Published:Updated:

பணிந்துவந்த பன்னீர்... விடாப்பிடி எடப்பாடி... குழப்பத்தில் அ.தி.மு.க!

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்
பிரீமியம் ஸ்டோரி
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்

மேல்முறையீட்டிலும் எங்களுக்குச் சாதகமாகத்தான் தீர்ப்புவரும் என பன்னீர் தரப்பு தீர்க்கமாக நம்பிக்கொண்டிருக்கிறது. ‘இங்கும் இல்லாவிட்டால், உச்ச நீதிமன்றத்தை நாடுவோம்.

பணிந்துவந்த பன்னீர்... விடாப்பிடி எடப்பாடி... குழப்பத்தில் அ.தி.மு.க!

மேல்முறையீட்டிலும் எங்களுக்குச் சாதகமாகத்தான் தீர்ப்புவரும் என பன்னீர் தரப்பு தீர்க்கமாக நம்பிக்கொண்டிருக்கிறது. ‘இங்கும் இல்லாவிட்டால், உச்ச நீதிமன்றத்தை நாடுவோம்.

Published:Updated:
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்
பிரீமியம் ஸ்டோரி
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்

`அ.தி.மு.க-வில் கடந்த ஜூன் 23-ம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும்' என சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 17-ம் தேதி தீர்ப்பளித்த வேளையில், `அன்புச் சகோதரர் பழனிசாமி' என சமாதான அஸ்திரத்தைக் கையிலெடுத்தார் ஓ.பன்னீர்செல்வம். ஆனால், அதை வந்த வேகத்திலேயே சிதறடித்தார் எடப்பாடி பழனிசாமி. `சமாதானத்துக்கு வேலையில்லை... சட்டரீதியாகப் பார்த்துக்கொள்ளலாம்' என ஆரம்பத்தில் பன்னீர் எடுத்த அதே அஸ்திரத்தையே தற்போது எடப்பாடி பழனிசாமி கையிலெடுத்திருக்கிறார். இருவரின் இந்த மன மாற்றத்துக்குக் காரணம்தான் என்ன?

அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு... கடந்து வந்த பாதை?

அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு எதிராக பன்னீர் தொடுத்த வழக்கு ஜூலை 11-ம் தேதி காலை தள்ளுபடி செய்யப்பட, அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச்செயலாளராக முடி சூட்டிக்கொண்டார் எடப்பாடி பழனிசாமி. இந்த நிலையில், ‘எங்கள் தரப்பு நியாயம் எதையுமே தனி நீதிபதி கருத்தில் கொள்ளவில்லை. ஒருங்கிணைப்பாளரின் அனுமதியின்றி இந்தப் பொதுக்குழு நடந்திருக்கிறது. எனவே, ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது, சட்டவிரோதமானது என்று அறிவித்து அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்துசெய்ய வேண்டும்’ என உச்ச நீதிமன்றத்தை நாடினார் பன்னீர். இந்த வழக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் ஜூலை 29-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பையும் விசாரித்த நீதிபதிகள், ‘இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றமே விசாரிக்கலாம். நகல் கிடைத்த இரண்டு வாரங்களுக்குள் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும்' என உத்தரவிட்டனர். இந்த வழக்கு ஆகஸ்ட் 4-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில், ஓ.பி.எஸ் தரப்பிலிருந்து நீதிபதியை மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடப்பட்டது. இதனால் கோபமடைந்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியே இதுகுறித்துத் தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதியதன் மூலம், ஜெயச்சந்திரன் புதிய நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தொடர்ச்சியாக வழக்கு விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், கடந்த 17-ம் தேதி தீர்ப்பு வந்தது. அதில், `அ.தி.மு.க-வில் ஜூன் 23-ம் தேதிக்கு முன்பு இருந்த நிலையையே பின்பற்ற வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் நடத்த வேண்டும்' என உத்தரவிடப்பட்டிருந்தது. இதன்மூலம் எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச்செயலாளராகத் தேர்வானது, இரு தரப்பும் நியமித்த புதிய பொறுப்புகள், பலரைக் கட்சியை விட்டு நீக்கியது என எதுவுமே செல்லாது என்கிற நிலை ஏற்பட்டது. இந்தத் தீர்ப்பைப் பன்னீர் தரப்பு பட்டாசு வெடித்துக் கொண்டாட, பழனிசாமி தரப்பு படபடப்பில் ஆழ்ந்தது.

பணிந்துவந்த பன்னீர்... விடாப்பிடி எடப்பாடி... குழப்பத்தில் அ.தி.மு.க!

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை... இறங்கி வந்த பன்னீர்!

இந்தத் தீர்ப்பை மேலோட்டமாகப் பார்த்தால் பன்னீருக்குச் சாதகமாக இருப்பதைப் போலத் தோன்றினாலும், முழுமையாக அப்படி இல்லை என்பதே உண்மை. கட்சியில் பன்னீரின் ஒருங்கிணைப்பாளர் அதிகாரம் தக்கவைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், கட்சியில் பன்னீர் அதிகாரம் செலுத்த முடியுமா என்றால் இல்லை என்பதே எதார்த்தம். பொதுக்குழுவை அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் கூட்டமுடியும். அதேவேளை, ஐந்தில் ஒரு பங்கு உறுப்பினர்கள் பொதுக்குழுவைக் கூட்ட கோரிக்கை வைத்தால், 30 நாள்களுக்குள் பொதுக்குழுவைக் கூட்டியே ஆகவேண்டும். எந்தக் காரணத்தை முன்வைத்தும், அதை மறுப்பதற்கான அதிகாரம் எடப்பாடி, பன்னீர் இருவருக்குமே இல்லை. பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருக்க, அவர்கள் பொதுக்குழுவைக் கூட்ட கோரிக்கைவைத்தால் அதில் பன்னீர் கையெழுத்திட்டுத்தான் ஆகவேண்டும். ‘ஒருவேளை அவர் மறுத்தால் எங்களை நாடுங்கள், நீதிமன்றம் நியமிக்கும் ஆணையர் தலைமையில் பொதுக்குழுவை நடத்துங்கள்’ என உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

பணிந்துவந்த பன்னீர்... விடாப்பிடி எடப்பாடி... குழப்பத்தில் அ.தி.மு.க!

தீர்ப்புக்குப் பிறகு, பன்னீர் வீட்டில் மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட வழக்கறிஞர்களுடன் இதுகுறித்துத் தீவிரமாக விவாதிக்கப்பட்டிருக்கிறது. `ஒருவேளை பொதுக்குழு உறுப்பினர்கள், பொதுக்குழுவைக் கூட்ட கோரிக்கைவைத்து, நம் தரப்பில் கையெழுத்திடவில்லை என்றால் நீதிமன்றத்தில் நாம் உரிய காரணத்தைச் சொல்ல வேண்டியதிருக்கும்' என வழக்கறிஞர்கள் தரப்பு கூற, அதற்குப் பிறகுதான் பத்திரிகையாளர்களைச் சந்தித்து ``அ.தி.மு.க-வினர் அனைவரும் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். இதற்கு முன்பு நடந்த அனைத்துக் கசப்புகளையும் தூக்கியெறிந்துவிட்டு ஒன்றுபட வேண்டும்'' என இறங்கிவந்து எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்திருந்தார் பன்னீர். மேலும், கடந்த நான்காண்டுகளில் எப்படியெல்லாம் விட்டுக் கொடுத்தேன் எனப் பட்டியல் வாசித்தார். ஒருவேளை எடப்பாடி தரப்பிலிருந்து பாசிட்டிவ் சிக்னல் வராவிட்டாலும், கட்சி ஒற்றுமைக்காக நாம் இறங்கி வந்திருக்கிறோம் என தொண்டர்கள், கீழ்மட்ட நிர்வாகிகள் மத்தியில் எண்ணம் ஏற்படும்' என்பதே பன்னீரின் கணக்காக இருக்கிறது. இந்த அழைப்பு சசிகலா, தினகரனுக்கும் பொருந்துமா என பத்திரிகையாளர்கள் கேள்வியெழுப்ப, `சின்னம்மாவும் டி.டி.வி.தினகரரும் அதில் அடங்குவார்கள்' என திடீர் சின்னம்மா பாசத்தைப் பொழிந்து சாதி பேக் அப்பையும் தக்கவைத்துக்கொண்டார் பன்னீர். தவிர, இரட்டைத்தலைமை எனத் தொடர்ச்சியாகப் பேசிவந்தவர், முதன்முறையாக கூட்டுத்தலைமை என்கிற வார்த்தையையும் பயன்படுத்தியிருக்கிறார். இதற்குப் பின்னால் வைத்திலிங்கத்தின் ஆலோசனை இருப்பதாக ஓ.பி.எஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. தீர்ப்பு வருவதற்கு முன்பாகவே, `இது சமாதானத்தில்தான்முடியும், மேலிடத்தில் சொல்லியிருக்கிறார்கள்' என பன்னீர் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

என்ன நடக்கும் பார்த்துக்கலாம்... வெளுத்து வாங்கும் எடப்பாடி!

தீர்ப்பு வெளியான நாளின் காலையிலேயே எடப்பாடி ஆதரவு மாஜிக்கள் அனைவரும் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவர் இல்லத்தில் குவிந்துவிட்டனர். தீர்ப்பு வெளியான உடனேயே, மாஜிக்களில் சிலர் பதற, ஆர்டர் கையில் வரட்டும் என அவர்களுக்குச் சமாதானம் சொல்லப்பட்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்துதான், கே.பி.முனுசாமியை அழைத்து பத்திரிகையாளர்களைச் சந்திக்கச் சொல்லியிருக்கிறார் எடப்பாடி. அன்று இரவு முழுவதும், வழக்கறிஞர்கள் விஜயநாராயணன், கௌதம் உள்ளிட்டவர்களுடன் ஆலோசனையும் நடத்தியிருக்கிறார். அவர்கள், தீர்ப்பில் சாதகமாக இருக்கும் விஷயங்களை எடுத்துச் சொன்னபிறகுதான் நிம்மதியானார் எடப்பாடி. அடுத்தநாள் காலையில் பன்னீர் சமாதானத்துக்கு அழைப்பு விடுக்க, ‘இந்தமுறை நானே பதில் சொல்லிவிடுகிறேன், அதுவும் உடனடியாக’ என களத்தில் இறங்கினார். பன்னீர் 10.45-க்கு பத்திரிகையாளர்களைச் சந்திக்க, 11.45-க்கு பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் எடப்பாடி. சுற்றுப்பயணத்தின்போது போடப்பட்ட மாலையால் ஏற்பட்ட அலர்ஜி, அதனால் வளர்க்கப்பட்ட தாடி என வீட்டுக்குள்ளேயே முடங்கியிருந்த பழனிசாமி, கிளீன் ஷேவ் செய்து, மாஸ்க்கை இறக்கிவிட்டு வந்து மைக்கைப் பிடித்தார். பன்னீரின் அழைப்பை இடதுகையால் டீல் செய்து, அவர் கட்சிக்குச் செய்த துரோகங்கள் என மிக நீண்ட பட்டியலை வாசித்தார். ``அவருக்குப் பதவி வேண்டுமென்றால் அடிக்கடி அழைப்பு கொடுப்பார். அவரால் பதவி இல்லாமல் இருக்கமுடியாது. மற்றவர்களைப் பற்றி அவருக்குக் கவலை கிடையாது'' என வெளுத்துவாங்கினார். தொடர்ந்து எடப்பாடி தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற அமர்விலும் மேல்முறையீடு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளது.

அடுத்து என்ன நடக்கும்?

மேல்முறையீட்டிலும் எங்களுக்குச் சாதகமாகத்தான் தீர்ப்புவரும் என பன்னீர் தரப்பு தீர்க்கமாக நம்பிக்கொண்டிருக்கிறது. ‘இங்கும் இல்லாவிட்டால், உச்ச நீதிமன்றத்தை நாடுவோம். அங்கும் இல்லாவிட்டால் மீண்டும் ஒரு பொதுக்குழுதான். ஏற்கெனவே பன்னீர் இல்லாமல் நடந்த பட்டாபிஷேகத்தை இப்போது அவரை வைத்துக்கொண்டு நடத்துவோம்’ எனக் கொக்கரிக்கிறது எடப்பாடி தரப்பு. ஆனால், பொதுக்குழு, சிறப்புப் பொதுக்குழு, அடுத்து என்ன பொதுக்குழு எனத் தலையைப் பிய்த்துக்கொண்டு இருக்கிறார்கள் கட்சித் தொண்டர்கள். ‘‘அவசரப்பட்டுட்டாரோ இவர் (இ.பி.எஸ்), அவர்தான் (ஓ.பி.எஸ்) இறங்கி வருகிறாரே, இணைந்து போகலாமே?'' என இப்போதே எடப்பாடி ஆதரவு நிர்வாகிகளிடம், பன்னீருக்கு ஆதரவாக முணுமுணுப்புகள் தொடங்கிவிட்டன. இனி அடுத்தடுத்த நாள்களில் விறுவிறுப்பான காட்சிகள் அரங்கேறலாம்.

மக்களுக்காகக் களத்தில் நிற்கவேண்டிய தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி தங்களுக்குள் பிய்த்துக்கொண்டு நிற்பது அந்தக் கட்சிக்கு மட்டுமல்ல, ஜனநாயகத்துக்கும் நல்லதல்ல.