Published:Updated:

``14 மாதங்களில் ரூ.20 ஆயிரம் கோடி சுருட்டியிருக்கிறார்கள்!" - திமுக மீது எடப்பாடி பழனிசாமி புகார்

எடப்பாடி பழனிசாமி

‘‘தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்று 14 மாதங்கள் ஆகின்றன. எந்த நன்மையும் செய்யவில்லை. கிட்டத்தட்ட எல்லா துறைகளிலும் ஊழல் செய்து 20 ஆயிரம் கோடி ரூபாய் சுருட்டியதுதான் மிச்சம்’’ என்று குற்றஞ்சாட்டுகிறார் எடப்பாடி பழனிசாமி.

``14 மாதங்களில் ரூ.20 ஆயிரம் கோடி சுருட்டியிருக்கிறார்கள்!" - திமுக மீது எடப்பாடி பழனிசாமி புகார்

‘‘தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்று 14 மாதங்கள் ஆகின்றன. எந்த நன்மையும் செய்யவில்லை. கிட்டத்தட்ட எல்லா துறைகளிலும் ஊழல் செய்து 20 ஆயிரம் கோடி ரூபாய் சுருட்டியதுதான் மிச்சம்’’ என்று குற்றஞ்சாட்டுகிறார் எடப்பாடி பழனிசாமி.

Published:Updated:
எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களைச் சந்தித்து வருகிறார். இன்று காலை தருமபுரியில் சுற்றுப்பயணத்தை தொடங்கிய அவர் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களின் வழியாக வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் வரை பயணிக்கிறார். வழிநெடுக அவருக்குத் தொண்டர்கள் பிரமாண்ட வரவேற்பு கொடுக்கின்றனர்.

கிருஷ்ணகிரியில் பேசிய அவர், ‘‘இருபெரும் தலைவர்களால் உருவாக்கப்பட்ட இந்த இயக்கம், இன்றைக்கு சோதனையை சந்தித்துக்கொண்டிருக்கிறது. தேர்தல் நேரத்தில் சில விஷமிகள்; சில துரோகிகள் நம்மோடு இருந்துகொண்டே வெற்றியைத் தடுத்து நிறுத்தினார்கள். அந்தக் கறுப்பு ஆடு எதுவென்று அடையாளம் கண்டுபிடித்துவிட்டோம். அவர் முறையாக தேர்தல் பணியாற்றியிருந்தால் அ.தி.மு.க ஆட்சியில் இருந்திருக்கும். ஆனால், வேண்டுமென்றே எதிரியோடு துரோகியும் சேர்ந்து தேர்தல் நேரத்தில் சதிவேலை செய்ததால், நமக்குக் கிடைக்க வேண்டிய வெற்றிவாய்ப்பு எதிரிக்குக் கிடைத்துவிட்டது. இது யாரால் வந்தது! இன்றைக்கு விழித்து கொண்டுவிட்டோம். எதிர்காலத்தில் எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க-தான் வெற்றி பெறும். தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்று 14 மாதங்கள் ஆகின்றன. எந்த நன்மையும் செய்யவில்லை. கிட்டத்தட்ட எல்லா துறைகளிலும் ஊழல் செய்து 20 ஆயிரம் கோடி ரூபாய் சுருட்டியதுதான் மிச்சம். வீட்டு மக்களைத்தான் பார்க்கிறார்கள். இலங்கையில் குடும்பத்தில் இருக்கிறவர்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தார்கள். அவ்வளவு அதிகாரம் படைத்த அதிபரே... ‘தப்பித்தோம் பிழைத்தோம்’ என்று ஓடிவிட்டார்.

தருமபுரியில்...
தருமபுரியில்...

அவருக்கே அந்த நிலைமை. ஒரு முதலமைச்சராக இருக்கும் ஸ்டாலின் அவர்களே, எண்ணிப் பார்த்து செயல்படுங்கள். இலங்கையைப்போல தமிழகத்தில் வந்துவிடக்கூடாது என்று எச்சரிக்கிறோம். குறுக்கு வழியில் அ.தி.மு.க-வை அழித்துவிடலாம் என்று ஒருபோதும் எண்ணாதீர்கள். கானல் நீராகத்தான் உங்களுக்கு விடை கிடைக்கும். இது, இறைவனால் படைக்கப்பட்ட கட்சி. நம்முடன் இருந்த ஒரு துரோகி யாரென்று உங்களுக்குத் தெரியும். கோயிலாகப் போற்றிய எம்.ஜி.ஆர் மாளிகையை தி.மு.க-வினருடன் கைகோத்து கொண்டு துரோகிகள் பிரதான கதவை உடைத்து அம்மா இருக்கின்ற அறையின் கதவையும் காலால் உதைத்து பொருள்களை திருடிச்சென்றார்கள். நிர்வாகிகள் எப்போது சேர்ந்தார்கள்; இருந்தார்கள்? என்ற பட்டியலையும் எடுத்துச் சென்று எரித்தவரா, இந்தக் கட்சிக்கு நன்மை செய்வார்? கொஞ்சம்கூட நெஞ்சில் ஈரம் இரக்கமில்லாமல், அரக்கத்தனமாக செய்பவர்கள் தலைவராக இருக்க முடியுமா!?’’ என்பதோடு பேச்சை நிறைவு செய்தார்.

தொடர்ந்து, வேலூர் புறநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் கொடுக்கப்பட்ட வரவேற்பையும் ஏற்றுகொண்டு பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘‘ஸ்டாலின் அவர்களே உங்களைப்போல பதவி வெறிப்பிடித்து அலைகின்றவர்கள் நாங்கள் அல்ல. கொடுக்கின்ற பதவியை ஏற்றுகொண்டு விஸ்வாசமாக உழைப்போம். கருணாநிதி முதலமைச்சராக இருக்க வேண்டும்; அவரே தி.மு.க-வுக்கும் தலைவராக இருக்க வேண்டும். அவரைத் தொடர்ந்து, அவர் மகன் ஸ்டாலின் முதலமைச்சராக இருக்க வேண்டும். அவரே இயக்கத்தின் தலைவராகவும் இருப்பார். ஸ்டாலினைத் தொடர்ந்து, அவரின் வாரிசு. மன கோட்டை கட்டிக்கொண்டிருக்கிறார் ஸ்டாலின். தி.மு.க என்ற தீயசக்தி வேரோடு மண்ணிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்பதற்காகத்தான் எம்.ஜி.ஆர் அ.தி.மு.க-வை தொடங்கிவைத்தார். அவர் நினைத்ததை நாம் செய்து முடிப்போம். ஆன்லைன் ரம்மி சூதாட்டத்துக்கு கருத்து கேட்கின்ற ஒரே முதலமைச்சர் ஸ்டாலின்தான். பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்துவிட்டன. ஆனால், ஸ்டாலின் ஒருவர் மட்டும்தான் பணத்துக்காக சப்பைக்கட்டு கட்டுகிறார்’’ என்றார்.

வேலூரில்...
வேலூரில்...

தொடர்ந்து, வேலூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு தலைமையில் பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘‘தி.மு.க தலைவர் ஸ்டாலின் அ.தி.மு.க-வை எப்பாடு பட்டாவது முடக்கிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிகொண்டிருக்கிறார். அவரின் தந்தை பலமுறை முயன்றார். அவராலயே முடியவில்லை. உங்களால் உடைக்க முடியுமா என்ன? துரோகிகளோடு சேர்ந்து அ.தி.மு.க-வை உடைத்துவிடலாம் என்று எண்ணாதீர்கள். அப்படி நினைத்தால், எதிர்காலத்தில் தி.மு.க எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தைக்கூட பெற முடியாது. ஏதோ ஆளுங்கட்சியாக வந்துவிட்டீர்கள். அதிகாரம் கிடைத்துவிடும் என்ற மமதையில் இருந்துவிடாதீர்கள். தி.மு.க எப்போதுமே நல்லது செய்ததாக வரலாறே கிடையாது. ஆட்சிக்கு வரும் முன்பு ஒரு பேச்சு. ஆட்சிக்கு வந்தப் பின்பு அப்படியே பல்டி அடித்துவிடுவார்கள். அரசியல் ரீதியாக சந்திக்க முடியாத திராணியற்ற கட்சி தி.மு.க. இது, விஞ்ஞான உலகம். எவரையும் அடக்கி ஆள முடியாது. மக்கள் வெகுண்டெழுந்தால் யாராலையும் கட்டுப்படுத்த முடியாது. கிடைக்கின்ற நாளைப் பயன்படுத்தி நன்மை செய்யப் பாருங்கள். அனைத்துத் துறைகளிலும் ஊழல். 20 ஆயிரம் கோடி கொள்ளையடித்திருக்கிறார்கள். ஊழலுக்காக களைக்கப்பட்ட ஒரே அரசாங்கம் தி.மு.க-தான். அதே நிலைமை வந்தாலும் வந்துவிடும். மக்கள் விரோத ஆட்சிக்கு முடிவு கட்டி அம்மாவின் ஆட்சியை மீண்டும் கொண்டுவர உழைப்போம்’’ என்றார்.