`தமிழகத்தில் தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த 10 மாதங்களாக சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது’ என எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், ``தமிழகத்தில் தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த 10 மாதங்களாக சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. விருதுநகர், வேலூர் மாவட்டங்களில் நடைபெற்ற கூட்டுப் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களைத் தொடர்ந்து கடந்த 23-ம் தேதி ராமநாதபுரத்தில் கல்லூரி மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகச் செய்திகள் வந்துள்ளன.

மேலும், மார்ச் மாதத்திலேயே திருப்பூர் சின்னக்கரை கிராமத்தில் தி.மு.க கிளைச் செயலாளரால் 3 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு, திருப்பரங்குன்றத்தில் 11-ம் வகுப்பு சிறுமி தி.மு.க கிளைச் செயலாளரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பான செய்திகளும் வந்துகொண்டிருக்கின்றன.
இதைத் தொடர்ந்து, நேற்று கஞ்சா வியாபாரிகள் போலீஸ் மீது வெடிகுண்டு வீசி தப்பியிருப்பது, சென்னையில் துப்பாக்கியுடன் போதை மாத்திரை விற்பனை செய்த கும்பல் கைது என்று தொடர்ந்து செய்திகள் வந்துள்ளன. மாநிலத்தில் நிலவும் சட்டம்- ஒழுங்கு சீர்குலைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் முழுப்பொறுப்பேற்க வேண்டும். இனியாவது சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
