Published:Updated:

`கூட்டணிக் கட்சிகளை சமாளிப்பது எப்படி?!' -நகர்ப்புற தேர்தலுக்காக ஐவர் குழுவை அமைத்த அ.தி.மு.க.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொண்டால் கண்டிப்பாகப் பின்னடைவுதான் ஏற்படும் என்று உளவுத்துறை அறிக்கை அளித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

``உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. பா.ம.க, பா.ஜ.க, தே.மு.தி.க உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் உங்களுக்கு எதிரான வேலையைச் செய்யத் தொடங்கியிருக்கிறது. இப்படியே போனால் உள்ளாட்சித் தேர்தலின் பாதிப்பு, நகர்ப்புறத் தேர்தலிலும் எதிரொலிக்கும்" என உளவுத்துறை தரப்பில் இருந்து கோட்டை வட்டாரத்துக்கு அறிக்கை அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ஐந்து பேர் கொண்ட குழுவை முதல்வர் அமைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் தவிர்த்து 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாகக் கடந்த மாதம் நடத்தப்பட்டது. ஜனவரி 2-ல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து, புதிய உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பொறுப்பேற்று பணிகளைத் தொடங்கிவிட்டனர். இந்தநிலையில் சென்னை தவிர்த்து தேர்தல் நடத்தப்படாமல் உள்ள ஒன்பது மாவட்டங்களில், மூன்று மாதங்களுக்குள் தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதேபோல், அனைத்து மாவட்டங்களிலும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளை மாநிலத் தேர்தல் ஆணையம் படுவேகமாகச் செய்து வருகிறது. புதிய மாவட்டங்களில் வார்டு வரையறைப் பணியும் தொடங்கிவிட்டது.

பொன்.ராதாகிருஷ்ணன்
பொன்.ராதாகிருஷ்ணன்

புதிய மாவட்டங்களில், வார்டு வரையறை தொடர்பான அறிவிப்பு, இன்னும் ஓரிரு நாள்களில் வெளியாக உள்ளது. வார்டு வரையறை இறுதிப் பட்டியல், பிப்ரவரி 29-ல் வெளியாகும். புதிய வார்டு வரையறை விவரம், மார்ச் 5-ல் அறிவிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறது தேர்தல் ஆணையம்.

ஆனால், வார்டு வரையறைப் பணி மார்ச் வரை நடக்க உள்ளதால் இந்த ஒன்பது மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் மே மாதம் வரையில் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் பேசத் தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர், ``கடந்த உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி பெரிய அளவில் வெற்றி பெறமுடியவில்லை என்ற ஆதங்கத்தை நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சில் தெளிவாகத் தெரிந்தது.

அதோடு அ.தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க, பா.ம.க, தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகள் அ.தி.மு.க மீது கடும் கோபத்தில் இருக்கின்றன. உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க-வினரே உள்ளடி வேலைகளைப் பார்த்தனர். அதனால் `கூட்டணியே வேண்டாம் என்று நினைத்திருந்த எங்களைக் கால் சீட், அரை சீட்டுக்காக கெஞ்ச வைத்துவிட்டார்கள்' என ஆவேசத்தை வெளிப்படுத்தினார் அன்புமணி. இதே கோபத்தில் பா.ஜ.க-வும் இருக்கிறது. இதுகுறித்துப் பேசிய பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், ``உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிட்ட இடங்கள் குறைவுதான். ஆனால் மன வருத்தங்கள் நிறைய இருக்கின்றன" என்றார்.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

அவரைத் தொடர்ந்து பொன்.ராதாகிருஷ்ணனும், ``தமிழகம் தீவிரவாதிகளின் கூடாரமாக மாறிவருகிறது" என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.

இதன்மூலம் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியில் கடுமையான மோதல் நிலவிக் கொண்டிருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. இதில், தே.மு.தி.க-வின் நிலைதான் கேள்விக்குறியாக உள்ளது. கூட்டணிக் கட்சியை அ.தி.மு.க கையாண்டவிதத்தை எதிர்த்து தே.மு.தி.க கிளைக்கழக நிர்வாகிகள் கடுமையாக விமர்சனம் செய்தார்கள்.

இதனைக் கண்டித்த பிரேமலதா விஜயகாந்த், `கட்சித் தலைமை உத்தரவில்லாமல் யாரும் பொது வெளியில் பேசக்கூடாது' என்று அறிக்கை வெளியிட்டார். `கூட்டணி கட்சியினரை எதிர்த்து பேசாமல் எங்களை அடக்கி வைப்பது எந்த விதத்தில் நியாயம்?' எனக் கொதிக்கின்றனர் தே.மு.தி.க மாவட்ட நிர்வாகிகள். இப்படிப்பட்ட சூழலில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொண்டால் கண்டிப்பாகப் பின்னடைவுதான் ஏற்படும் என்று உளவுத்துறை அறிக்கை அனுப்பியிருக்கிறது.

மாநில தேர்தல் ஆணையம்
மாநில தேர்தல் ஆணையம்

எனவே, தேர்தலைத் தள்ளி வைக்கலாமா எனவும் ஆலோசனை நடந்து வருகிறது. அதேநேரம், கூட்டணிக் கட்சிகளைச் சமாதானப்படுத்தும் வேலையில் அமைச்சர்கள் ஆர்.பி உதயகுமார், ஓ.எஸ்.மணியன் ஆகியோர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் மாவட்டம்தோறும் உள்ள நிர்வாகிகளுடன் கலந்து பேசுவது, குறிப்பாகக் கூட்டணிக் கட்சிகளை எப்படிக் கையாள்வது என்பது குறித்து கலந்துரையாட இருக்கிறார்கள்.

பின் செல்ல