`வெல்ல வியாபாரம் டு முதல்வர்'; `எமெர்ஜென்ஸி டு எதிர்க்கட்சித் தலைவர்' - பழனிசாமி Vs ஸ்டாலின்!

பங்காளிகள் சூழ வாழ்ந்துவந்த பழனிசாமி, பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு, பங்காளிகள் சண்டை காரணமாகவே தோல்வியைத் தழுவியிருக்கிறார்... ஸ்டாலின் Vs பழனிசாமி: அரசியல் பாதை எப்படியிருந்தது?!
``நான் 34 வயதில் எம்.எல்.ஏ ஆனவன். தந்தையின் தயவால் வந்தவர் ஸ்டாலின். ஆனால், நான் சொந்த உழைப்பில் முன்னேறியவன்'' - சமீபத்திய கூட்டங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உதிர்த்துவரும் வார்த்தைகள் இவை.

``என்னை அரசியலுக்குக் கொண்டு வந்தது கருணாநிதி அல்ல. எமெர்ஜென்ஸியின் தாக்கம்தான். எனவே, என்னை அரசியலுக்குக் கொண்டுவந்தது கருணாநிதி அல்ல இந்திரா காந்தி'' என்று ஒருமுறை `வாரிசு அரசியல்' குறித்த விமர்சனங்களுக்குப் பதிலளித்திருந்தார் ஸ்டாலின். சமீபத்திய கிராமசபைக் கூட்டம் ஒன்றில், ``எடப்பாடி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்; முதல்வராக அல்ல. அவர் எப்படி முதல்வரானார் என்பதை நீங்கள் சமூக வலைதளங்களில் பார்த்திருப்பீர்கள்'' என்று நக்கல் தொனியில் பேசியிருந்தார்.

இப்படியாக முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவரும் தங்களின் அரசியல் வருகை பற்றியும், வளர்ச்சி பற்றியும் நிறைய மேடைகளில் பேசியிருக்கிறார்கள்; இனியும் பேசுவார்கள். இந்தச் சமயத்தில் இவர்கள் இருவரும் அரசியலில் கடந்துவந்த பாதை எப்படி இருந்தது என்பதை இந்தக் கட்டுரையில் அலசலாம்!
மு.க.ஸ்டாலின்
1953-ம் ஆண்டு சோவியத் தலைவர் ஸ்டாலின் மறைந்த வாரத்தில் கருணாநிதிக்கு மகனாகப் பிறந்தார் ஸ்டாலின். அதன் காரணமாகத்தான் தன் மகனுக்கு ஸ்டாலின் எனப் பெயர் சூட்டினார் கருணாநிதி. 1966-ம் ஆண்டு, தனது 14-வது வயதில் `தி.மு.க இளைஞர்குழு' என்ற சிறு குழுவை கோபாலபுரத்தில் தொடங்கினார் ஸ்டாலின். 1971 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வுக்காக முதன்முறையாகப் பிரசாரம் செய்தார் அவர்.1974-ம் ஆண்டு தி.மு.க-வின் பொதுக்குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். 1976-ல் எமெர்ஜென்ஸிக்கு எதிராகப் போராட்டம் நடத்தி, சிறை சென்றார் ஸ்டாலின்.

`ஸ்டாலின் கைதாகிறார்' என்ற செய்தி தி.மு.க தொண்டர்கள் மத்தியில் பரவியதால் கோபாலபுரத்தில் கூட்டம் அலைமோதியது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் ஸ்டாலினைக் கைதுசெய்து அழைத்துச் சென்றது காவல்துறை.
தி.க., தி.மு.க., சி.பி.எம் ஆகிய கட்சிகளின் முன்னணித் தலைவர்களுடன் சென்னை மத்தியச் சிறையில் ஓராண்டு காலத்தைக் கழித்தார் ஸ்டாலின். 1980, ஜூன் 26-ம் தேதி மதுரை ஜான்ஸி பூங்காவில் இளைஞர் அணியைத் தொடங்கிவைத்தார் கருணாநிதி. 1982-ம் ஆண்டு இளைஞரணி அமைப்பாளராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். 1984 சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாகக் களமிறங்கினார் ஸ்டாலின். ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

அரசியலிலும் வயதிலும் முதல்வர் பழனிசாமியைவிட மூத்தவர் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின். இருந்தபோதிலும், இவர்கள் இருவரும் சட்டமன்றத்தில் அடியெடுத்துவைத்தது 1989-ம் ஆண்டுதான். 1989-ம் ஆண்டு மீண்டும் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் ஸ்டாலின்.
1991 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார் ஸ்டாலின். 1991 தேர்தலுக்குப் பிறகு, இவர் போட்டியிட்ட ஐந்து சட்டமன்றத் தேர்தலிலும் தொடர்ந்து வெற்றிபெற்றிருக்கிறார். இதில் கடைசி இரண்டு முறை மட்டும் கொளத்தூரில் போட்டியிட்டிருக்கிறார். மற்ற தேர்தல்களில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டார் அவர்.
1996 சட்டமன்றத் தேர்தலில் ஜெயித்த கையோடு, சென்னை மாநகராட்சியின் மேயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஸ்டாலின். மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னையின் முதல் மேயர் ஸ்டாலின்தான்.

2001-ம் ஆண்டு மீண்டும் சென்னையின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2002-ம் ஆண்டு இரட்டைப் பதவிக்கு எதிராக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சட்டம் கொண்டுவர, மேயர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு எம்.எல்.ஏ-வாகப் பணியைத் தொடர்ந்தார்.
2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க வெற்றிபெற்றதை அடுத்து முதன்முறையாக அமைச்சர் பொறுப்பேற்றார். உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்துவந்தவர், 2009-ம் ஆண்டு துணை முதலமைச்சராகவும் பதவியேற்றுக்கொண்டார். 2011, 2016 தேர்தல்களில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ-வாகத் தேர்வானார். இதற்கிடையில், 2003-ம் ஆண்டில் தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளராகவும், 2008-ம் ஆண்டு தி.மு.க பொருளாளராகவும் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.

கருணாநிதியின் வயது மூப்புக் காரணமாக 2017-ல் தி.மு.க-வின் செயல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஸ்டாலின். 2018-ம் ஆண்டு கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு தி.மு.க-வின் தலைவரானார். தற்போது வரை தமிழகச் சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராகச் செயலாற்றிவருகிறார் மு.க.ஸ்டாலின்.
எடப்பாடி கே.பழனிசாமி
சேலம் மாவட்டம் எடப்பாடியில் பங்காளிகள் சூழ வாழ்ந்துவந்த பழனிசாமிக்குத் தொழில், வெல்ல வியாபாரம். வெல்ல வியாபாரம் செய்துவந்தாலும் அரசியலில் சாதிக்க வேண்டும் என்பது பழனிசாமியின் கனவாக இருந்திருக்கிறது. அவர் குடும்பத்துக்கும், பங்காளிக் குடும்பத்துக்கும் சண்டை ஏற்பட்டிருக்கிறது.இந்தநிலையில் பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட பழனிசாமி, பங்காளிகள் சண்டை காரணமாகத் தோல்வியைத் தழுவியிருக்கிறார்.
ஒரு தோல்வி அவரின் அரசியல் ஆர்வத்தைத் தடுத்துவிடவில்லை. தொடர்ந்து அரசியலில் சாதிக்க வேண்டுமென்பதற்காகப் பல தொடர்புகளை உருவாக்கிக்கொண்டிருந்தார் பழனிசாமி. அப்படிக் கிடைத்த தொடர்புகள் மூலம் செங்கோட்டையனைச் சந்தித்து அ.தி.மு.க-வில் தன்னை இணைத்துக்கொண்டார். கிளைச் செயலாளர் பதவியும் பெற்றார். 1987-ல் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க இரண்டாகப் பிரிந்தபோது, செங்கோட்டையனோடு ஜெயலலிதா அணியிலிருந்தார் பழனிசாமி.

1989 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு வென்றார் பழனிசாமி. எம்.எல்.ஏ-வாக முதன்முறையாகச் சட்டமன்றத்தில் அடியெடுத்து வைத்தபோபோது அவருக்கு வயது (அவர் சொன்னது போலவே) 34!
முதல் தேர்தலிலேயே வெற்றி கண்டதால் 1991 சட்டமன்றத் தேர்தலில் இவருக்கு மீண்டும் எம்.எல்.ஏ சீட் கிடைத்தது. இந்த முறை கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளைவிட 25 சதவிகித வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றிருந்தார் பழனிசாமி. கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க வலுப்பெறுவதற்கு பழனிசாமியும் ஒரு காரணமாக இருந்தார்.

ஆட்சிப் பதவியில் மட்டுமல்லாமல், கட்சிப் பதவியிலும் உயர்வு பெற்றார் பழனிசாமி. கிளைச் செயலாளராக இருந்தவர் மாவட்டச் செயலாளரானார்.
தொடர்ந்து 1996 சட்டமன்றத் தேர்தலில் தோல்வியுற்றார். 1998 நாடாளுமன்றத் தேர்தலில் எம்.பி சீட் கிடைத்தது. திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று, நாடாளுமன்றத்திலும் கால்பதித்தார் பழனிசாமி. மீண்டும் 1999, 2004 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் தோல்வியைத் தழுவினார். 2006 சட்டமன்றத் தேர்தலிலும் பழனிசாமிக்குத் தோல்வியே கிடைத்தது. தொடர் தோல்விகளால் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார் அவர்.

இதையடுத்து சசிகலா குடும்பத்தின் ராவணன் பக்கம் சாய்ந்தார் பழனிசாமி. ராவணனின் ஆதரவோடு சசிகலா, தினகரன், திவாகரன் ஆகியோரின் தொடர்பையும் பெற்றார். ராவணன் மூலம் 2011 தேர்தலில் மீண்டும் பழனிசாமிக்கு எம்.எல்.ஏ சீட் கிடைத்தது. இதன் பிறகு சசிகலா குடும்பத்தின் விசுவாசியாக மாறினார் பழனிசாமி.
2011 தேர்தலில் வெற்றிபெற்றவருக்கு, சசிகலா குடும்பத்தினர் புண்ணியத்தில் அமைச்சர் பதவியும் கிடைத்தது. ஜெயலலிதா அமைச்சரவையில் நெடுஞ்சாலைத்துறை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராகப் பணியாற்றினார். அமைச்சர் பதவி வகித்த காலத்தில்தான் சசிகலா, தினகரன் ஆகியோரது ஆதரவைப் பெற்றார் பழனிசாமி.

ஆட்சி, கட்சி என இரண்டிலும் அதிகாரம் செலுத்த ஜெயலலிதாவால் நால்வர் குழு உருவாக்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகிய நால்வரும் முதலில் இந்தக் குழுவுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கே.பி.முனுசாமி சசிகலாவை எதிர்த்த காரணத்தால் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக நால்வர் அணியில் சேர்க்கப்பட்டார் பழனியப்பன். நால்வர் அணியிலிருந்த பன்னீர் செல்வமும், நத்தம் விஸ்வநாதனும் சசிகலா குடும்பத்தினருக்கு ஆதரவாகச் செயல்படவில்லை என்பதால், புதிதாக ஒரு நபரை அந்த அணியில் சேர்க்க நினைத்தது சசிகலா தரப்பு. இதற்காக நால்வர் அணி ஐவர் அணியாக்கப்பட்டு, சசிகலா குடும்பத்துக்கு விசுவாசமாக இருந்த பழனிசாமி ஐந்தாவது ஆளாகச் சேர்க்கப்பட்டார்.
2016 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி; மீண்டும் அதே துறைகளில் அமைச்சர் பதவி என வாழ்ந்துகொண்டிருந்தவருக்கு 2017-ல் அடித்தது ஜாக்பாட்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வில் மீண்டும் பிளவு ஏற்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவை எதிர்த்து நின்றார். அந்தச் சமயத்தில் அ.தி.மு.க-வின் சட்டமன்றக்குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் எடப்பாடி பழனிசாமி. சசிகலா சிறைக்குச் செல்வதற்கு முன்பாக எடப்பாடி பழனிசாமியை முதல்வராக முன்மொழிந்துவிட்டுச் சென்றார். நான்கு மாதங்கள்கூட இந்த ஆட்சி தாங்காது என்று சொல்லப்பட்ட நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு மேலாக முதல்வராக இருந்துவருகிறார் பழனிசாமி.
ஜெயலலிதாவோடு அமைச்சர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தில், கடைசி வரிசையில் கடைசி ஆளாக நின்று கொண்டிருப்பார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், அவர் ஜெயலலிதா அமர்ந்திருந்த முதல்வர் நாற்காலியில் அமருவார் என்று எவருமே... ஏன் பழனிசாமியே எதிர்பார்த்திருக்க மாட்டார்.

வரப் போகும் சட்டமன்றத் தேர்தலில், இவர்கள் இருவரில் யார் முதல்வராக வாய்ப்பிருக்கிறது என்பதைக் காரணத்தோடு கமென்ட்டில் பதிவிடுங்கள்!