Published:Updated:

கனிமொழி vs எடப்பாடி, அக்னிக்கலசம் காட்டிய அன்புமணி, `இமயமலை' ரஜினி? - டிஜிட்டல் கழுகார் அப்டேட்ஸ்

கனிமொழி, எடப்பாடி பழனிசாமி
கனிமொழி, எடப்பாடி பழனிசாமி

அதிகாலையிலேயே ஃபேஸ்புக் மெசஞ்சர் ஆப் சிணுங்கியது. எடுத்து பார்த்தால் டிஜிட்டல் கழுகார் தகவல்களைக் கொட்டியிருந்தார்...

``நான்கு தொகுதியும் நமக்கே!” - ஸ்டாலினை சமாளித்த செந்தில் பாலாஜி

முதலில் மூன்று ஃபாலோ அப் செய்திகளைச் சொல்லிவிடுகிறேன்... தி.மு.க-வின் கரூர் மாவட்ட, ஒன்றியக் கழக நிர்வாகிகள் மொத்தமாக மாற்றப்பட்டார்கள்; புதிதாகப் பதவிகளைப் பெற்றவர்களில் அதிகம் பேர் செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள்; இதனால் பழைய தி.மு.க நிர்வாகிகளுக்கு வருத்தம் என்று ஏற்கெனவே சொல்லியிருந்தேன். இந்தநிலையில், பதவி இல்லாமல் பாதிக்கப்பட்ட நிர்வாகிகள் பலரும், கரூர் மாவட்ட தி.மு.க. சீனியர்களான கே.சி.பழனிசாமி, முன்னாள் அமைச்சர் கரூர் சின்னசாமி ஆகியோரிடம் புலம்பியிருக்கிறார்கள். அவர்களோ, `எங்க நிலைமையே சரியில்லை. நாங்க அரசியலைவிட்டே ரிட்டயர்மென்ட் ஆகும் முடிவில் இருக்கிறோம். நாங்க போய் எங்கே செந்தில் பாலாஜி பற்றி ஸ்டாலினிடம் புகார் சொல்வது?’ என்று ஒதுங்கிக்கொண்டார்களாம்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

கட்சியினர் அதிருப்தியாக இருப்பது குறித்து செந்தில்பாலாஜியிடம் தலைமை விசாரித்துள்ளது. அதற்கு அவர், `உங்களுக்கு தேவை கரூர் மாவட்டத்தில் இருக்கும் நான்கு சட்டமன்றத் தொகுதிகளின் வெற்றிதானே? நான்கு தொகுதிகளும் தி.மு.க வசமாகணும்னா, கரூர் மாவட்ட தி.மு.க பொறுப்பை என் பொறுப்பில் விட்டுவிடுங்க’ என்று சொல்லிவிட்டாராம். இதற்கு கட்சி தலைமையும் இசைவு தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது.

நாகர்கோவிலில் மீண்டும் சரவணகுமார்? பா.ஜ.க காய்நகர்த்தல்!

நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக இருந்த சரவணகுமார் மாற்றப்பட்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஆஷா அஜித் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இதைத் தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியான தளவாய் சுந்தரமே எதிர்பார்க்கவில்லை என்று சொல்லியிருந்தேன். இதுவரை சரவணகுமாருக்கு மாற்றுப்பணி வழங்கப்படவில்லை. இந்தநிலையில் தற்போது அவரை மீண்டும் நாகர்கோவிலுக்கே கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் பா.ஜ.க-வினர்.

நாகர்கோவில் மாநகராட்சி கடைசியாக பா.ஜ.க-வசம் இருந்தது. மத்திய அரசின் நிதியில் நாகர்கோவிலுக்கு குடிநீர் கொண்டுவரும் புத்தன் அணை குடிநீர் திட்டத்தை சரவணகுமார் வேகமாகச் செயல்படுத்தி வந்தார். அவர் இருந்தால் இந்தத் திட்டங்கள் விரைவில் நிறைவடையும் என்றும் பா.ஜ.க-வினர் நினைக்கிறார்கள். இந்தத் திட்டத்தைத் தங்கள் சாதனையாகக் கூறி, வரும் உள்ளாட்சித் தேர்தலில் நாகர்கோவில் மாநகராட்சியைக் கைப்பற்றலாம் என்றும் பா.ஜ.க கணக்குப்போட்டுள்ளது. இதனால் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தரப்பில் சரவணகுமாரை மீண்டும் நாகர்கோவில் மாநகராட்சிக்கு கொண்டு வர மூவ்கள் நடக்கின்றன. அதனால், மீண்டும் சரவணகுமார் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக வரவும் வாய்ப்பு இருக்கிறது.

பொன்.ராதாகிருஷ்ணன்
பொன்.ராதாகிருஷ்ணன்

திருவள்ளூர் தி.மு.க பிரமுகர் பிறந்தநாள் பார்ட்டி... கொரோனா பாதித்த பி.டி.ஓ மரணம்!

திருவள்ளூர் மாவட்ட தி.மு.க முக்கியப் பிரமுகரும் பொதுக்குழு உறுப்பினருமான குணசேகரின் பிறந்தநாள் விழாவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டார்கள்; அவர்களில் பலருக்கும் கொரோனா பரவியது என்று சொல்லியிருந்தேன் அல்லவா... அந்தப் பார்ட்டியில் கலந்துகொண்ட பி.டி.ஓ-வான சாமிநாதனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அவர் ஜூலை 6-ம் தேதி சிகிச்சைப் பலனில்லாமல் இறந்துவிட்டார். சோகத்தில் மூழ்கியிருக்கிறது அரசு ஊழியரின் குடும்பம்!

இணையத்தில் `தேசிய முரசு’!

காங்கிரஸ் கட்சி செய்திகளைத் தாங்கி, வெளிவந்துகொண்டிருந்த `தேசிய முரசு’ மாதம் இருமுறை இதழ், சில வருடங்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டுவிட்டது. இந்தப் பத்திரிகையைக் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரான கோபண்ணா நடத்திவந்தார். நடுவே சில நிர்வாகச் சிக்கல்களால் பத்திரிகை நிறுத்தப்பட்டது. இந்தநிலையில்தான், இணைய இதழாக `தேசிய முரசு’ வெளிவரவிருக்கிறது. காமராஜர் பிறந்த தினமான ஜூலை 15-ம் தேதி இணைய இதழைத் தொடங்க முடிவு எடுத்துள்ளனர்.

பகீர் புகைப்படங்கள்
தயங்கும் ஸ்டாலின்!

அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்காகப் பரிதவிக்கும் நோயாளிகளின் புகைப்படங்கள் மற்றும் கொரோனாவால் இறப்பவர்களின் உடல்கள் கண்டபடி கிடக்கும் புகைப்படங்கள் என தினசரி தி.மு.க-வுக்கு அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் வந்துகொண்டிருக்கின்றனவாம். தி.மு.க ஆதரவு டாக்டர்களே அரசு மருத்துவமனைகளிலிருந்து அதை எடுத்து அனுப்புகிறார்களாம். அதேசமயம் அவற்றை வெளியிடவோ, அதைவைத்து அரசைக் குற்றம்சாட்டவோ தி.மு.க தலைவர் ஸ்டாலின் தயங்குகிறார். `பாருங்கள் எப்படி எல்லாம் ஸ்டாலின் தரம் தாழ்ந்து அரசியல் செய்கிறார்’ என்று ஆளும் தரப்பு பிரசாரம் செய்தால், மக்கள் மத்தியில் தி.மு.க-வுக்கு கெட்ட பெயர் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று ஸ்டாலின் யோசிப்பதாகக் கூறப்படுகிறது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

கொல்கொத்தா, மும்பை, டெல்லி... தூத்துக்குடிக்கு ரூட் கேட்கும் கனிமொழி!

தூத்துக்குடி எம்.பி-யான கனிமொழியின் கோரிக்கையை ஏற்று, தூத்துக்குடி விமான நிலையத்தில் இரவு நேரத்திலும் விமானங்கள் தரையிறங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், `தூத்துக்குடியிலுள்ள தங்கள் சரக்குகளை க்ளியர் செய்வதற்கு கொல்கத்தா, மும்பை, டெல்லி தொழிலதிபர்கள் பெரும்பாலும் திருவனந்தபுரம் ஏர்போர்ட்டையே நம்பியிருக்க வேண்டியிருக்கிறது. இந்த நகரங்களுடன் தூத்துக்குடிக்கு நேரடி விமான தொடர்பு ஏற்பட்டால், சரக்குகளை உடனடியாக க்ளியர் செய்ய முடியும்’ எனச் சில முக்கிய தொழிலதிபர்கள் கனிமொழியிடம் கோரிக்கை விடுத்துள்ளர். இதற்கான ஒப்புதலைப் பெற கனிமொழி டெல்லியில் பேச ஆரம்பித்திருக்கிறாராம்.

பெண் குழந்தைக்கு பாதுகாப்பு... கரிசனம் காட்டும் காவல்துறை!

அமைச்சர் வேலுமணியின் நிழலாக வலம்வரும் `நமது அம்மா’ நாளிதழ் வெளியீட்டாளர் சந்திரசேகரின் வீடு கோவை வடவள்ளியில் இருக்கிறது. கொரோனா பாதிப்பால், கோவை மாநகராட்சியில் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், கொரோனா பாதிப்பு இல்லாத சந்திரசேகர் வீடு இருக்கும் தெருவையும் அடைத்துவிட்டார்கள். `சந்திரசேகருக்கு சில மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்தக் கைக்குழந்தையின் பாதுகாப்புக்காகவே, காவல்துறை அந்தப் பகுதியை அடைத்துள்ளது’ என்கிறார்கள்!

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்
இந்தமுறையும் இமயமலைதானா?!
விரக்தியில் ரஜினி மன்ற நிர்வாகிகள்

`அரசியலுக்கு வருவேன்’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் உறுதி கொடுத்த ரஜினிகாந்த், தனது அடுத்த படத்துக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன. அதனால், `இந்த முறையும் இமயமலை கதைதானா!’ என்று அவரது மன்ற நிர்வாகிகள் புலம்புகிறார்கள். இதற்கிடையே ரஜினியிடம் சமீபத்தில் கதர் சட்டை கட்சியின் தமிழக முன்னாள் தலைவர் ஒருவர் பேசியிருக்கிறார். அப்போது சொந்தக் கட்சி மீதான அதிருப்திகளை பகிர்ந்துகொண்டதுடன், தி.மு.க-வுக்கு எதிராகவும் பல விஷயங்களை புலம்பி தீர்த்துவிட்டாராம். இதை அறிந்த தி.மு.க வட்டாரம், `பழைய பகையை தீர்த்துக்கொள்ள திட்டமிடுகிறார் `மரியாதை’க்குரிய அந்தக் கதர் சட்டை தலைவர்’ என்று ரியாக்ட் செய்ததாம்!

டிப்ஸ் தரும் சென்னை போலீஸ் கமிஷனர்... நெளியும் அதிகாரிகள்!

சி.பி.ஐ-யில் ஏழு வருடங்கள் பணிபுரிந்து துப்பறிந்த அனுபவங்களை போலீஸ் அதிகாரிகளிடம் சொல்லி சொல்லி சிலாகிக்கிறாராம் சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால். அவர் கொடுக்கும் டிப்ஸ்களும் ஏராளம். ஆனால், கேட்கும் மூடில்தான் அதிகாரிகள் யாரும் இல்லை என்கிறார்கள். `கொரோனா தடுப்புப் பணிகளில் பிஸியாக இருக்கும்போது, மணிக்கணக்காகப் பேசுகிறார்; எங்களுக்கு ஏகப்பட்ட வேலைகள் இருக்கின்றன. இதை எல்லாம் எப்படிக் கேட்பது!’ என்று புலம்புகிறார்கள் அவர்கள்!

டி.எம்.இ பதவி நியமனம்... சீனியர்கள் புறக்கணிப்பு... புகைச்சலில் சுகாதாரத்துறை

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரியின் டீன் பதவியில் இருந்தார் நாராயணபாபு. இந்தப் பதவியில் இருந்தபடியே, தமிழக மருத்துவ கல்வி இயக்குநர் - டி.எம்.இ (பொறுப்பு) பதவியையும் கடந்த 11 மாதங்களாகக் கூடுதல் பொறுப்பாகக் கவனித்துவந்தார். இந்த 11 மாதங்கள் என்பது அவருக்கு அளிக்கப்பட்ட மூன்றாவது முறை நீட்டிப்பாகும். ஏற்கெனவே இருமுறை தலா 11 மாதங்கள் அவர் அதே பதவியில்தான் `நீட்டிப்பு’ அடிப்படையில் இருந்திருக்கிறார். மொத்தம் 33 மாதங்கள். இந்தநிலையில், ஜூலை 3-ம் தேதி அவரையே மீண்டும் டி.எம்.இ பதவியில் நியமித்திருக்கிறது தமிழக அரசு. இம்முறை `பொறுப்பு’ பதவி என்றில்லாமல் ‘ரெகுலர்’ பதவியாக அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதுதான் இப்போது சர்ச்சையாக வெடித்திருக்கிறது.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 30-க்கும் மேற்பட்டவர்கள் டீன் பதவியில் இருக்கிறார்கள். இவர்களில் சீனியாரிட்டி அடிப்படையில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் நாராயணபாபு. முதல் இடத்தில் புதுக்கோட்டை அரசு மருத்துவமனை டீனும், இரண்டாவது இடத்தில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை டீனும் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, மூன்றாவது இடத்தில் இருப்பவரை ரெகுலர் டி.எம்.இ-யாக எப்படி நியமிக்கலாம் என்று சுகாதாரத்துறையில் புகைச்சல் கிளம்பியுள்ளது. கடந்த ஐந்து வருடங்களாக டி.எம்.இ பதவி நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் இரண்டிலும் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அவற்றை எல்லாம் கருத்தில்கொள்ளாமல் இந்த நியமனம் நடந்திருப்பதாக கூறப்படுகிறது.

கனிமொழி
கனிமொழி
கனிமொழி அட்டாக்!
எடப்பாடி வியூகம்

சமீபத்தில் கனிமொழியைக் குறிவைத்து அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிக்கை விடுத்தார். `சாத்தான்குளம் விவகாரத்தில் அரசியல் செய்வதை கனிமொழி கைவிட வேண்டும்’ என அறிக்கையில் மாஃபா கொதித்திருந்தார். கனிமொழியை அட்டாக் செய்யச் சொன்னதே முதல்வர் தரப்பு கொடுத்த ஐடியா தானாம். `கனிமொழியைத் தாக்குவதன்மூலம் தி.மு.க-வுக்குள் ஸ்டாலினுக்குப் போட்டியாக ஒரு தலைவரை உருவாக்கலாம். ஜெயலலிதா இருந்தபோதும் இதைத்தான் செய்தார். தி.மு.க-வில் கனிமொழி மாற்றுத் தலைவராக உருவெடுத்துவிடுவாரோ என ஸ்டாலின் குடும்பம் டென்ஷன் ஆகும். அவர்கள் கட்சிக்குள் குழப்பம் வரும்’ எனத் திட்டமிட்டுத்தான் இந்த அறிக்கையை மாஃபா மூலம் முதல்வர் தரப்பு விடச் சொன்னதாம்.

கிஷோர் கொடுத்த 294/170 ரிப்போர்ட்
மம்தா அதிர்ச்சி!

தி.மு.க-வுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுப்பதுபோல, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜிக்காகவும் பிரசாந்த் கிஷோர் டீம் பணியாற்றுகிறது. 2021-ல் தமிழகத்திலும் மேற்கு வங்கத்திலும் ஒரே நேரத்தில்தான் தேர்தல்கள் வரவிருக்கின்றன. இந்தநிலையில், மக்களிடம் நடத்திய ஒரு சர்வே முடிவை மம்தாவிடம் பி.கே டீம் அளித்ததாம். மொத்தமுள்ள 294 தொகுதிகளில் சுமார் 170 தொகுதிகள் பா.ஜ.க-வுக்குச் சாதகமாக இருப்பதாக ரிப்போர்ட்டில் பி.கே டீம் குறிப்பிட்டுள்ளது. அதிர்ச்சியடைந்த மம்தா பானர்ஜி, பா.ஜ.க-வுக்கு எதிராக இஸ்லாமியர் மற்றும் பட்டியல் சமூக ஓட்டுகளைத் திரட்டும் வேலையைத் தீவிரப்படுத்த சொல்லியுள்ளாராம்.

அன்புமணியின் அக்னி கலசம்... பா.ம.க-வினர் ஆரவாரம்!

பா.ம.க-வின் அணி நிர்வாகிகளுடன் அந்தக் கட்சியின் இளைஞர் அணித்தலைவர் அன்புமணி இணையவழியில் கூட்டங்களை நடத்திவருகிறார். அந்த வகையில், சமீபத்தில் வன்னியர் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. ஒரு வருடத்துக்கு முன்பு வன்னியர் சமூகத்தினரின் அடையாளமாகக் கருதப்படும் அக்னி கலசத்தைத் தனது வலது கை புஜத்தில் அன்புமணி பச்சை குத்தியிருந்தார். இதை நினைவில் வைத்திருந்த நிர்வாகி ஒருவர், `அண்ணே, இப்பவும் கையில பச்சை குத்தியிருக்கீங்களா?’ என வேடிக்கையாகக் கேட்டுள்ளார். அன்புமணி சிரித்துக்கொண்டே, வலது புஜத்தில் இருந்த அக்னி கலச பச்சை குத்திய முத்திரையைக் காட்டவும் நிர்வாகிகள் வீடியோ காலிலேயே ஆரவாரம் செய்துள்ளனர். அன்புமணி பச்சை குத்தியிருக்கும் அந்தப் புகைப்படம் பா.ம.க-வினர் மத்தியில் வைரலாகிறது.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

நாகையில் உடைந்துபோன தடுப்புச்சுவர்... கட்டுமான நிறுவனம் அலட்சியம்!

நாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகே அரும்பாக்கம் வீரசோழன் ஆற்றிலிருந்து சேர்வராயன் வாய்க்கால், குறும்பகுடி பாசன வாய்க்கால் ஆகியவை செல்கின்றன. அந்த வாய்க்கால்களின் கரையைப் பலப்படுத்துவதற்காக 5.8 கோடி ரூபாய் செலவில் தடுப்புச்சுவர் அமைக்க ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் விடப்பட்டது. அதையடுத்து அவசரமாகத் தடுப்புச்சுவர் கட்டப்பட்டது. ஆனால், கட்டப்பட்ட 10 நாள்களில் ஆற்றில் தண்ணீர் வந்ததும் உடைந்துபோனது அந்தத் தடுப்புச்சுவர். இதைக் கண்டித்து, கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தற்போது மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் மறுபடியும் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. கொசுரு தகவல்... அந்தக் கட்டுமான நிறுவனம் ஆளுங்கட்சியின் உச்சப் பிரமுகருக்கு வேண்டப்பட்ட நபருடையதாம்!

நீலகிரியில் ஏமாற்றம் தரும் சுப்ரியா சாஹூ

நீலகிரியில் கொரோனா தடுப்பு கண்காணிப்பு அதிகாரியாக உள்ள சுப்ரியா சாஹூ மீது மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பைக் கொண்டிருந்தனர். ஆனால், மக்கள் எதிர்பார்த்த அளவுக்கு அவரது செயல்பாடுகள் இல்லை என்று கூறப்படுகிறது. ஊரே கொரோனா தடுப்புப் பணியில் தீவிரம் காட்டிவரும் நிலையில், பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் நீலகிரி ஆட்சியராக இருந்தபோது கையில் எடுத்து தோல்வியடைந்த மரம் நடும் திட்டத்தை மீண்டும் கையிலெடுத்து, மரம் நடுகிறேன் என விழா நடத்துவது, தனக்கு வேண்டியவர்ளை அழைத்து கூட்டம் சேர்ப்பது எனக் கொரோனா பணியை திசைமாற்றுவதாக அதிகாரிகள் சலித்துக்கொள்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு