Published:Updated:

`அம்மா அரசு' ஓ.பி.எஸ்; `எனது அரசு' எடப்பாடி! - கொதிக்கவைத்த கொடுங்கையூர் மேடை

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பேச்சிலும், முதல்வர் எடப்பாடியின் பேச்சிலும் வித்தியாசம் அதிகமாகவே இருந்தது.

ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்.
ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்.

கழிவுநீரைச் சுத்திகரித்து குடிநீராக்கும் மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய தொடக்க விழா, இன்று சென்னை கொடுங்கையூரில் நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்த விழாவில், மேடையிலேயே ஓ.பி.எஸ்ஸும், ஈ.பி.எஸ்ஸும் வார்த்தைகளால் மோதிக்கொண்டதாகத் தொண்டர்களிடையே பேச்சு எழுந்துள்ளது.

திட்டத்தைத் தொடங்கிவைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி
திட்டத்தைத் தொடங்கிவைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி

விழாவில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “தண்ணீர் என்பது இறைவன் அளித்த வரம். 2014-ம் ஆண்டு, 110-வது விதியின்கீழ் சட்டமன்றத்தில் பேசிய மறைந்த முதல்வர் ஜெயலலிதா, ‘தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் நன்னீருக்குப் பதிலாக, மறுசுழற்சி செய்யப்பட்ட இரண்டாம் நிலை நீரை வழங்குவதற்கு அரசு ஊக்குவிக்கும்’ என்றார். 1993-ம் ஆண்டிலேயே சென்னையிலுள்ள சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து, வட சென்னையிலுள்ள தொழிற்சாலைகளுக்கு, நாளொன்றிற்கு 36 மில்லியன் லிட்டர் இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட நீர் வழங்கப்பட்டது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதில் அம்மாவின் அரசு இந்தியாவுக்கே முன்னோடியாகத் திகழ்கிறது.

இன்று தொடங்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையத்தின்மூலம், வட சென்னை, ஶ்ரீபெரும்புதூரிலுள்ள 11 பெரிய தொழிற்சாலைகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட மூன்றாம் நிலை நீரை நம்மால் வழங்க முடியும். அங்கு வழங்கப்பட்டுவந்த நன்னீரை, சென்னை மக்களுக்கு வழங்க முடியும். சென்னையில் மொத்தமாக உருவாகும் கழிவுநீரில் 20 சதவிகிதத்தை சுத்திகரிக்கும் திட்டமும் அம்மா அரசுக்கு உள்ளது” என்று மூச்சுக்கு முந்நூறு தடவை இது அம்மாவின் அரசுதான் என நிறுவிவிட்டுச் சென்றார்.

இது, அம்மாவின் அரசு என்று மட்டுமே கூறிய ஓ.பி.எஸ், ஓர் இடத்தில்கூட இது எடப்பாடியார் அரசு எனச் சொல்லவில்லை. பதிலுக்கு, ‘இது எனது அரசு, எனது தலைமையிலான அரசு, நான் ஆணையிட்டேன்’ என தனது அதிகாரத்தை நிறுவவே எடப்பாடி முயன்றார்.

அடுத்ததாகப் பேச வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஏற்கெனவே உள்ள குடிமராமத்துப் பணியுடன், நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் மேலாண்மைத் திட்டத்தையும் இணைத்துச் செயல்படுத்தப்படும் எனக் கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே நான் அறிவித்தேன். இன்று 348 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தைத் தொடங்கிவைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். தமிழக ஆறுகள் பெரும்பாலும் பருவமழையை நம்பியே உள்ளன. பொருளாதார வளர்ச்சிக்கு நீர் மேலாண்மை அவசியம். பருவமழை பொய்க்கும் காலங்களில், நீர் மேலாண்மை அவசியமாகிறது.

மழைநீர் சேகரிப்பை மக்கள் இயக்கமாக உருவாக்கியவர் அம்மா. நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கத்தை ஆகஸ்ட் 8, 2018-ம் ஆண்டு நான் தொடங்கிவைத்தேன். மழைநீர் சேகரித்தல், குடிமராமத்து மூலம் நீரைச் சேமித்தல், நிலத்தடி நீரைச் செறிவூட்டுதல், மறுசுழற்சி முறையில் நீரைப் பயன்படுத்துதல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்தத் திட்டத்தின்மூலம், எதிர்வரும் பருவமழையில் நீர் மிகுதியாகச் சேமிக்கப்படும். அடுத்த தலைமுறைக்குத் தேவைப்படும் நீரைவிட்டுச் செல்ல வேண்டுமென்பதே என்னுடைய நோக்கம்” என்று தன்னுடைய ஆளுமையை நிலைநிறுத்த முயன்றார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பி.எஸ்ஸின் பேச்சிலும், எடப்பாடியின் பேச்சிலும் வித்தியாசம் அதிகமாகவே இருந்தது. இது, அம்மாவின் அரசு என்று மட்டுமே கூறிய ஓ.பி.எஸ், ஓர் இடத்தில்கூட இது எடப்பாடி அரசு எனச் சொல்லவில்லை. பதிலுக்கு, ‘இது எனது அரசு, எனது தலைமையிலான அரசு, நான் ஆணையிட்டேன்’ எனத் தனது அதிகாரத்தை நிறுவவே எடப்பாடி முயன்றார்.