Published:Updated:

”திமுக-மீது மக்கள் கொந்தளிப்பில் இருப்பதால் ஈரோடு இடைத்தேர்தலில் நிச்சயம் வெல்வோம்!” - இபிஎஸ் உறுதி

எடப்பாடி பழனிசாமி

”தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. தினமும் கொலை, கொள்ளைகள் அதிகரித்துவருகின்றன. ஆயுதப்படை போலீஸ் ஜீப்பையே திருடும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது.” - எடப்பாடி பழனிசாமி

Published:Updated:

”திமுக-மீது மக்கள் கொந்தளிப்பில் இருப்பதால் ஈரோடு இடைத்தேர்தலில் நிச்சயம் வெல்வோம்!” - இபிஎஸ் உறுதி

”தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. தினமும் கொலை, கொள்ளைகள் அதிகரித்துவருகின்றன. ஆயுதப்படை போலீஸ் ஜீப்பையே திருடும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது.” - எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன் உள்ளிட்ட கட்சியினர் இல்லங்களில் நடக்கும் விழாக்களில் கலந்துகொள்வதற்காக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று நெல்லை மாவட்டத்துக்கு வருகை தந்தார்.

மணமக்களை வாழ்த்திய எடப்பாடி பழனிசாமி
மணமக்களை வாழ்த்திய எடப்பாடி பழனிசாமி

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “ஈரோடு கிழக்குத் தொகுதியில் நாங்கள் நிறைய திட்டங்களை நிறைவேற்றியிருந்தோம். ஆனால் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு ஈரோடு கிழக்குத் தொகுதி மக்களுக்கு ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை. நாங்கள் ஈரோடு நகருக்கு 450 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவேரி குடிநீர் திட்டத்தைக் கொண்டுவந்தோம். அந்தப் பணியைச் செயல்படுத்தாமல் தி.மு.க கிடப்பில் போட்டுவிட்டது.

நான் முதல்வராக இருந்தபோது டெல்டா மாவட்டங்களில் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு 20,000 ரூபாய் வழங்கினோம். ஆனால் அது போதாது, 30,000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியாக இருந்தபோது ஸ்டாலின் சொன்னார். ஆனால் இப்போது 20,000 ரூபாய் மட்டுமே கொடுக்கிறார். எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒன்றைப் பேசுவதும், ஆளுங்கட்சியாக இருக்கும்போது அதை மாற்றிச் செய்வதும் ஸ்டாலினுக்கு வழக்கமாகிவிட்டது. ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க அமோகமாக வெற்றிபெறும்.

செய்தியாளர் சந்திப்பு
செய்தியாளர் சந்திப்பு

மக்கள் தி.மு.க-மீது கொந்தளிப்புடன் இருக்கிறார்கள். கடந்த 21 மாத ஸ்டாலின் தலைமையிலான அரசு, மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. அவரின் தந்தைக்கு நினைவிடமும், மதுரையில் அவர் தந்தை பெயரில் நூலகமும் அமைத்திருக்கிறார். அதோடு, மீனவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களின் எதிர்ப்பையும் மீறி கடலில் எழுதாத பேனாவை வைக்கவிருக்கிறார். பேனாவை கடலில்தான் வைக்க வேண்டும் என்றில்லை. அதை கருணாநிதி நினைவு மண்டபம் அருகிலேயே தரையில் வைக்கலாம். நாங்கள் நினைவு மண்டபம் வைப்பதை எதிர்க்கவில்லை. ஆனால், அதைக் கடலுக்குள் வைப்பதையே எதிர்க்கிறோம்.

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க-வினர் 560 அறிவிப்புகளை வெளியிட்டார்கள். அதில் இடம்பெற்ற முக்கியமான அறிவிப்புகள் எதையுமே இந்த விடியா அரசு நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுப்போய்விட்டது. போதைப்பொருள் அதிகரித்துவிட்டது. பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. குற்றங்கள் அதிகரித்துவிட்டன. திறமையற்ற பொம்மை முதல்வர் ஆள்வதால் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுக்கிடக்கிறது.

திருமணவிழாவில் பேசும் எடப்பாடி பழனிசாமி
திருமணவிழாவில் பேசும் எடப்பாடி பழனிசாமி

ஈரோடு இடைத்தேர்தலில் எங்களுடைய வெற்றி நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும். அ.தி.மு.க-வை எந்தக் கட்சியும் தாங்கிப்பிடிக்கவில்லை. அதற்கான அவசியமும் இல்லை. அ.தி.முக-தான் பல கட்சிகளைத் தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கட்சித் தலைவரும் தங்கள் கட்சியை வளர்க்கவே நினைப்பார்கள். அதில் எந்தத் தவறும் இல்லை. பா.ஜ.க-வுடன் கூட்டணி தொடர்கிறது.

ஆனால், தி.மு.க கூட்டணியில் தி.மு.க மட்டுமே வளர்கிறது. மற்ற கட்சிகள் வளரவே இல்லை. மக்களை பாதிக்கும் எந்தப் பிரச்னைக்கும் தி.மு.க-வில் அங்கம் வகிக்கும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எந்தக் கட்சியும் பேசுவதே இல்லை. அந்தக் கட்சிகள் தி.மு.க-வுக்கு அடிமைச் சாசனம் எழுதிக்கொடுத்துவிட்டன. அதனால் இன்னும் கொஞ்ச நாளில் அவர்கள் காணாமல்போவார்கள்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.