Published:Updated:

``ஏசி ஹால், சாப்பாடு வேண்டாம்..!" - ராஜரத்தினம் மைதானத்தில் எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி& நிர்வாகிகள்

``இந்த ஒருநாள் கைதின் மூலம் அதிமுக தொண்டர்களிடம் தனக்கான மைலேஜை ஏற்றிக்கொண்டார். அரசியல் ரீதியாக எடப்பாடி பழனிசாமிக்கு இந்த நாள் மிக முக்கியமான நாள்'' என்கிறார்கள் அதிமுக-வில் உள்ள மூத்த நிர்வாகிகள் சிலர்.

``ஏசி ஹால், சாப்பாடு வேண்டாம்..!" - ராஜரத்தினம் மைதானத்தில் எடப்பாடி பழனிசாமி

``இந்த ஒருநாள் கைதின் மூலம் அதிமுக தொண்டர்களிடம் தனக்கான மைலேஜை ஏற்றிக்கொண்டார். அரசியல் ரீதியாக எடப்பாடி பழனிசாமிக்கு இந்த நாள் மிக முக்கியமான நாள்'' என்கிறார்கள் அதிமுக-வில் உள்ள மூத்த நிர்வாகிகள் சிலர்.

Published:Updated:
எடப்பாடி பழனிசாமி& நிர்வாகிகள்

ஆறுமுகசாமி, அருணா ஜெகதீசன் அறிக்கை என பரபரப்பாக இருந்த தமிழக அரசியல் களத்தை, அதிமுக-வின் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போட்டம் திசைமாற்றியிருக்கிறது. அதிமுக-வினர் கைதைத் தொடர்ந்து, அந்தக் கட்சித் தொண்டர்களின் படையெடுப்பு, அரசியல் தலைவர்கள் சந்திப்பு என சென்னை ராஜரத்தினம் மைதானம் அதிமுக-வினரின் பொதுக்கூட்ட மைதானம் போலக் காட்சியளித்தது. கூடுதலாக, ``அரசியல் ரீதியாக தனக்கு நெருக்கடியாக இருக்கவேண்டிய ஒரு நாளை, மிகச் சாமர்த்தயமாக தனக்குச் சாதகமான ஒரு நாளாக மாற்றிக்கொண்டார் எடப்பாடி பழனிசாமி'' எனக் குதூகலிக்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள்.

போராட்டத்தில் அதிமுக
போராட்டத்தில் அதிமுக

தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் முடிவெடுக்காததைக் கண்டித்து அ.தி.மு.க சார்பில் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த போராட்டத்துக்குக் காவல்துறை அனுமதி அளிக்க மறுத்துவிட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்னை காரணமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் விளக்கமும் தரப்பட்டது. காவல்துறை அனுமதி மறுத்த நிலையிலும், எடப்பாடி மற்றும் அதிமுக நிர்வாகிகள், திட்டமிட்டபடி வள்ளுவர் கோட்டத்துக்கு கருப்பு சட்டை அணிந்து வந்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறை தரப்பு போராட்டத்தை கைவிடக் கோரியும், அதிமுக-வினர் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளையும் போலீஸார் கைதுசெய்து ராஜரத்தினம் மைதானத்துக்குக் கொண்டு சென்றனர். இந்தக் கைது விஷயத்தைக் கேள்விப்பட்டதும், சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து தொண்டர்கள் ராஜரத்தினம் மைதானத்தை நோக்கிப் படையெடுத்தனர்.

அதேபோல, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தேவநாதன் உள்ளிட்டோர் அதிமுக நிர்வாகிகளைச் சந்திக்க மைதானத்துக்கு வந்திருந்தனர். அதில், முதலில் வந்த கிருஷ்ணசாமியைத் தவிர மற்றவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. மாலையில், அதிமுக தொண்டர்கள் மத்தியில் எடப்பாடி உரையாற்றினார். தொடர்ந்து மாலை ஐந்து மணி அளவில் அனைவரையும் காவல்துறையினர் விடுதலை செய்தனர்.

ஜி.கே.வாசன் போராட்டம்
ஜி.கே.வாசன் போராட்டம்

இந்த நிலையில், ``இந்த ஒருநாள் கைதின் மூலம் எடப்பாடி பழனிசாமி அதிமுக தொண்டர்களிடம் தனக்கான மைலேஜை ஏற்றிக்கொண்டார். அரசியல்ரீதியாக எடப்பாடி பழனிசாமிக்கு இந்த நாள் மிக முக்கியமான நாள்'' என்கிறார்கள் அதிமுக-வில் உள்ள மூத்த நிர்வாகிகள் சிலர். அவர்கள் நம்மிடம் பேசும்போது,

``சட்டசபையில் எடப்பாடிக்கு அருகே ஓ.பி.எஸ்ஸை உட்காரவைத்தால், சட்டசபையைப் புறக்கணிக்க வேண்டும் என்பது கடந்த வாரமே எடுக்கப்பட்ட முடிவுதான். அதேபோல, நடக்கவும் சபையைப் புறக்கணிப்பதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல, ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆளும் கட்சி அதை அனுமதித்திருந்தால்கூட அது பெரியளவில் பேசுபொருளாகியிருக்காது. அனுமதி மறுக்கப்பட்டதும், மிகச் சாதுர்யமாக எடப்பாடி தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார். அனைவருக்கும் தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுக்கப்பட்டு அனைவரும் சரியாக வள்ளுவர் கோட்டத்துக்குக் கறுப்புச் சட்டையுடன் காலையிலேயே வந்து சேர்ந்தனர். தொடர்ந்து, தரையில் அமர்ந்து போராடியதும் தொண்டர்கள் மத்தியில் அவருக்கு மிகப்பெரிய செல்வாக்கை உண்டாக்கியது. அதுமட்டுமல்ல, ராஜரத்தினம் மைதானத்துக்குக் கொண்டு சென்றதும், முதலில் எம்.எல்.ஏ-க்களை ஏ.சி ஹாலில் தனியாக அமரச் செய்வதற்கு காவல்துறை தரப்பில் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், எடப்பாடி பழனிசாமி அதை ஒப்புக்கொள்ளவில்லை. நாங்கள் தொண்டர்களுடனே வெளியிலேயே இருக்கிறோம் என மறுத்துவிட்டார்.

மைதானத்தில்
மைதானத்தில்

உண்மையைச் சொல்லப்போனால், வள்ளுவர் கோட்டத்தில் நடக்கவேண்டிய உண்ணாவிரதப் போராட்டம், ராஜரத்தினம் மைதானத்தில் நடந்தது அவ்வளவுதான். காலை முதல் மாலை வரை தொண்டர்கள் அவரைப் பார்த்து ஆர்ப்பரித்தனர். மாலை, அவர் மைக்கைப் பிடித்து, `அதிமுக-வை வீழ்த்த நினைத்தால் ஸ்டாலின்தான் வீழ்ந்து போவார். ஓடுக்க நினைத்தால் அது இயலாது' எனப் பேசியது தொண்டர்களிடம் நன்றாக எடுபட்டது. அதேபோல, சாப்பாடு கொண்டு வந்து கொடுத்ததையும் அவர் வாங்க மறுத்துவிட்டார். தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட அருணா கமிஷன் அறிக்கையில் எடப்பாடியின்மீது மிகப்பெரிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்கிறது. ஆளும்கட்சி முதல் அதிமுக-வுக்கு எதிரானவர்கள் அனைவரும் அதைவைத்து எடப்பாடியை டார்க்கெட் செய்யும் நேரத்தில், எடப்பாடி தெளிவான காய்களை நகர்த்தி தனக்கான நாளாக மாற்றிக்கொண்டார். பொதுமக்கள் மத்தியில் எப்படியோ தெரியவில்லை, அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் எடப்பாடியின் செல்வாக்கை இன்றைய நாள் உயர்த்தியிருக்கிறது. அவர் நினைத்ததைச் சாதித்துவிட்டார்'' என்கிறார்கள். இந்த நிலையில், காவல்துறையினர் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக எடப்பாடி பழனிசாமி உட்பட அதிமுக-வினர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.