அலசல்
அரசியல்
Published:Updated:

துரோகி கோஷம்... பேனர் கிழிப்பு... கறுப்பு பலூன்... எடப்பாடியின் மதுரை அப்செட்!

எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
News
எடப்பாடி பழனிசாமி

விமான நிலைய சம்பவத்தை எடப்பாடி எதிர்பார்க்கவே இல்லை. ஹோட்டலுக்குத் திரும்பியதும் `உம்’மெனெ இருத்தவரை ஆர்.பி.உதயகுமார், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் சமாதானப்படுத்தினர்

‘‘மதுரை மண் ராசியானது’’ என்று கடந்த மாதம் உற்சாகம் ததும்பப் பேசிய எடப்பாடியை, சமீபத்திய மதுரை விசிட் அப்செட் மனநிலைக்குத் தள்ளியிருக்கிறது என்கின்றனர் ர.ர-க்கள்!

சிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர் சிங்கம்புணரி பொன்.மணி பாஸ்கரன் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக கடந்த 11-ம் தேதி மதுரைக்கு வந்தார் எடப்பாடி பழனிசாமி. அப்போது எடப்பாடிக்கு எதிராக, திருப்பத்தூரில் முக்குலத்தோர் அமைப்பும், சிவகங்கையில் ஓ.பி.எஸ் அணியினரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

முன்னதாக மதுரை விமான நிலையத்தில் இறங்கி, இணைப்புப் பேருந்தில் எடப்பாடி பழனிசாமி ஏறி வர, அதே பேருந்தில் பயணித்த அ.ம.மு.க பிரமுகர் ராஜேஸ்வரன் என்பவர், ‘‘துரோகத்தின் அடையாளம்’’ என்று எடப்பாடியைப் பார்த்து கோஷமிட்டபடியே அந்த வீடியோவை முகநூலில் லைவ் செய்திருக்கிறார். உடனே எடப்பாடியின் பாதுகாப்பு அதிகாரி, ராஜேஸ்வரனின் செல்போனைப் பிடுங்க... பேருந்துக்குள்ளேயே தள்ளுமுள்ளு ஆனது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இது குறித்துப் பேசும் மதுரை அ.தி.மு.க-வினர், ‘‘விமான நிலைய சம்பவத்தை எடப்பாடி எதிர்பார்க்கவே இல்லை. ஹோட்டலுக்குத் திரும்பியதும் `உம்’மெனெ இருத்தவரை ஆர்.பி.உதயகுமார், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் சமாதானப்படுத்தினர். மாலை 4 மணிக்கு சிங்கம்புணரி நிகழ்ச்சிக்குப் புறப்படுவதாக இருந்தவர், 2 மணிக்கே கிளம்பிச் சென்றுவிட்டார்.

ராஜேஸ்வரன்
ராஜேஸ்வரன்

நிகழ்ச்சியை முடித்துவிட்டு, சிவகங்கைப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக திருப்பத்தூர் வழியாக வந்தவரை வரவேற்க, வழிநெடுகிலும் வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. ஆனால், அன்றைய தினம் காலையிலேயே ஓ.பி.எஸ் தரப்பும், அ.ம.மு.க ஆதரவாளர்களும் அந்தப் பதாகைகளையெல்லாம் கிழித்தெறிந்துவிட்டனர். மேலும், நகரெங்கும் கண்டன போஸ்டர்களை ஒட்டியவர்கள், கலெக்டர் அலுவலகத்துக்கருகே கறுப்பு பலூன்களையும் பறக்கவிட்டனர். இப்படி சிவகங்கை நகரமே பதற்றமாகக் காணப்பட்டதால், எடப்பாடி பழனிசாமிக்கு எந்த இடையூறும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று எடப்பாடியின் காரிலேயே முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, விஜயபாஸ்கர் ஆகியோர் நெருக்கி அமர்ந்துகொண்டு பயணித்தனர். ஆனாலும் மதுரை விசிட் அவரை ரொம்பவே அப்செட்டாக்கிவிட்டது’’ என்றனர் வருத்தமாக.

இதற்கிடையே எடப்பாடிக்கு எதிராக கோஷமிட்ட ராஜேஸ்வரன் மீது ஆர்.பி.உதயகுமார் கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பதிலுக்கு ராஜேஸ்வரனும் ‘எடப்பாடி பழனிசாமி தூண்டுதலின்பேரில் தன்னை அ.தி.மு.க-வினர் தாக்கினர், கொலை மிரட்டல் விடுத்தனர்’ எனப் புகார் கூற, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட ஐந்து பேர்மீது கொலை முயற்சி உள்ளிட்ட ஏழு பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர்.