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க ஆயத்தமாகியிருக்கிறது எடப்பாடி பழனிசாமி அரசு. இழப்பீடு அஸ்திரத்தை வைத்து, எதிர்கட்சிகளைத் திணறடிக்கவும் வியூகம் வகுத்திருக்கிறாராம் எடப்பாடி.

விவசாயிகளுக்கு நிவர், புரெவி புயல்கள் ஏற்படுத்திய பாதிப்பைவிட அதிக பாதிப்பை சமீபத்தில் பெய்த கனமழை ஏற்படுத்திவிட்டது. டெல்டா மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சம்பா நெற் பயிர்கள் தொடர் கனமழை காரணமாக தண்ணீரில் மூழ்கியுள்ளன. நிவர், புரெவி புயல் பாதிப்புகளை பார்வையிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பயிர்ச் சேதங்களுக்கு இடுபொருள் நிவாரணமாக 600 கோடி ரூபாய் வழங்கி உத்தரவிட்டார். இந்தச் சூழலில், டெல்டாவிலும் தென் மாவட்டங்களிலும் பெய்த கனமழையால், பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மழைநீரில் மூழ்கிய பயிர்கள்
மழைநீரில் மூழ்கிய பயிர்கள்

அரசு எடுத்துவரும் நடவடிக்கை குறித்து நம்மிடம் பேசிய வேளாண்மைத்துறை உயரதிகாரி ஒருவர், ``தை மாதம் கதிரறுப்புக்கு தயார்நிலையிலிருந்த பயிர்கள், சமீபத்தில் பெய்த கனமழையால் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. பாதிப்பு குறித்து கணக்கெடுக்கும் பணியை வேளாண்மை, தோட்டக்கலை, வருவாய்த்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் செய்துவருகிறோம். ஏக்கருக்கு 15,000 ரூபாய் அளவுக்கு நிவாரணம் வழங்க அரசு தீவிரமாக ஆலோசித்துவருகிறது. பாதிப்புகளின் விவரங்களை முழுவதுமாகக் கண்டறிந்த பிறகு அறிவிப்பு வெளிவரும்.

தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள்... பொங்கல் நேரத்தில் டெல்டா விவசாயிகளுக்கு நேர்ந்த சோதனை!

நிவர் புயல் பாதிப்புக்கு 3,750 கோடியும், புரெவி புயல் பாதிப்புக்கு 1,514 கோடியும் மத்திய அரசிடமிருந்து கோரப்பட்டிருக்கிறது. மத்திய அரசிடமிருந்து இந்தத் தொகை கிடைக்கும்பட்சத்தில், புயல் பாதிப்புகளை நிரந்தரமாகச் சீரமைக்க முடியும். இந்தப் புயல் பாதிப்புகளுக்கு தமிழக அரசு அறிவித்த நிவாரணத் தொகை ஜனவரி 7-ம் தேதியிலிருந்து விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடி வரவு வைக்கப்பட்டது. சமீபத்தில் பெய்த கனமழைக்கும் அரசு நிவாரணத்தொகை அறிவிக்கும்பட்சத்தில், விவசாயிகளின் வங்கிக் கணக்கிலேயே வரவு வைக்கப்படும்” என்றார்.

நீரில் மூழ்கிய பயிர்கள்
நீரில் மூழ்கிய பயிர்கள்

அ.தி.மு.க-வின் இரண்டாம்கட்ட தலைவர் ஒருவர், ``கட்சியின் விளம்பரங்களில், தன்னை விவசாயிகளின் பாதுகாவலனாக எடப்பாடி பழனிசாமி அடையாளப்படுத்திக்கொள்கிறார். அதுபோல, தேர்தல் பிரசாரத்துக்காகச் செல்லுமிடமெல்லாம், `நான் ஒரு விவசாயி’ என்று மூச்சுக்கு முந்நூறு தடவை சொல்கிறார். கனமழை பாதிப்புக்கு நிவாரணம் கொடுத்தால், அ.தி.மு.க-வுக்காக உள்ள டெல்டாவிலும், தென்மாவட்டத்திலும் வாக்காளர்களின் மனநிலையை தனக்குச் சாதகமாக மாற்றுமென்பது எடப்பாடியின் எண்ணம். மேலும், வேளாண் சட்டத்துக்கு ஆதரவு கொடுத்ததால் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ள எதிர்ப்புணர்வை, இந்த நிவாரணங்கள் மூலமாக சரிக்கட்ட முடியுமென்றும் முதல்வர் கருதுகிறார். `நான் உழவன்’ என்று அவர் எய்யப்போகும் அஸ்திரம் எதிர்க்கட்சிகளுக்கு கண்டிப்பாக சரிவைக் கொடுக்கும்” என்றார்.

நிவாரணம் கொடுத்துவிட்டால், தனக்குச் சாதகமான காற்று வீசுமென்பது எடப்பாடியின் மனக்கணக்கு. மனக்கணக்கு வாக்குக்கணக்காக மாறுமா என்பதை அறிவிப்பு வெளிவந்து, பாதிப்பு ஏற்பாட்டால்தான் தெரியும்!

அடுத்த கட்டுரைக்கு