Published:Updated:

`ஸ்டாலின் போட்ட திட்டமெல்லாம் வீணாகிவிட்டது!'- வேட்பாளர்களுக்கு எடப்பாடியின் உள்ளாட்சி அலர்ட்

எடப்பாடி பழனிசாமி

``மக்களுக்கு சேவை செய்வதற்காகவே நாம் இருக்கிறோம். வயதானவர்களைப் பார்த்தால் அவர்களின் காலில் விழுந்து வாக்கு கேளுங்கள். நம்முடைய அரசு செய்த சாதனைகளைக் கூறுங்கள்"

`ஸ்டாலின் போட்ட திட்டமெல்லாம் வீணாகிவிட்டது!'- வேட்பாளர்களுக்கு எடப்பாடியின் உள்ளாட்சி அலர்ட்

``மக்களுக்கு சேவை செய்வதற்காகவே நாம் இருக்கிறோம். வயதானவர்களைப் பார்த்தால் அவர்களின் காலில் விழுந்து வாக்கு கேளுங்கள். நம்முடைய அரசு செய்த சாதனைகளைக் கூறுங்கள்"

Published:Updated:
எடப்பாடி பழனிசாமி

உள்ளாட்சித் தேர்தல் வியூகம் குறித்து நேற்று இரவு அ.தி.மு.க வேட்பாளர்களிடம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ` பொங்கல் இனாமாக ரூ.1,000 கொடுக்க இருக்கிறோம். இந்தப் பணத்தை வாங்குவதற்காக நீங்கள் யாரும் போய் வரிசையில் நிற்க வேண்டாம்' எனவும் எச்சரித்திருக்கிறார் முதல்வர்.

ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி
ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை சேலம் வந்தார். அங்கிருந்து பயணியர் மாளிகைக்குச் சென்றார். அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மனுக்களை கொடுத்தபோது,`அதிகாரிகளிடம் கொடுத்துவிடுங்கள். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கிறது' எனக் கூறிவிட்டுச் சென்றார். பின்னர், மாலையில் சேலம் நெடுஞ்சாலை நகரில் இருக்கும் வீட்டில் உள்ளாட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

சேலம் மாவட்டத்தில் உள்ள 20 ஒன்றியங்களிலிருந்தும் வேட்பாளர்கள் குவிந்திருந்தனர். ஒவ்வொரு யூனியனிலும் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களைத் தனித்தனியாக அழைத்துப் பேசினார். ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் 5 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டன. அப்போது பேசிய முதல்வர், `உள்ளாட்சித் தேர்தலை நடத்தவிடக் கூடாது என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருந்தார். அவர், 2016ம் ஆண்டில் தேர்தலை நடத்தவிடாமல் செய்தார். இதனால், கடந்த 3 ஆண்டுகளாகத் தேர்தல் நடத்தப்படவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இப்போதும் நீதிமன்றத்துக்குச் சென்று இடையூறு கொடுக்க நினைத்தார். தேர்தலை நடத்துவதில் அவர்களுக்கு உடன்பாடில்லை என்பதையே இது காட்டுகிறது. அவரால் எதுவும் முடியவில்லை. இதைப் பற்றி வாக்காளர்களிடம் எடுத்துக் கூறுங்கள். மக்களுக்கு சேவை செய்வதற்காகவே நாம் இருக்கிறோம். வயதானவர்களைப் பார்த்தால் அவர்களின் காலில் விழுந்து வாக்கு கேளுங்கள். நம்முடைய அரசு செய்த சாதனைகளைக் கூறுங்கள். வரும் 20-ம் தேதி முதல் பொங்கல் இனாமாக ரூ.1,000 தர இருக்கிறோம். சொசைட்டிகளில் பணம் கொடுக்கும் பணிகள் நடக்கும். பணம் வருகிறதே என ஆர்வத்தோடு போய் நீங்களும் வரிசையில் நின்றுவிடாதீர்கள். இந்த நேரத்தில் அது தேவையற்ற விமர்சனங்களை ஏற்படுத்திவிடும். அனைத்து இடங்களிலும் நாம் வெற்றி பெற வேண்டும். ஒவ்வொரு ஓட்டுகளையும் கண்ணும் கருத்துமாக வாங்கப் பாருங்கள். அடுத்தமுறை நான் உங்களைப் பார்க்கும்போது கவுன்சிலராகத்தான் பார்க்க வேண்டும்' என உருக்கமாகப் பேசி அனுப்பி வைத்தார்.

அ.தி.மு.க தலைமை அலுவலகம்
அ.தி.மு.க தலைமை அலுவலகம்

எடப்பாடியின் உள்ளாட்சி வியூகம் குறித்து நம்மிடம் பேசிய தலைமைக் கழக நிர்வாகிகள் சிலர், ``பாட்டாளி மக்கள் கட்சி, தே.மு.தி.க, பா.ஜ.க, புதிய தமிழகம் எனக் கூட்டணிக் கட்சிகளுக்கு வேண்டிய இடங்களை ஓரளவுக்கு ஒதுக்கிவிட்டார் முதல்வர். அதில், அவர்கள் முகம் கோணாத அளவுக்கே இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதில், பாட்டாளி மக்கள் கட்சிக்கு சேலம் உட்பட அவர்கள் வலுவாக இருக்கும் மாவட்டங்களில் 15 சதவிகித இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் போட்டியிடும் 20 பேரில் 3 பேர் பா.ம.க சார்பில் போட்டியிடுவார்கள். இதேபோல்தான் ஒன்றிய கவுன்சிலர் பதவிகளும். இதன் காரணமாக எந்தவித வருத்தங்களும் எழவில்லை. விஜயகாந்த் கட்சிக்கு 10 சதவிகித இடங்களையும் பா.ஜ.க-வுக்கு 5 சதவிகித இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கு அந்தந்த மாவட்டங்களில் உள்ள செல்வாக்கின் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன" என விவரித்தவர்கள்,

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`` கூட்டணிக் கட்சிகளுக்கு ஓரளவுக்கு இடங்களை ஒதுக்கினாலும், பெரும்பான்மையான இடங்களில் அ.தி.மு.க போட்டியிட இருக்கிறது. அப்படிப் பார்த்தால் 70 சதவிகித இடங்களில் அண்ணா தி.மு.க களமிறங்க இருக்கிறது. இதன்மூலம் 18 சதவிகிதமாக இருக்கும் அ.தி.மு.க வாக்குவிகிதத்தை 30 சதவிகிதமாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளார் முதல்வர். கூட்டணியில் பா.ஜ.க இருந்தாலும் ஒன்றுதான்...இல்லாவிட்டாலும் ஒன்றுதான் என்ற மனநிலையில் சீனியர் நிர்வாகிகள் உள்ளனர். அதனால்தான் மற்றவர்களைவிடவும் குறைவான இடங்களே அந்தக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் முடிவெடுக்கக் கூடிய அதிகாரம் பன்னீர்செல்வத்துக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த மாவட்டத்தில் தங்க தமிழ்ச்செல்வன் தி.மு.கவுக்குச் சென்றதால் குறிப்பிட்ட சமுதாய வாக்குகள் தி.மு.க பக்கம் செல்லலாம் எனவும் சொல்லப்படுகிறது.

பன்னீர்செல்வம்
பன்னீர்செல்வம்

தவிர, சசிகலா குறித்து பன்னீர்செல்வம் பேசியதால் அங்குள்ள ஒரு சமுதாய மக்கள் பன்னீர்செல்வத்துக்கு எதிராக உள்ளனர். புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகளும் துணை முதல்வர் மேல் கடும் கோபத்தில் உள்ளனர். இதைக் கணக்கிட்டுப் பார்த்தால், உள்ளாட்சித் தேர்தலில் கடும் சவாலை துணை முதல்வர் எதிர்கொள்ள நேரிடும். உள்ளாட்சியில் பெறக் கூடிய கூடுதலான வாக்கு விகிதம், அடுத்து வரக் கூடிய தேர்தலுக்கும் அச்சாரமாக அமையும் எனத் திட்டமிடுகிறார் முதல்வர்" என்கின்றனர் விரிவாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism