Published:Updated:

`தங்கத்தட்டு கதை சொன்ன எடப்பாடி'- தகிக்கவைத்த செங்கல்பட்டு விழாமேடை!

எடப்பாடி அந்தக் கதையைச் சொல்ல ஆரம்பித்தார். அப்போது, மேடையிலிருந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் முகம் இருண்டுபோனது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

மாநாடு மற்றும் தேர்தல் பிரசாரங்களின்போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குட்டிக் கதை ஒன்றைச் சொல்வது வழக்கம். எதிர்க்கட்சியில் உள்ளவர்களைக் குறிவைத்துச் சொல்லப்படும் அந்தக் கதைகள், நிகழ்கால அரசியலை மக்களுக்கு எளிதில் புரியவைக்கும். அவர் யாரைச் சொல்கிறார் என்பது எல்லோருக்கும் புரியும். அதுபோல், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் குட்டிக் கதைகளைச் சொல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். செங்கல்பட்டு மாவட்ட தொடக்க விழாவில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, இன்று ஒரு குட்டிக் கதை சொன்னார். ஆனால், அந்தக் கதை ‘சிலேடை’ போல உள்கட்சி உள்குத்தாக இருந்ததைப் போல இருந்தது.

செங்கல்பட்டு மாவட்ட தொடக்க விழா
செங்கல்பட்டு மாவட்ட தொடக்க விழா

ஸ்டாலினுக்கு கதை சொல்வதைப் போல எடப்பாடி அந்தக் கதையைச் சொல்ல ஆரம்பித்தார். அப்போது, மேடையிலிருந்த துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் முகம் இருண்டுபோனது. தொடையில் கையை வைத்து தலையைக் குனிந்துகொண்டு எதையோ யோசித்தபடியே இருந்தார் பன்னீர்செல்வம். கதை முடியும்போது, அதை வெளிக்காட்டாதவராக முகத்தைக் காட்டிக் கொண்டார். அப்படி என்ன கதை சொன்னார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி?

“அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுவதையே தொழிலாகக்கொண்டு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவரின் குணாதிசயங்கள் எப்படிப்பட்டவை என்பது மக்களுக்குத் தெரியும். உண்மையிலேயே மக்கள் பணி ஆற்றுபவர்களுக்குப் பலன் தானாக வந்துசேரும். இதைச் சொல்லும்போது, கதை ஒன்று நினைவுக்கு வருகிறது...

கோயில் திருவிழா ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் அங்கு கூடியிருந்தார்கள். அப்போது வானத்திலிருந்து தங்கத்தட்டு ஒன்று கோயில் முற்றத்தில் விழுந்தது. அந்த தங்கத்தட்டை கோயில் நிர்வாகி ஒருவர் கையில் எடுத்தார். அந்த தங்கத்தட்டு கோயிலுக்குச் சொந்தமா, பக்தர்களில் ஒருவருக்குச் சொந்தமா என ஒரு கேள்வி எழுந்தது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

அப்போது அந்தக் கோயில் நிர்வாகி, தங்கத்தட்டில் உள்ள ஒரு வாசகத்தைக் கண்டார். அன்பில் பிறந்தவர் யாரோ அவருக்கு ஆண்டவன் பரிசு’ என எழுதப்பட்டிருந்தது. உடனே அந்த நிர்வாகி, ''நாளைக்குப் பக்தர்கள் வந்து, தாங்கள் செய்த நற்செயல்களை விளக்கிச்சொல்லி தட்டை பெற்றுக்கொள்ளலாம்'' என்று அறிவித்தார். மறுநாள், ஏகப்பட்ட கூட்டம் கோயில் முன்பாக வந்து நின்றது. அப்போது ஒரு செல்வந்தன், தன் சொத்தை ஏழைகளுக்கு வாரி வாரி வழங்குவதாகக் கூறினான். உடனே அந்த நிர்வாகி, தங்கத்தட்டைக் கொண்டுசென்று அந்த செல்வந்தரிடம் கொடுத்தார். அவர் தானம் செய்தார் என்பதற்கு என்ன சாட்சி என்று கோயில் நிர்வாகி நினைத்துக்கொண்டிருக்கும்போதே, அந்தத் தட்டு தகரமாக மாறிவிட்டது.

தங்கத்தட்டு, தகுதி இல்லாதவன் கைக்குப் போனால், தகரத் தட்டாக மாறிவிடும் போலும் என்று எல்லோரும் பேசிக் கொண்டார்கள். அந்த ஊருக்கு நிறைய பணக்காரர்கள் வந்து தாங்கள் செய்த தான தர்மத்தைச் சொல்லி, தங்கத் தட்டைப் பெற முயன்றார்கள். பல பணக்காரர்களின் கைகளுக்குப் போன தங்கத்தட்டு, தகரத்தட்டாக மாறிவந்தது. சில நாள்கள் கழித்து அந்தக் கோயிலுக்கு எளிய மனிதர் ஒருவர் வந்தார். அவருக்கு தங்கத்தட்டு பற்றி எதுவுமே தெரியாது. கோயிலில் சாமி கும்பிட்ட போது, ஏழைகள் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

பொதுமக்கள் கூட்டம்
பொதுமக்கள் கூட்டம்

இந்த நாட்டில் இவ்வளவு ஏழைகளா என வேதனைப்பட்டார். அப்போது, கூட்ட நெரிசலில் கோயில் நிர்வாகி தங்கத்தட்டை தவறவிட்டார். அந்த தங்கத் தட்டு, கோயிலுக்குள் வந்த அந்த எளிய மனிதர் கையில் கிடைத்தது. அவர் கையிலிருந்த தங்கத் தட்டு தகரத்தட்டாக மாறாமல் ஜொலித்தது. உடனே அதைக் கண்ட கோயில் நிர்வாகி, மட்டற்ற மகிழ்ச்சியடைந்தார். உடனே அந்த எளிய மனிதரிடம் சென்று, ஐயா இந்த தங்கத்தட்டுக்கு உரிய மனிதர் நீங்கள்தான் என்றார். அந்த எளியவருக்கு தங்கத் தட்டு கிடைத்ததுபோல மக்களுக்காகப் பணியாற்றும் நமக்கு, இடைத் தேர்தலில் கிடைத்த வெற்றியைப் போல வெற்றி என்னும் தங்கத்தட்டை மக்கள் அளிப்பார்கள்” என்றார்.

கதை கேட்பவர்களின் மனவோட்டத்தை யாரறிவார்?