Published:Updated:

``திமுக-வின் கைக்கூலி பன்னீர்..!" - எடப்பாடி சீறுவதன் பின்னணி என்ன?

ஓபிஎஸ் - இபிஎஸ் - ஸ்டாலின்

தலைமைக் கழகத்தில் நடந்திருக்கும் கலவரத்தின் பின்னணியிலும், அலுவலகத்திலிருந்து ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டதிலும் தி.மு.க அரசின் கைங்கரியம் இருப்பதாகக் கொதிக்கிறது எடப்பாடி தரப்பு.

``திமுக-வின் கைக்கூலி பன்னீர்..!" - எடப்பாடி சீறுவதன் பின்னணி என்ன?

தலைமைக் கழகத்தில் நடந்திருக்கும் கலவரத்தின் பின்னணியிலும், அலுவலகத்திலிருந்து ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டதிலும் தி.மு.க அரசின் கைங்கரியம் இருப்பதாகக் கொதிக்கிறது எடப்பாடி தரப்பு.

Published:Updated:
ஓபிஎஸ் - இபிஎஸ் - ஸ்டாலின்

"அண்ணன் பன்னீர்செல்வம், தி.மு.க-வின் கைக்கூலியாக மாறிவிட்டார்".. ஜூலை 11-ம் தேதி நடந்த அ.தி.மு.க பொதுக்குழுவிலும், அதற்குப் பிறகு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பிலும் எடப்பாடி பழனிசாமி பலமுறை உச்சரித்த வார்த்தைகள்தான் இவை. "தி.மு.க-வுடன் இணைந்து கொண்டு கட்சியை அழிக்கப் பார்க்கிறார் பன்னீர்" என்று ஆவேசமாகவே குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார் எடப்பாடி. அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் நடந்திருக்கும் கலவரத்தின் பின்னணியிலும், அலுவலகத்திலிருந்து ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டதிலும் தி.மு.க அரசின் கைங்கரியம் இருப்பதாகக் கொதிக்கிறது எடப்பாடி தரப்பு. தி.மு.க-வுடன் இணைந்து கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக, அ.தி.மு.க-விலிருந்து பன்னீர் நீக்கப்பட்டிருக்கிறார். "எடப்பாடி எழுப்பியிருக்கும் இந்தக் குற்றச்சாட்டுகளின் பின்னணி என்ன? தி.மு.க-வுடன் சேர்ந்துகொண்டு கட்சிக்குத் துரோகம் செய்தாரா பன்னீர்?" உள்ளிட்டக் கேள்விகளுடன் எடப்பாடியின் ஆதரவு முன்னாள் அமைச்சர்களிடம் பேசினோம்.

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி

"பன்னீருக்கு தி.மு.க-வின் மறைமுக ஆதரவு அமோகமாக இருக்கிறது என்பதற்கு, தலைமைக் கழகத்தில் நடந்த கலவரமே சாட்சி. தொடக்கத்தில், பன்னீரின் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் சுமார் 200 பேர் தலைமைக் கழகத்திற்கு வந்தனர். அப்போது, அங்கிருந்த ஆதிராஜாராம், விருகை ரவி, தி.நகர் சத்யா ஆகியோரின் ஆதரவாளர்கள், கிருஷ்ணமூர்த்தியைத் தலைமைக் கழகத்திற்குள் அனுமதிக்க மறுத்து விரட்டிவிட்டனர். இருதரப்புக்குமான மோதல் அப்போதே தொடங்கிவிட்டது. காவல்துறை நினைத்திருந்தால், உடனடியாக அவ்வை சண்முகம் சாலைக்குச் சீல் வைத்து, மேற்கொண்டு யாரும் தலைமைக் கழக ஏரியாவில் கூடாதபடி தடுத்திருக்க முடியும். ஆனால், அப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பிரச்னை பெரிதாகட்டும் என்றுதான் போலீஸும் காத்திருந்தது. சிறிது நேரத்தில் பிரசார வேனில் பன்னீர் தலைமைக் கழகம் புறப்பட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

அவர் வருவதற்கு முன்னதாக, முதுகுளத்தூரிலிருந்து வந்திருந்த பன்னீரின் ஆதரவாளர்கள் சுமார் 50 பேர் தலைமைக் கழகத்தைக் கட்டுப்பாட்டிற்குள் எடுக்க முயன்றனர். எடப்பாடி தரப்பினருக்கு அவர்களுக்கும் இடையே மோதல் வெடித்து கல்வீச்சு ஆரம்பமானது. அப்போதுகூட போலீஸ் கண்டுகொள்ளவில்லை. அவ்வை சண்முகம் சாலைக்குள் நுழையப் பன்னீரின் வாகனம் முயன்ற போது, கல்வீச்சு உக்கிரமாக இருந்தது. பன்னீருடன் வந்திருந்த முதுகுளத்தூர் ஆதரவாளர்கள் கையில் கிடைத்த கல், கம்பு உள்ளிட்டவைக் கொண்டு எடப்பாடியின் ஆதரவாளர்களைத் தாக்கினர். தாக்குதல் தீவிரமானதால், எடப்பாடியின் ஆட்கள் பின் தங்கிவிட்டனர். பன்னீர் பாதுகாப்பாகத் தலைமைக் கழகத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் அலுவலகத்திற்குள் நுழைந்தபிறகுதான், அதிவிரைவுப்படை கொண்டுவரப்பட்டு, தலைமைக் கழக ஏரியாவில் கூடியிருந்த அ.தி.மு.க-வினர் மீது தடியடி நடத்தப்பட்டது. ஆக, தலைமைக் கழகத்திற்குள் பன்னீர் வந்துசேரும் வரை போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கிடையே, கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளராகப் பதவியேற்றுக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, தலைமைக் கழகத்தில் பொதுச்செயலாளர் அறையில் அமர்ந்து கட்சி ரீதியிலான அலுவல்களை மேற்கொள்ளத் தீர்மானித்திருந்தார். அவர் தலைமைக் கழகத்திற்குள் வந்துவிடக் கூடாது, ஜெயலலிதா அமர்ந்த பொதுச்செயலாளர் அறையில் அவர் அமரக்கூடாது என்று திட்டமிட்டே கலவரத்தைப் பன்னீர் தரப்பு கட்டவிழ்த்துவிட்டது. கலவரத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, தலைமைக் கழகம் அமைந்திருக்கும் பகுதியில், 145 தடை உத்தரவைப் போட்ட தி.மு.க அரசு, தலைமைக் கழகத்திற்கும் சீல் வைத்துவிட்டது. பெயருக்கு சில நிமிடங்கள் தர்ணா செய்த பன்னீர், கட்சி அலுவலகத்திலிருந்த ஆவணங்களையெல்லாம் எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.

அதிமுக தலைமை கழக அலுவலகம்
அதிமுக தலைமை கழக அலுவலகம்

அவர் நினைத்ததுபோல, தலைமைக் கழகத்திற்குள் எடப்பாடி வருவதைத் தடுத்துவிட்டார். அதற்காக, கட்சி அலுவலகமே முடக்கப்பட்டாலும் பரவாயில்லை என தி.மு.க-வுடன் கைகோத்துக் கொண்டு பன்னீர் செயல்பட்டதுதான் எடப்பாடிக்கு பெரும் ஆத்திரத்தை வரவழைத்துவிட்டது. கலவரத்தைத் தடுக்க எவ்வளவோ வாய்ப்புகள் இருந்தும் போலீஸ் கண்டுகொள்ளவில்லை. தி.மு.க-வின் ஆதரவு இல்லாமல், கட்சி அலுவலகத்திற்குச் சீல் வைக்க வாய்ப்பில்லை.

சீல் நடவடிக்கைக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி, பன்னீர் இருவருமே மனுத்தாக்கல் செய்திருக்கிறார்கள். மனு இன்னும் விசாரணைக்குப் பட்டியலிடப்படவில்லை. அலுவலகத்திற்கு உரிமை கோருவது தொடர்பான மயிலாப்பூர் கோட்டாட்சியர் விசாரணை, வரும் ஜூலை 25-ம் தேதி நடைபெறுகிறது. ஒருங்கிணைப்பாளர் என்கிற அளவில் தன் தரப்பு வாதத்தைப் பன்னீர் எடுத்து வைப்பார். பொதுக்குழுவால் இடைக்கால பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் அடிப்படையில், தலைமைக் கழகத்திற்கு எடப்பாடி உரிமை கோருவார். இந்த விவகாரம் சட்டச் சிக்கல், தேர்தல் ஆணையத்தின் கருத்து சம்பந்தப்பட்டது என்பதால், நீதிமன்றத்தை நாடுமாறு கோட்டாட்சியர் சொல்வதற்கு வாய்ப்பிருக்கிறது. நீதிமன்ற உத்தரவு வரும் வரை, எம்.ஜி.ஆர் மாளிகை பூட்டப்பட்டிருக்கும் என்பதுதான் இதில் வேதனைக்குரிய விஷயம்" என்றனர் விரிவாக.

ஓபிஎஸ் - இபிஎஸ்
ஓபிஎஸ் - இபிஎஸ்

'தி.மு.க-வுடன் பன்னீர் கரம் கோர்த்து செயல்பட்டார்' என்பதை ஆணித்தரமாக மறுக்கிறது பன்னீர் தரப்பு. இது குறித்து பன்னீரின் ஆதரவாளர் கோவை செல்வராஜ்கூட விளக்கமாகப் பேசியிருக்கிறார். "ஒரு நிலம் தொடர்பாகத் தகராறு எழுந்தால், அந்த நிலம் சம்பந்தப்பட்ட பகுதியில் 145 தடை உத்தரவு போடுவது அரசின் கடமை. அதைத்தான் அரசு செய்திருக்கிறது. தலைமைக் கழகத்திற்கு அமைதியாக வந்த பன்னீரின் ஆதரவாளர்கள்மீது முதலில் தாக்குதல் நடத்தியவர்கள் எடப்பாடியின் ஆதரவாளர்கள்தான். கழக அலுவலகத்திற்குச் சீல் வைக்கப்பட்டதில் எங்களுக்கும் வருத்தம்தான். ஆனால், இதற்கு முன்னரே பல சந்தர்ப்பங்களில் இதுபோன்ற சீல் வைப்பு சம்பவங்கள் நடந்து, கழகத்தின் தலைமை குறித்தான விவாதத்தில் பல திருப்பங்கள் அரங்கேறியிருக்கின்றன. அதுபோல, இந்தமுறையும் திருப்பம் அரங்கேறும்" என்கிறார்கள் பன்னீரின் ஆதரவாளர்கள்.

அதிமுக
அதிமுக

இதற்கிடையே, கலவரம் வெடித்த ஜூலை 11-ம் தேதி இரவு, சிலரைச் சந்திப்பதற்காகப் பன்னீரும் அவர் மகன் ரவீந்திரநாத்தும் காரில் புறப்பட்டுள்ளனர். அவர்கள் காரை பத்திரிகையாளர்கள் பின் தொடர்வது தெரிந்தவுடன், உடனடியாக வீடு திரும்பியிருக்கிறார்கள். "தனக்கு டெல்லியிலிருந்து சப்போர்ட் கிடைத்ததால்தான், அதிரடியாகத் தலைமைக் கழகத்திற்குள் நுழைந்து, கட்சி அலுவலகத்திற்குச் சீல் வைக்கும் அளவுக்கு நிலைமையைப் பன்னீர் கொண்டு சென்றுவிட்டார். இதில், தி.மு.க-வுக்கும் லாபம்தான் என்பதை மறுப்பதற்கில்லை. இந்தப் பிரச்னையால், திடமான எதிர்க்கட்சியே இல்லாத சூழலை தி.மு.க உருவாக்கியிருக்கிறது" என்கிறார்கள் விவரமறிந்த அ.தி.மு.க சீனியர்கள்.


பொன்விழா காணும் இயக்கம், பழிச்சொல், வார்த்தை வசவுகள், துரோகக் குற்றச்சாட்டுகளில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது. இந்த வார்த்தைப் போர் இப்போதைக்கு ஓயாது என்பதே கழகத்திலிருந்து நமக்குக் கிடைக்கும் தகவல்.